எங்கள் தேசம்
மலர்ந்துகொண்டிருப்பதாக
சிலர் சொல்கிறார்கள்நாங்கள்
மடிந்துகொண்டிருப்பது
தெரியாமல்...
வசந்தம்
வீசத்தொடங்கியிருப்பதாக
வாழ்த்துப் பாடுகிறார்கள்
நாங்கள்
புயலுக்குள் சிக்குண்டு
புதைந்து போவது
தெரியாமல்...
இழப்புக்களை
ஈடுசெய்யப்படுவதாக
பறையடிக்கிறார்கள்
நாங்கள்
இழந்தவைகளை
இனிமேலும் பெறமுடியாதென்று
தெரியாமல்...
மீண்டுமொரு புதுவுலகை
எமக்கு
தந்திருப்பதாய் மகிழ்கிறார்கள்
நாங்கள்
தாய்மண்ணை இழந்துவிட்டு
தவித்துக்கொண்டிருப்பது தெரியாமல்...
இனிமேல்
எமக்கான மீட்பர்களாய்
நாமுள்ளோமென
புகழுரைக்கிறார்கள்
நாங்கள்
அவலச் சிலுவைகளை
சுமந்துகொண்டிருப்பது
தெரியாமல்...
மன்னிக்க வேண்டும்
மீட்பர்களே!
உங்களால் எம்துயரை
தீர்க்க முடியாது போனால்
போகட்டும்
எம்மீது திணித்த
பாவச்சிலுவைகளையேனும்
எடுத்து விடுங்கள்
நாங்கள் நாங்களாகவே
எமக்கான
இடர்களை நீக்கி
எழுந்து கொள்கிறோம்
இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

எழுந்துவிடுவோம் என்ற நம்பிக்கை உங்களிடம் இருப்பதால் நீங்கள் தமிழரென்று ஒப்புக்கொள்கிறேன் .
பதிலளிநீக்குசந்தக்கவி.சூசைப்பாண்டி.
www.kalanchiyem.blogspot.com
நான்
பதிலளிநீக்குமுட்கம்பிகளுக்குள் இருந்துகொண்டும்
தமிழனுக்கு
முகவரி தேடி
கவி பாடியவன்....
என் இரத்தத்தில்
நிறைந்திருப்பது
என் தாய்.....
தமிழ்த் தாய் தந்த பால் என்பது
நினைவிருக்கட்டும் நண்பர்களே!