திங்கள், 7 நவம்பர், 2011



ஊமையான என் உயிர் வலிகள்
..........................................................................

உன் ஒற்றைவரி வார்த்தைக்காய்
என் மனம்
மௌனவிரதமிருப்பதை அறிவாயோ?
உன் நேசமான பார்வைக்காய்
என்விழிகள்
பாசத்தோடு பார்த்திருப்பது புரிகிறதா?
உன் உறவுக்காய்
என் உள்ளமும் உயிரும்
பூத்திருப்பதை உணர்கிறாயோ?
என் மௌனமான தவிப்புக்கள்
உன் மனதுக்கு புரியாது தான்...!!
பேசும் காதலே தோற்றுப் போகையில்
ஊமையான என் உயிர் வலிகள்
உனக்கு புரிவது சந்தேகம் தான்......

இராமசாமி ரமேஷ், 

ஞாயிறு, 24 ஜூலை, 2011

சிறை பிடிக்கப்பட்ட கனவுகள்....


கனவுகள் திருடப்பட்டு
காலத்தின் கரங்களில்
கட்டாயப்படுத்தப்பட்டு
கைதியாக்கப்பட்டுப் போனேன்....
ஆற்றுவதற்கும் தேற்றுவதற்கும்
யாருமேயின்றி அனாதையாக நகர்கிறது
எனது பொழுதுகள்.....

சுகங்கள்

யாருடையதோ
சுரண்டலில்
அபகரிக்கப்பட்டதும்
நியங்கள் கானல்களாகி
எனக்காக எதுவுமேயின்றி
காணாமல் போயின
உரிமைகள் எனைவிட்டு வெகுதூரமாய்....

விரக்தியின் விளிம்பில்

விழித்துக் கொள்கிறேன்
தூங்குகின்ற பொழுதுகளில்கூட......!!

வண்ண வண்ணமாய் 

என் தேசத்தில் வருமென
நான் எதிர்பார்த்த தருணங்கள்
சுடுகாட்டில் கருக்கப்பட்ட
பூச்சரமாய்
இருட்டடிப்புச் செய்யப்பட்டு
இரும்புக் கரங்களுக்குள்
இறுக்கப்படுகின்றன...........

வயது வந்துவிட்டதால்

வாலிபமே என் வாழ்க்கைக்கு
வலியாகிப் போனது.....
தங்கக் கூண்டில்
தடுமாறும் பறவையாக
வசதிகள் கொட்டிக் கிடந்தும்
வெளி வாழ்க்கைக்கு
வழி பார்க்கின்ற
என் விழிகளின் கனவுகளை
யார்தான் புரிந்துகொள்வார்களோ....??

                                                   இராமசாமி ரமேஷ்,
                                                        அளம்பில்.
 



செவ்வாய், 12 ஜூலை, 2011

நம் காதலுக்கு சாட்சியாக....


நீ என்னை புரிந்து கொள்வதற்குள்
நான் புதைந்து போனாலும்
அந்த மக்கிப் போன மண்கூட
உன் மடியை மட்டுமே தேடும்
நம் காதலுக்கு சாட்சியாக......
நிரோஷா தியாகராசா

செவ்வாய், 5 ஜூலை, 2011

தாய் மண்ணே!! இது தலைவிதியா??


எனது வாழ்க்கைப் புத்தகத்தில்
பிறப்பு முதல்
வளமோடு வாழ்ந்து
ஏதுமற்ற ஏதிலிகளாய்
இடம்பெயர்ந்து ஓடியவரை
உன் மடிதானே புகலிடமாய்
என்னுடைய தாய் மண்ணே......!!

பசுமையாகக் கிடந்த

வளமான எனது தாய்மண்
வாடிப் போய்க்கிடக்கிறது
அபிவிருத்தி என்னும் வசந்தத்தை
எதிர்பார்க்கும் இலையுதிர்காலமாய்....

கிட்டியும் கிளித்தட்டும்

நாமாடிய திடல்களிளெல்லாம்
பச்சை உறைப்பை மூட்டைகளோடு
கறுப்பு  உருவங்கள் முகாமிட்டு
எங்கள் சுதந்திரக் காற்றை
சுவீகரித்துக் கொண்டிருக்கின்றன....

சந்திகளில் சகாக்களோடு

நினைவுகளை மீட்டியபடி
நாம் களித்த பொழுதுகளை
சட்டித் தொப்பிகள்
சல்லாபப் பார்வைகளோடு
வெட்டி வீசி எறிந்துவிட்டன..............

வயல்கள் வரம்புகள்

தோப்புகள் துரவுகள் என
எங்கள் இளமை மலர்ந்த
இடங்களில் கூட..............
நாங்கள் இப்போது அந்நியர்களாக
அழைத்துப் போகப்படுகின்றோம்....

எங்கள் தேசத்தில்

ஆலயங்களுக்கு ஆண்டவனைத்
தேடித் போனால் கூட
தொடாத   அவயங்களையும்
தொட்டுத்  தடவிப் பார்க்கின்றார்கள்
தேசத் துரோகம் செய்துவிடுவோமென்று........

சமாதானம் மலர்ந்து

பூத்துச் சிரிப்பதாக பூரிக்கிறார்கள்
எங்களின் புன்னகையையும்
உரிமைகளையும் பறித்து
தமது அரையில் கட்டியபடி.......!!

இராமசாமி ரமேஷ்
அலம்பில்.









திங்கள், 4 ஜூலை, 2011

வரப் போகும் மீள்தளுக்காய்.....


பிறந்ததிலிருந்து
பிரிவின் வழிகளை நீயும்
சுவைக்கத் தொடங்கிவிட்டாய்..
உணவு
நம் பசிபோக்குவது போல
பிரிவு நம் உயிர் குடிக்கிறது....

போர் செய்த கொடுமையால்

குடும்பத்தைப் பிரிந்து
நண்பர்களைத் துறந்து
கானகமே வாழ்வானது
உனது பதினெட்டில்......

வாழ்வைத் தின்னும்

அதிகார கொள்ளையர்களால்
முட்கம்பிகளுக்குள்ளும்
மீளாத சோகங்களுக்குள்ளும்
சிக்கி.... காட்டில் எறித்த நிலவாக
காய்கிறது உன் இளமை
இருபத்தொன்றில் தோழானே!!

நமது உறவுகளின்

இரத்தமும் தசைத் துண்டங்களும்
மிதிபட ஓடிவந்தோம் ....
வெயிலும் மழையும்
வறட்சியும் புழுதியும் அரசாட்சி செய்யும்
அக(வ)தி முகாமினுள்.......

ஓடிவந்து ஓயமுன்னர்

ஒலிபெருக்கி அறிவித்தல்.....
புலிகளாய் இருந்தவர்கள்
புனர்வாழ்வுக்காய் வாருங்கள்
நல்லதொரு எதிர்காலம்
உங்களுக்காய் காத்திருக்கிறது......

உனக்கு மீண்டும் தொடங்கியது அவலம்

வந்து சேர்ந்தாய் புனர்வாழ்வு நிலையம் !!

விடுதலை என்னும்

ஒற்றைச் சொல்லை எதிர்பார்த்து
ஒன்றல்ல!! இரண்டல்ல!!
மூன்று வருடங்கள் முடிந்து போயும்
இன்னும் வரவில்லை உனக்கான பதில்....

கலங்காதே... என் நண்பா!!

ஏதேதோ நடந்தும் எதுவுமே
உன்வாழ்வின்   ஏக்கத்தைத் தீர்க்கவில்லை
இருந்தாலும் என்னவனே...
காத்திரு எதிர்பார்த்து!!
உனக்கென வரப்போகும் மீள்தளுக்காய்...........!!








வியாழன், 9 ஜூன், 2011

முல்லைத்தீவிலிருந்து முதன்முதலாக
முழு உலகெங்கும் ஒலித்துக்கொண்டிருக்கும்
சஞ்ஜீவ ஒலியில் இணைந்திருந்து
உங்களுக்காக இருபத்துநான்கு மணிநேரமும்
இசைபுரட்சி படைக்கின்ற வானொலிக் குடும்பம்....

இருப்பவர்களில் இடமிருந்து வலமாக சஞ்ஜீவ ஒலியின் நிகழ்ச்சி முகாமையாளர் சாந்தி இராசலிங்கம், வானவில் மீடியா நெட்வொர்க் மற்றும் சஞ்ஜீவ ஒலி இணைய வானொலியின் நிர்வாகப் பணிப்பாளர் மயில்வாகனம் செந்தூரன், வானொலி ஆலோசகர் கிருஷ்ணபிள்ளை தவராசா, பணிப்பாளர் கிருஷாந்தி சிவகுரு, அலுவலக முகாமையாளர் நிஜாந்தினி,
நிற்பவர்களில்...இடமிருந்து வலமாக....
அறிவிப்பாளர்களான இராமசாமி ரமேஷ், பாலகிருஷ்ணன் திலகானந்தம்,விக்னேஸ்வரன் சகுந்தலா, குலசிங்கம் கலையரசி, சுரேஷ் ரஞ்சினி, ரோமிலா, ஜெயப்பிரதா மாணிக்கவாசகர், அனுஷா கணேசலிங்கம், மற்றும் காந்தன்..............,,,,,,,,,,,,,
 

எமது வானொலியில் நான் செய்கின்ற நிகழ்ச்சி..... (நிலாத்தூறல்.........)

www.sanjeevaoli.com
இதயங்களை வருடுகின்ற
இனிய இடைக்காலப் பாடல்களோடும்...
பாடல்களுக்குப் பொருத்தமான அழகிய கவிவரிகளோடும்....
இணையம் வழியாக இதயங்களோடு கதைபேசும்
சஞ்ஜீவ ஒலியில்.....
நிலாத்தூறல் நிகழ்ச்சியோடு இணைந்திருக்கிறார்
உங்கள் அன்புக்குரிய ரமேஷ்....

ஞாயிறு, 15 மே, 2011

எனது அறைகூவல்



என்
உடம்பைத் தின்ற
மனிதர்கள் தான் -இப்போது
என் பெண்மையைப் பற்றி
விமர்சிக்கிறார்கள் ...

என்னை
அங்குலம் அங்குலமாக
அனுபவித்தவர்கள் தான்
நான் வேசி என
விபரிக்கிறார்கள்.....

எனது
அதரங்களையும்
அந்தரங்கங்களையும் அணைத்து
போதையில் மிதந்தவர்கள் தான்
என்னை -நடத்தை கெட்டவள் என்று
நக்கலடிக்கிறார்கள் ...........

நானே சொர்க்கமென
நாளாந்தம் வந்து போனவர்கள்தான்
எனக்கு பலவிதமான
பட்டப் பெயர்களை
பரிசளித்து மகிழ்கிறார்கள்.......

என்னை அணைத்து
உடலை நுகர்ந்து
என் இளமையையும் வாழ்க்கையையும்
கொள்ளையடித்த கொள்ளைக்காரர்களே
இன்று-என்னை
கொல்லப்போவதாய்
கோஷமிடுகிறார்கள்.......................

அரசியல்வாதியிலிருந்து
அன்றாடங் காய்ச்சி வரை
ஆடையிழந்து என் முன்னே
நிர்வாணமாய் கிடந்தவர்கள்
என்னை துயில் உரிந்து
துரத்துவதற்கு திட்டமிடுகிறார்கள் .............

சமூகமே சமூகமே !!
உங்களில் ஒருவன்
ஒருத்தியோடு வாழ்பவன்
ஒருவர் வந்து சொல்லுங்கள்
உடனடியாய் நானும்
ஊரைவிட்டுப் போகிறேன்..........
   இராமசாமி ரமேஷ்
    அளம்பில்.

சனி, 14 மே, 2011

நம்பிக்கையில்லாப் பிரேரணை...


ஐநா சபையில்
அங்கம் வகிக்கும்
அதிபதிகளுக்கு வணக்கம்

சேவை செய்கிறோமென
கோஷமிடும் உங்களுக்கு
வன்னி மக்கள் அவலக்குரல்
வரவில்லையோ காதோரம்...?

பிரிவுகளை இணைக்கிறோமென
அறிக்கைவிடும் உங்களுக்கு
துண்டாடப்பட்டிருக்கும் வன்னிமக்கள்
துயர்வாழ்க்கை தெரியலையோ...??

போர்முடிந்து
பலநாட்கள் கடந்தும்
ஊர்போக முடியாமல்
முகாம்களே தஞ்சமென
ஊமைகளாய் வாழும் மாந்தர்
உயிர்வலிகள் புரியலையோ..??

காப்புவலயங்களில்
தமதுயிரைக் காவுகொடுத்து
எறிகணைகளின் பசிக்கு
தம்மையே இரைகொடுத்து
எஞ்சியவைகளோடு ஓடிவந்து
ஏமாறும் மக்கள் இடர்
ஒருபோதும் தெரியாதோ...??

தீர்க்கிறோம் தீர்க்கிறோமென
நீங்கள் தீர்த்தவைகளெல்லாம்
எங்கள் உயிர்களையும்
உரிமைகளையும் உடமைகளையும் தான்!
நீங்கள் தீர்க்கவந்த விடயங்கள்
நாட்டின் தேநீர்விருந்தோடு
கரைந்து போவது
நாம் காண்கின்ற சங்கதிதானே...!

ஆணைக்குழுக்களின்
அறிக்கைகளில்கூட
அசட்டைசெய்யும் உங்கள் குணம்
அடுத்த அழிவின்
ஆரம்பத்திற்கு அடிக்கல்லாவதை அறிவீரோ...??

பிழைகளைத் திருத்தும் நீதியே...!
இப்போது உபசாரத்திற்குள்
உண்மைகளைப் புதைப்பதால்
முட்கம்பிவேலிகள் ஆரவாரிக்கின்றன
இரத்தக்கறைகளுடன் எமைப்பார்த்து!!

அதிகாரம் கொண்ட அதிகாரிகளே!!
பாராமுகமாய் எங்களில் மட்டும்
பாரச்சிலுவையைச் சுமத்தாதீர்கள்

நாங்கள் சீரழிந்து
சிதைந்து கெட்டுப்போனவர்களல்ல!
வளமோடு வாழ்ந்து
வறுமையாக்கப்பட்டவர்கள்!!

இனியேனும் எம்மை
ஏமாற்றி நழுவாமல்
நாம் மலர உதவுங்கள்
எம் இடரைப் போக்குங்கள்...
கடுகதியில் நாம் எழுவோம்
வன்னி மண் வளமாகி
வந்திடும் இன்னுமொரு
வளர்ச்சி மிக்க தேசமாய்...!!

  இராமசாமி ரமேஷ்
    அளம்பில்.

புதன், 2 பிப்ரவரி, 2011

என் காதலியே!


என் காதலியே!
இப்போது எப்படி
நீ
உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறாய்?
 
எனக்கென என்று நீ

தந்துவிட்டுப்போன இதயம்
என்னிடம் இருக்கிறது
நீயோ....பொரினில்
உன் பணக்காரக் கணவனோடு
பந்தாவாக வாழ்கிறாய்
இருப்பினும்
உன் இதயம் என்னிடம்
பத்திரமாக இருக்கிறது
என் உண்மைக் காதலின் சாட்சியாய்...

திங்கள், 31 ஜனவரி, 2011

காதலர்தின சிறுகதை                                        
                          ராதையடி நீ எனக்கு...!
            
'மிஸ் ப்ரியங்கா! நந்தகியை வரச்சொல்லுங்க..." என்ற விஷ்ணுவிடம், 'சேர்! இன்றைக்கு நந்தகி ஓபீஸ்க்கு வரலை..." என்றாள் பிரியங்கா. 'ஓ! அப்படியா? ஓ.கே..." அவனது முகமும் உள்ளமும் அந்தப் பதிலால் சோர்ந்தன. இத்தனை நாட்களாய் கொஞ்சம் கொஞ்சமாய் சேமித்து மூடிவைத்து வளர்த்த காதலை, துணிவு இல்லாமல் நந்தகியிடம் அவன் இதுவரை சொல்லவில்லை. இன்றாவது சொல்லி அவளது விருப்பத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்றால், 'ச்சே! அதுவும் முடியாமல் போய்விட்டதே! நான் அதிஷ்டமே இல்லாதவன்" தன்னைத்தானே நொந்து கொண்டவனுக்கு  அன்றைய பொழுதின் வேலையே ஓடவில்லை. செய்து முடிக்கவேண்டி வேலையை திருப்தியாகச் செய்யாமல் ஏனோ தானோவென்று கிறுக்கிக்கொண்டிருந்தான்.  கையெழுத்துக்கூட கோணலாகிப் போனதாகவே தோன்றியது.
மதியம் உணவு இடைவேளையின்போது சிலவேளை அவள் வரக்கூடும் அல்லவா? ஏதாவது அவசரமான வேலை இருந்திருக்கும். அதனை முடித்துவிட்டு மதியம் வரக்கூடும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். மணி இரண்டைத் தாண்டியும் அவள் தரிசனம் இவனுக்குக் கிடைக்கில்லை. வேதனைதான். என்ன செய்வது? மறுநாள் இருக்கிறது தானே என்பதால் அன்றைய பொழுதை சபித்தான்.
மறுநாள்...
நிலவைக் கண்டவுடன் உவகையோடு மலர்கின்ற அல்லிப்ப+க்களைப் போல, மனசு முழுவதும் ஒருவித சந்தோசம் கலந்த படபடப்போடு காலையில் அலுவலகத்துக்கு வந்தான் விஷ்ணு.
  அவன் படித்து முடித்துவிட்டு   வேறு எங்கும் தொழில் பார்ப்பதைவிட, தனது கம்பனியையே நிர்வகிக்கட்டுமே என
விஷ்ணுவின் தந்தை ராஜாராம், தனது வயது முதிர்வைக் காரணம்காட்டி மகனிடம் அலுவலகத்தை பொறுப்பெடுத்து வேலைசெய்யும்படி விண்ணப்பித்திருந்தார். அவனோ, 'இத்தனை பெரிய கம்பனியை... நான் ஒருவன் எப்படி தன்னந்தனியாக  நிர்வகிக்க முடியும்? இது என்னால் முடியாது அப்பா..." என்று மறுப்புத் தெரிவித்தான். இருந்தும், ராஜாராம் தொடர்ந்தும் நச்சரித்துவர விஷ்ணுவால் ஏற்காமல் இருக்கமுடியவில்லை. 'ஓகேப்பா! ஆனால்... ஒரு கண்டிஷன். என்னால அதை முழுமையா ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஓபீசுக்கு போறேன். அங்குள்ள வேலைகளையும் பாத்துக்கிறேன். இருந்தாலும்... நீங்க வீட்டிலயிருந்து என்னோட வேலைகளை சரிபார்க்கணும். ஏன்னா... நான் இதில அனுபவம் இல்லாதவன் டாடி" அவன் வைத்த கோரிக்கையை சந்தோசமாக ஏற்றுக்கொண்டார் ராஜாராம். இதை ஏற்றுக்கொள்ள சம்மதிக்கவைத்தது போலவே, வெகுசீக்கிரமே இவனுக்கொரு கல்யாணத்தையும் நடத்திவிட வேண்டுமென எண்ணிக்கொண்டார்.
பாடசாலை, கல்லூரி, பட்டப்படிப்பு என விஷ்ணு எத்தனையோ சூழலில் வாழ்ந்திருந்தாலும், ஏனோ அவன் காதல் என்கிற பாதையில் பயணிக்க விரும்பவில்லை. காதல் அவனுக்கு கசப்பானதாகவோ அல்லது ஏமாற்றமளித்த ஒன்றாகவோ காணப்படாத போதும், நட்புக்குக் கொடுத்த முக்கியத்துவத்தை அவன் காதலுக்குக் கொடுக்கவில்லை.
'வசதி,வாய்ப்புக்கள் உள்ள உனக்கு... ஏன்டா காதலிக்கப் புடிக்கலை? " இப்படி எத்தனையோ நண்பர்கள் அவனிடம் கேட்டபோதெல்லாம், 'டேய்! காதல் வசதிக்காக வர்றது கிடையாது. எனக்கு ஏனோ... அதுல இன்ரஸ்ட் இல்லைடா..." இப்படியே சொல்லி தப்பித்துவிடுவான்.
வசதி,வாய்ப்புக்கள் ஏராளமாய் அவனிடத்தில் கொட்டிக்கிடந்தும் அவைகளை நாடாமல் இந்த இளைய வயதிலேயே ஆசைகளைத் துறந்தவனாக காதலுக்கு வெகுதூரத்திலேயே இவனது வாழ்க்கைப் பயணம் நகர்ந்துகொண்டிருந்தது.
    இந்தக் காலப்பகுதியில் தான், தந்தையார் அலுவலகப் பொறுப்பை இவனிடத்தில் ஒப்படைத்தார். தனது வாழ்வில் ஏதோ ஒன்றை இழந்துவிட்ட ஏக்கம் அவன் ஆழ்மனதில் பதுங்கியிருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்வதில்லை. தன்னால் அலுவலகத்தையும் அங்கு பணிபுரியும் அனுபவசாலிகளையும் எப்படி நிர்வகிக்க முடியும்?என்ற கேள்வி அவனுக்குள் இருந்தாலும், தந்தையின் இயலாமையை எண்ணி பொறுப்பை வாங்கிக்கொண்டான்.
அவனுக்கு முதன்முதலாக அலுவலகத்தில் உள்ள அத்தனை ஊழியர்களையும் அறிமுகப்படுத்தினார் தந்தை. இனிமேல் தன்னோடு ஒன்றாகப் பணிபுரியவேண்டியவர்கள் என்பதினால், அத்தனைபேரையும் உண்மையாகவே நினைவில் நிறுத்திக்கொண்டு நலம் விசாரித்துக்கொண்டிருந்தான். அப்போதுதான்  நந்தகி அவன்முன்னால் தோன்றினாள். ஏற்கனவே, சிலதடவைகள் இங்கே அவன் வந்திருந்தாலும், அப்போது அவளைப் பார்த்தாய் நினைவிருக்கவில்லை.
'விஷ்ணு! இது நந்தகி! நம்ம மனேஜர் பத்மசீலனோட பொண்ணு. அவருக்கு பாரிசவாதம் நோய் தாக்கியிருக்கிறதால... நந்தகிதான் இனி அவரோட கடமைகளைச் செய்வா." 'நந்தகி! இது விஷ்ணு..."  மரியாதையோடு அவனை நோக்கிய அவள், 'வணக்கம் சேர்!" சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு தன் பணியினுள் ஆழ்ந்துபோனாள். அவனும் அந்தக்கணத்தில் எதையுமே நினைவில் கொள்ளாவிட்டாலும், அந்தப் பெயரைமட்டும் தனது ஞாபகப் பொக்கிஷங்களோடு பொறித்துக்கொண்டான்.
முதன்முதல் கடமையை ஏற்றுக்கொண்ட அந்தநாள், ஒருவாறு தனது ஆயுளை முடித்துக்கொள்ள அடுத்தநாள் அலுவலகம் விரைந்தான். அலுவலகத்தை அடைந்ததும், ஏனோ மனசும் விழிகளும் நந்தகியைத்தேடி ஓடின. கடைக்கண்ணால் நோட்டமிட்டான். நந்தகி இருக்கிறாள் என்பதை உறுதிசெய்துகொண்டு தனது வேலைக்குள் நுழைந்துகொண்டான். தன் வாழ்நாளிலேயே இதுவரை எதைப்பற்றியும் அலட்டிக்கொள்ளாத அவன் நினைவுகள், நித்தமும் நந்தகியின் நிழலோடு பேசத்தொடங்கின. அவளை தேவைப்படாத சந்தர்ப்பங்களில் எல்லாம் அழைத்தான். அதிகமாய் பேசவும் அச்சம் அவனைத் தடுத்துவிடும். இருந்தாலும், அலுவலக விடயங்களுக்காக பேசிக்கொள்ளும்போது அவளது தனிப்பட்ட விபரங்களையும் தெரிந்துகொள்ளத் தொடங்கினான்.
தனக்கு சம்பளம் கொடுக்கின்ற முதலாளி என்ற ரீதியிலும், தனக்குப் பெரியவன் என்பதினாலும், நந்தகி பணிவோடும் மரியாதையோடும் நடந்துகொண்டாள். அளவுக்கதிகமாகவும் அவன் பேசுவதற்கு அவள் இடமளிப்பதில்லை. கடைசியில் அவளது இத்தகைய குணங்களே, அவனது மனதில் காதல்ச்செடி முளைத்து             மொட்டவிழ்க்க காரணமாய் அமைந்தன.
எப்போதும் காலை பத்துப் பதினொரு மணிக்கு அலுவலகம்வரும் அவன், தன் காதல்ப+ ப+க்கத்தொடங்கியதிலிருந்து காற்றாய் மாறினான். எட்டுமணியானால் அலுவலகத்தில் ஆஜராகியிருப்பான். ஈடுபாடில்லாமல் எதையாவது உடுத்தால் போதுமென வாழ்ந்தவன், அவளுக்குப் பிடிக்கின்ற விதங்களில் அவளைப்போலவே எளிமையாக அணியத்தொடங்கினான். சின்னச் சின்ன விடயங்களிலும்
 அதிகமாய் கவனமெடுத்து இரசனையோடு செய்யப்பழக்கப்படுத்திக்கொண்டான். எப்போது அவனுக்குள் காதல் வைரஸ் நுழைந்துகொண்டதோ அன்றிலிருந்து ஆளே மாறிப்போனான் விஷ்ணு.

நாட்கள் கரைந்து நாட்காட்டிகள் குறைந்து காலம் கடுகதியில் காணாமல் போய்க்கொண்டிருக்க, அந்த ஆறுமாத இடைவெளியில் தனது கருவில் காதல்குழந்தையை பத்திரமாக வளர்த்துக்கொண்டிருந்தான் அவன். ஆறுமாத காலங்களில் அவளுக்கும் அவனுக்குமான இடைவெளிகள் குறைந்து நட்பாகப் பேசிக்கொள்ளத் தொடங்கியிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான். அவளாக ஏதாவது செய்கிறாளா என்று? இல்லை! அவள் இதுதொடர்பாக சிறு அசைவைக்கூட காட்டவில்லை. இனியும் பொறுக்க முடியாது. தன்னுடைய காதலை அவளிடம் சொல்லியே தீருவது என்று முடிவெடுத்தான். காத்திருப்பதால் இறுதியில் காதல், கண்ணீரையே பரிசளித்துவிடும் என்பதை பலருடைய வாழ்க்கையிலே கண்கூடாக கண்டுள்ளதால் எப்படியாவது விண்ணப்பத்தை விலாசமிட நினைத்தான். வருகின்ற காதலர் தினத்தில் தாங்களும் ஜோடிகளாய் சிறகடிக்க மனம் நாடியது. அதனால்தான் இன்று அவளது வருகையை எதிர்பார்த்து காத்திருக்கிறான். அவள் வரவு அமாவாசையில் பௌர்ணமியைத் தேடுவது போலாகிவிட்டது.                                                                                மனசுக்குள் வேதனைதான். இருப்பினும், காதலர் தினத்துக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றனவே என மனதைத் தேற்றிக் கொண்டு, நாளைய பொழுதும் நமக்காய் விடியும் என்றவாறு வீடு திரும்பினான்.
அடுத்தநாள்...
அலுவலகம் ஆட்களால் ஆக்கிரமிக்கப்பட்டு கொண்டிருந்தது. 'இன்றாவது ...வந்திருப்பாளா?"
படபடக்கும் இதயமும் ஏங்கித் தவிக்கும் மனசுமாக நந்தகியைத் தேடி விழிகளை அலையவிட்டான். 'ஆமாம்.. அதோ இருக்கின்றாள்... "தன் காதல் தேவதை கண்களில் சிக்கிவிட்டாள்  என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு  அறைக்குள் நுழைந்தபடி போனிலே அவளை அழைத்தான்.
எப்போதும் போலவே அன்றும் வந்தாள் நந்தகி. 'நந்தகி  இதுல உட்காருங்க. உங்களோட கொஞ்சம் பேசணும்" அமர்ந்துக்கொண்டு அவனை நோக்கினாள் நந்தகி.
 'எனக்கு சுத்தி வளைச்சு பேசத் தெரியாது. அதனால நான் உன்னோட எம்.டி என்கிற நிலையில் இல்லாமல்... சாதாரண ஒருத்தனாய் நின்னு கேட்கிறேன். நான் உன்னை லவ் பண்றேன் . நீ என்னை ஏத்துக் கொள்வாயா?" அப்பாவியாய் இருந்தவள் சீறினாள்.  'நோ..நோ...சேர். எனக்கு இதில் இஷ்டமில்லை. ஜ ஆம் சொரி..." இருக்கையிலிருந்து எழுந்துக் கொண்டாள்  நந்தகி. 'என்ன காரணம்னு நான்  தெரிஞ்சுக்கலாமா?" 'காரணம் சொல்லும் நிலையில் நான் இல்லை. என்னை வற்புறுத்தாதீங்க ப்ளீஸ்..." சொல்லிவிட்டு வெளியேற முயன்றவளை கையமர்த்தினான் விஷ்ணு.
'நந்தகி... உன்னை இன்னைக்கு நேற்றில்லை. நான் எப்போ உன்னைப் பார்த்தேனோ? அன்றிலிருந்து உன்னைக் காதலிக்கிறேன்.  இதுவரைக்கும் காதல்லயே பிடிப்பில்லாமல் அவாய்ட் பண்ணிவந்த  நான்... உன்னை  பார்த்ததிலிருந்து நீதான் என் மனைவின்னு மனசில எழுதிவைச்சிட்டேன். ப்ளீஸ் நந்தகி... என் காதலை புரிஞ்சுக்கோ..." அவன் நிலை தடுமாற, அவள் பனித்த விழிகளோடு 'கடவுளே... என் நிலைமையைச் சொன்னால் புரிஞ்சுக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறீங்களே..." கண்ணீர்த்துளிகள் அவளது கன்னங்களில் கோலமிட்டன.
'ஏய்... என்னடி பொல்லாத நிலமை? என்னை எதுக்காக பிடிக்கலைன்னு சொல்லு? நான் விட்டிடுறேன்..." ஆவேசமாகக் கத்தினான் விஷ்ணு. ' ப்ளீஸ் விஷ்ணு. என்னோட நிலைமை தெரிஞ்சா... என்னை இந்த நிமிஷமே நீங்க தூக்கி எறிஞ்சிடுவீங்க. நான்... நா..ன்... ஒரு விதவை...விஷ்ணு" சேலைத் தலைப்பால் வாயைப் பொத்திக்கொண்டவள் விம்மினாள். இந்தச செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியடைவான் என எதிர்பார்த்தவள் மிரண்டாள்.
'ஓ.  இதுதானா காரணம்? இது எனக்கு ஏற்கனவே தெரிஞ்சதுதான். நந்தகி... நீ என் மனசுக்குள்ள வந்த நாளிலிருந்து உன்னைப் பற்றி எத்தனை கனவு கண்டேனோ? அதேபோல உன் குடும்பம், உன்னோட வாழ்க்கை பற்றி நிறையவே தெரிஞ்சு கொண்டேன். நீ வாழ்ந்த போர்ச்சூழல் உன்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ண வைச்சதும், ரெண்டே நாள்ல உன்னோட தாலியை... நீ எறிகணைக்கு காவுகொடுத்ததும் எனக்கு நல்லாவே தெரியும். எனக்கு அது தேவையில்லை. எனக்கு உன்னோட அன்பும்... உன்னோட நல்ல மனசும்தான் வேணும்...தருவியா நந்தகி?" என்றவனை இடைமறித்தாள் நந்தகி.
'ஐயோ விஷ்ணு. நான் கலங்கப்பட்டவ. அதுமட்டுமில்லாமல்... இன்னொருத்தரோட வாழ்ந்தவள். வேண்டாம் விஷ்ணு. உங்க மனசுக்கும், வசதிக்கும்... இந்த கசங்கிப்போன மலர் வேண்டாம். நான் வர்ணம்  இழந்துபோன வானவில். இனி வாழமுடியாதவள்..." மீண்டும் அவள் அழ, அவன் மெதுவாக அவளது கரங்களைப் பற்றினான்.
'நந்தகி... எனக்கு உன்னோட கடந்தகால வாழ்க்கை தேவையில்லை. அதை கிளறவும் நான் விரும்பலை. எனக்கு நீ படுற அத்தனை வேதனைகளும் தெரியும். உன்னோட உடம்பு என்கிறதைத் தாண்டி... மனசுதான் பெருசா தெரியுது.  உன் நினைப்புகளினாலேயே இவ்வளவு மாறிப்போன நான்... நீ எனக்கே கிடைச்சீன்னா...." அதற்குமேல் அவனால் பேசமுடியவில்லை.
'இல்லை விஷ்ணு... உங்களுக்கு எந்த விதத்திலும் பொருத்தமில்லாத என்னைப்போய்..."
'வேண்டாம் நந்தகி. நீ உன்னையே ஏமாத்திக்காத. நான் இப்போ உன்கிட்ட என் காதலைச் சொன்னதுபோல உனக்கு இன்னொரு சர்ப்ரைஸ். என்ன தெரியுமா? நான் உன்னை காதலிக்கிறதை... அப்பாகிட்ட சொல்லிட்டேன். அவர் இப்போ உங்க வீட்டில சம்மந்தம் பேசிக்கொண்டிருப்பார்." இவன் சொல்வதைக் கேட்டு விக்கித்துப் போனாள் நந்தகி.
அப்போது அவன் 'ஏய் நந்து? இப்போவாவது ஓ.கே சொல்லும்மா?" என்றுவிட்டு அவள் காதருகில் குனிந்து, 'என்மேல உனக்கு கொஞ்சம்கூட லவ் கிடையாதா?" என்று கேட்டதும், அதுவரை கண்ணீர்த் துளிகளினால் கரைந்துகொண்டிருந்த அவள் விழிகள், அகலமாய் விரிந்தன. வாசலை நோக்கி நகர்ந்தவள், திரும்பி அவனைநோக்கி மெதுவாய் தலையசைத்துவிட்டு ஒரு ஓரப்பார்வையோடு வெளியேறினாள். அந்தக்கணமே விஷ்ணுவின் நினைவுகளும் நந்தகியின் நினைவுகளும் காதாம்பரி இராகத்தில் காதல்பாடல்களை இசைக்கத்தொடங்கிவிட்டன.
   


    இராமசாமி ரமேஷ்.
       அளம்பில்.                
                                

ஞானம் பிறந்தது...

வந்துகொண்டிருக்கும்போது
வழுக்கி விழுந்துவிட்டேன்
கூடவே வந்தார்கள்
பெற்றவர்கள்
உற்றவர்கள்
இன்னும் பலர்....
பார்த்து நடக்க
உனக்கு பார்வை போய்விட்டதா...?
அப்பா சொல்லிவிட்டு
அடுத்தவர்களோடு நடந்துகொண்டிருந்தார்
எழுந்து வா தம்பி
என்றார் அம்மா...
ஓடிவந்து தூக்கினான்
நான் சாதி பார்த்து
இத்தனைநாள் ஒதுக்கிவைத்த நண்பன்...
இப்போதுதான்
எனக்குள் சுடலை ஞானம் பிறந்தது...

இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

புதன், 26 ஜனவரி, 2011

முடிந்தால் செய்யுங்கள்!



எங்கள் தேசம்
மலர்ந்துகொண்டிருப்பதாக
சிலர் சொல்கிறார்கள்நாங்கள்
மடிந்துகொண்டிருப்பது
தெரியாமல்...

வசந்தம்
வீசத்தொடங்கியிருப்பதாக
வாழ்த்துப் பாடுகிறார்கள்
நாங்கள்
புயலுக்குள் சிக்குண்டு
புதைந்து போவது
தெரியாமல்...

இழப்புக்களை
ஈடுசெய்யப்படுவதாக
பறையடிக்கிறார்கள்
நாங்கள்
இழந்தவைகளை
இனி
மேலும் பெறமுடியாதென்று
தெரியாமல்...

மீண்டுமொரு புதுவுலகை
எமக்கு
தந்திருப்பதாய் மகிழ்கிறார்கள்
நாங்கள்
தாய்மண்ணை இழந்துவிட்டு
தவித்துக்கொண்டிருப்பது தெரியாமல்...

இனிமே
ல்
எமக்கான மீட்பர்களாய்
நாமுள்ளோமென
புகழுரைக்கிறார்கள்
நாங்கள்
அவலச் சிலுவைகளை
சுமந்துகொண்டிருப்பது
தெரியாமல்...

மன்னிக்க வேண்டும்
மீட்பர்களே!
உங்களால் எம்துயரை
தீர்க்க முடியாது போனால்
போகட்டும்
எம்மீது திணித்த
பாவச்சிலுவைகளையேனும்
எடுத்து விடுங்கள்


நாங்கள் நாங்களாகவே
எமக்கான
இடர்களை நீக்கி
எழுந்து கொள்கிறோம்

இராமசாமி ரமேஷ்
அளம்பில்.


செவ்வாய், 25 ஜனவரி, 2011

என்னைப் பற்றி.... சுடர்ஒளி பத்திரிகை


இலக்கியப்பகிர்வு



மரபுக்கவிதை,புதுக்கவிதை என்னும் இரு நிலைகளைத்தாண்டி மூன்றாவதாக மாதிரிக்கவிதைகள் எனும் பாணியை இலக்கிய உலகில் அறிமுகம் செய்துள்ளார் நெடுந்தீவு முகிலன். "கடவுளின் சயனத்தைக் கலைக்கும் மணியோசை" இது மாதிரிக்கவிதைகளின் ஆரம்பம் கிடையாது. மாதிரிகளின் ஏழாவது சகோதரன்.
 
இந்தச் சமூகத்தின் நித்திரையைக் கலைத்து, அவர்கள் யோசிக்கக்கூடிய இடியோசைகள் போல "கடவுளின் சயனத்தைக் கலைக்கும் மணியோசை" அமைந்திருப்பதாக வாழ்த்துக்கூறியிருக்கிறார் நமது மூத்தபடைப்பாளி மேமன்கவி அவர்கள்.

நெடுந்தீவு முகிலனின் கவிதைத்தொகுதிகள் வரிசையில் ஏழாவதாக "கடவுளின் சயனத்தைக் கலைக்கும் மணியோசை" புதுப்பொலிவோடு, ஏக்கங்களைச் சுமந்துகொண்டு தன்வாழ்வு விடியாதா என, முட்கம்பிகளுக்கு நடுவில் காத்திருக்கும் சிறுவனை அட்டைப்படமாகத் தாங்கி வெளிவந்திருக்கிறது.உண்மையிலேயே தற்காலத் தமிழ்மக்களின் வாழ்வியலைப் படம்பிடித்துக் காட்டுகின்ற விதமாக அட்டைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளமையை பெரிதும் வரவேற்று முகிலனுக்கு நன்றிசொல்ல வேண்டும்.

இந்நூலுக்கான தலைப்பு, உள்ளடங்கியுள்ள கவிதைகளோடு நன்றாகப் பொருந்துகின்றது. நமது சமுதாயத்தில் சிதறிக்கிடக்கின்ற பிரச்சினைகளை கண்டெடுத்து அவற்றை தனது வார்த்தைக் கோர்வைகளினால் வார்த்தெடுத்து நமக்காக மாதிரிக்கவிதைகள் என்ற படைப்பாக தந்துள்ளார் முகிலன். நேர்த்தியாகவும், கருத்துப் புலப்படும் வகையிலும், தனது கவிதைகள் சொல்லவரும் விடயங்களைப் பேசும் படங்களாகவுமம் இந்நூலிலே ஓவியங்களை இணைத்துள்ளார். இதுவும் நுர்லின் சிறப்புக்குச் சான்றான ஒரு காரணியாகும்.

வறுமை, போரினால் ஏற்பட்ட இழப்பு, பெண்ணியம், சாதிப்பிரிவினை,ஊனம், மனித அவலங்கள் இப்படியாக பலதரப்பட்ட சிக்கல்களை இந்தநூல் தாங்கிநிற்கிறது. தற்போதைய இலக்கியவாதிகளால் கண்டுகொள்ளப்படாது தவறவிடப்பட்ட பிரச்சினைகளைக் கண்டுபிடித்து கவிவடித்துள்ளார் ஆசிரியர்.

இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இணையங்களிலும் தனது கைவண்ணங்களைப் படைத்துவரும் நெடுந்தீவு முகிலன், மென்மேலும் தரமான பல படைப்புக்களை இலக்கிய மண்ணுக்கு வழங்வேண்டும் என வாழ்த்துகிறேன்.

   "கடவுளின் சயனத்தை மட்டுமல்ல! கடவுளையே பாகுபடுத்திய மனிதர்களின் சயனத்தையும் சேர்த்தே கலைத்து சிந்திக்கவைக்கிறது இந்த மாதிரிக்கவியோசை"

                            இராமசாமி ரமேஷ்.

திங்கள், 24 ஜனவரி, 2011

அந்த நாளின் வருகைக்காய்...



நீ உதைத்த போதெல்லாம்
உள்ளம் மகிழ்ந்து
உணர்வுகளோடு வாழ்ந்தபடி
நீ
கைகளில் தவழும்
நாளுக்காய் காத்திருந்தேன்

என்
ஜீவநாடியை அடக்கி
உன் வருகையின்
வலியைப் பொறுத்துக்கொண்டு
பூரிப்படைந்தேன்
உன் பூமுகத்தை
தரிஷிக்கப் போகும் திருப்தியில்...

என்
உணவுதனை சுருக்கி
உன் பசிக்காய்
ஓய்வில்லாமல் உழைத்தேன்
தந்தையில்லா வலி
உனக்கு
வந்துவிடக்கூடாதென்று...

நீ
வாலிபம் தரித்தபோது
உன் வாழ்க்கைக்காய்
என் முதுமையைப் பாராது
கல்விக்கும் செலவுக்கும்
விழி மூடாமல்
வழி தேடினேன்...

என்
எதிர்பார்ப்பைக் கலைத்து
என்னவள் இவளென்று
நீ காட்டிய பெண்ணை
சேர்த்து வைத்தேன் உன்னோடு
விருப்பப்பட்டு விட்டாயே
என்பதினால்...

குடியிருந்த வீட்டையும்
சோறு போட்ட நிலத்தையும்
கூறுபோட்டேன் உனக்காக
என் பிள்ளை
வசதியாக வாழ வேண்டும்
என்பதற்காக...

நீயோ...
தலைநகரம் ஓடினாய்
தொழில் செய்தாய்
கை நிறையச் சம்பாதித்தாய்
மழலைகளைப் பெற்றெடுத்தாய்
மனநிறைவோடு வாழ்கிறாய்;...

நான்
உன் உழைப்பையோ
உனதான சொத்துக்களையோ
கேட்கவில்லை...

ஒருதடவை
ஊர்வந்து
அம்மா என அழைத்து
ஒருவேளை ஒன்றாக
என்னோடு உணவருந்தினாலே
போதுமடா மகனே!
போதும்...!

அதற்காகத்தான்...
இத்தனை நாட்களாய்
பிரியப்போகும்
என்னுயிரைப் பிடித்தபடி
காத்திருக்கிறேன்...
நீ வரும்
அந்தநாளுக்காய்...!

                      இராமசாமி ரமேஷ்
                         அளம்பில்.

தியாகிகள்


வலியைப் பொறுத்துக்கொண்டு
ஆசைகளை மறைத்துக்கொண்டு
தூக்கம் மறந்து
உணவைத் துறந்து
தன்னுள்ளே
இன்னொரு உயிரைத் தாங்கிடும்
அன்னை...

தனக்கு கிடைப்பதில்
அதிகமாய் பிரித்து
தம்பிக்கும் தங்கைக்கும்
தலைவருடி உண்ணக்கொடுத்து
தாய்க்கு உதவியாய்
தானே இருந்துகொண்டு
தம்பியை பள்ளிக்கு
அனுப்பி வைக்கும்
அக்கா...

தோல்விகள் வரும்போது
உள்ளம் நொந்து
உணர்வுகளினால் கட்டுண்டு
வாழ்க்கையை வெறுக்கும்போது
பாசமாய் அருகிருந்து
நேசமாய் எடுத்துரைத்து
தோழமையால் தூக்கிவிடும்
தோழி...

தாலி வாங்கியதற்காய்
நம்மை சேயாகவும்
தன்னை தாயாகவும் மாற்றி
இன்பம் துன்பம்
அத்தனையிலும் பங்கெடுத்து
நம் மரணத்திலும் பங்கெடுத்து
இன்னொரு அன்னையாய்
கூடவே வரும்
மனைவி...

எத்தனையோ
தியாகிகள் இருந்தாலும்
அத்தனைபேரையும் மிஞ்சிய
தியாகிகள் யாரென்றால்...
அவர்கள் பெண்களைத் தவிர
வேறு யாராக
இருக்கமுடியும்...?


         இராமசாமி ரமேஷ்
            அளம்பில்.
யிர்கள் அழுகின்றன
வேலிகள்
வேட்டையாடத் தொடங்கிவிட்டதால்

















முகில்களே!
நீங்கள் எப்போது
ணவரை இழந்தீர்கள்...?












ரத்தத்தை
விற்றுவிட்டுக்கூட
ரிசி சீனி வாங்கினோம்
ன்று வன்னியில்...


இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

மாதிரிக்கவிதைகள்

அன்பே!
தற்காக
ன் நிழற்படத்தை
னுப்புகிறாய்....?
நீ என்னுள்ளே
நிஜமாக இருக்கும்போது

இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

கல்லறைக் காவியம்

மழைக் கீற்றைப் பிடித்து
பூமிக்கும் வானுக்கும்
பாலம் அமைத்து
மின்னல் ஒளி உதவியோடு
இரவுகளைக் கிழித்தபடி
விரைந்து கொண்டிருக்கிறேன்
உன்னைத் தேடி.....
சாமான்ய தேசத்தில்
யாருமற்ற நேரத்தில்
ஒற்றைப்பனை நிழலிலே
உன் துயிலறையைப் பற்றி
துன்பக் கண்ணீர் வடிக்கின்றேன்
தினமும்
என் கனவுப்பாதையில்
கறுப்பு வெள்ளையாய்
உலவுகின்றன
உன் நினைவுகள்
மாலை நேரத்து
மந்தாரப் பொழுதுகளில்
என் உயிரோடு
அஸ்தமிக்கின்றன
உன்னோடு பழகிய
அந்தநாள் ஞாபகங்கள் .......
கானல்களின்
வரண்ட தேசத்தில்
நம் தொலைந்துபோன
வாழ்வைத்தேடி
ஆத்ம பயணம் தொடர்கிறேன்
விழிகள் கசிய
விம்முகின்ற மனதோடு
உயிர்கொண்டு உதிரத்தால்
உதிரத்தால் வரைகிறேன்
ஒரு கல்லறைக் காவியம்
என் காவியம்
முற்றாகும் முன்பே
உன் நினைவுகளோடு
சாவில் சங்கமிக்கப் போகிறேன்
இறப்பிலாவது வாழ்வோமே!

இராமசாமி ரமேஷ்
அளம்பில்.

காற்றுவெளியில் காத்திருப்பு

காற்றுவெளியில்
என் கவிதைகளை
உலவிவரச் செய்கிறேன்
ஏனெனில்...
சிலவேளைகளில்
நீ வானில்
வலம் வரும்போது
அவைகளை இரசிக்கக்கூடும்
என்பதினால் சகியே...


அந்திமப் பொழுதுகளில்
அஸ்தமனத்தை இரசித்தவாறு
கடற்கரைகளில் காத்திருக்கிறேன்...
ஏனெனில்...
நீ மேனிமிளிர
வெண்பஞ்சு மேகங்களிடையே
மிதந்துவந்து
என்னுடன் சங்கமிப்பாய் எனும்
நம்பிக்கையில்...


சந்தனங்களையும்
சங்குகளையும்
உனக்காய் சேமிக்கிறேன்...
நீ
பாலருந்த சங்குகளும்
பள்ளிகொள்ள
சந்தனமுமாய் இருக்கவே தோழி...


வெள்ளி நிலவே...
நீ
என்னில் நிறைந்திருந்து
காதல் செய்யச் சொல்கிறாய்
இந்த பிறப்பில்
இருவரும்
இணையாது போனால்
இனிவரும் மறுமைகளிலும்
உன் நினைவுகளோடே
வாழ்ந்திடுவேன்...
நிலவின் காதலன் எனும்
அடைமொழியோடு....


இராமசாமி ரமேஷ்
அளம்பில்