திங்கள், 4 ஜூலை, 2011

வரப் போகும் மீள்தளுக்காய்.....


பிறந்ததிலிருந்து
பிரிவின் வழிகளை நீயும்
சுவைக்கத் தொடங்கிவிட்டாய்..
உணவு
நம் பசிபோக்குவது போல
பிரிவு நம் உயிர் குடிக்கிறது....

போர் செய்த கொடுமையால்

குடும்பத்தைப் பிரிந்து
நண்பர்களைத் துறந்து
கானகமே வாழ்வானது
உனது பதினெட்டில்......

வாழ்வைத் தின்னும்

அதிகார கொள்ளையர்களால்
முட்கம்பிகளுக்குள்ளும்
மீளாத சோகங்களுக்குள்ளும்
சிக்கி.... காட்டில் எறித்த நிலவாக
காய்கிறது உன் இளமை
இருபத்தொன்றில் தோழானே!!

நமது உறவுகளின்

இரத்தமும் தசைத் துண்டங்களும்
மிதிபட ஓடிவந்தோம் ....
வெயிலும் மழையும்
வறட்சியும் புழுதியும் அரசாட்சி செய்யும்
அக(வ)தி முகாமினுள்.......

ஓடிவந்து ஓயமுன்னர்

ஒலிபெருக்கி அறிவித்தல்.....
புலிகளாய் இருந்தவர்கள்
புனர்வாழ்வுக்காய் வாருங்கள்
நல்லதொரு எதிர்காலம்
உங்களுக்காய் காத்திருக்கிறது......

உனக்கு மீண்டும் தொடங்கியது அவலம்

வந்து சேர்ந்தாய் புனர்வாழ்வு நிலையம் !!

விடுதலை என்னும்

ஒற்றைச் சொல்லை எதிர்பார்த்து
ஒன்றல்ல!! இரண்டல்ல!!
மூன்று வருடங்கள் முடிந்து போயும்
இன்னும் வரவில்லை உனக்கான பதில்....

கலங்காதே... என் நண்பா!!

ஏதேதோ நடந்தும் எதுவுமே
உன்வாழ்வின்   ஏக்கத்தைத் தீர்க்கவில்லை
இருந்தாலும் என்னவனே...
காத்திரு எதிர்பார்த்து!!
உனக்கென வரப்போகும் மீள்தளுக்காய்...........!!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக