ஞாயிறு, 24 ஜூலை, 2011

சிறை பிடிக்கப்பட்ட கனவுகள்....


கனவுகள் திருடப்பட்டு
காலத்தின் கரங்களில்
கட்டாயப்படுத்தப்பட்டு
கைதியாக்கப்பட்டுப் போனேன்....
ஆற்றுவதற்கும் தேற்றுவதற்கும்
யாருமேயின்றி அனாதையாக நகர்கிறது
எனது பொழுதுகள்.....

சுகங்கள்

யாருடையதோ
சுரண்டலில்
அபகரிக்கப்பட்டதும்
நியங்கள் கானல்களாகி
எனக்காக எதுவுமேயின்றி
காணாமல் போயின
உரிமைகள் எனைவிட்டு வெகுதூரமாய்....

விரக்தியின் விளிம்பில்

விழித்துக் கொள்கிறேன்
தூங்குகின்ற பொழுதுகளில்கூட......!!

வண்ண வண்ணமாய் 

என் தேசத்தில் வருமென
நான் எதிர்பார்த்த தருணங்கள்
சுடுகாட்டில் கருக்கப்பட்ட
பூச்சரமாய்
இருட்டடிப்புச் செய்யப்பட்டு
இரும்புக் கரங்களுக்குள்
இறுக்கப்படுகின்றன...........

வயது வந்துவிட்டதால்

வாலிபமே என் வாழ்க்கைக்கு
வலியாகிப் போனது.....
தங்கக் கூண்டில்
தடுமாறும் பறவையாக
வசதிகள் கொட்டிக் கிடந்தும்
வெளி வாழ்க்கைக்கு
வழி பார்க்கின்ற
என் விழிகளின் கனவுகளை
யார்தான் புரிந்துகொள்வார்களோ....??

                                                   இராமசாமி ரமேஷ்,
                                                        அளம்பில்.
 



செவ்வாய், 12 ஜூலை, 2011

நம் காதலுக்கு சாட்சியாக....


நீ என்னை புரிந்து கொள்வதற்குள்
நான் புதைந்து போனாலும்
அந்த மக்கிப் போன மண்கூட
உன் மடியை மட்டுமே தேடும்
நம் காதலுக்கு சாட்சியாக......
நிரோஷா தியாகராசா

செவ்வாய், 5 ஜூலை, 2011

தாய் மண்ணே!! இது தலைவிதியா??


எனது வாழ்க்கைப் புத்தகத்தில்
பிறப்பு முதல்
வளமோடு வாழ்ந்து
ஏதுமற்ற ஏதிலிகளாய்
இடம்பெயர்ந்து ஓடியவரை
உன் மடிதானே புகலிடமாய்
என்னுடைய தாய் மண்ணே......!!

பசுமையாகக் கிடந்த

வளமான எனது தாய்மண்
வாடிப் போய்க்கிடக்கிறது
அபிவிருத்தி என்னும் வசந்தத்தை
எதிர்பார்க்கும் இலையுதிர்காலமாய்....

கிட்டியும் கிளித்தட்டும்

நாமாடிய திடல்களிளெல்லாம்
பச்சை உறைப்பை மூட்டைகளோடு
கறுப்பு  உருவங்கள் முகாமிட்டு
எங்கள் சுதந்திரக் காற்றை
சுவீகரித்துக் கொண்டிருக்கின்றன....

சந்திகளில் சகாக்களோடு

நினைவுகளை மீட்டியபடி
நாம் களித்த பொழுதுகளை
சட்டித் தொப்பிகள்
சல்லாபப் பார்வைகளோடு
வெட்டி வீசி எறிந்துவிட்டன..............

வயல்கள் வரம்புகள்

தோப்புகள் துரவுகள் என
எங்கள் இளமை மலர்ந்த
இடங்களில் கூட..............
நாங்கள் இப்போது அந்நியர்களாக
அழைத்துப் போகப்படுகின்றோம்....

எங்கள் தேசத்தில்

ஆலயங்களுக்கு ஆண்டவனைத்
தேடித் போனால் கூட
தொடாத   அவயங்களையும்
தொட்டுத்  தடவிப் பார்க்கின்றார்கள்
தேசத் துரோகம் செய்துவிடுவோமென்று........

சமாதானம் மலர்ந்து

பூத்துச் சிரிப்பதாக பூரிக்கிறார்கள்
எங்களின் புன்னகையையும்
உரிமைகளையும் பறித்து
தமது அரையில் கட்டியபடி.......!!

இராமசாமி ரமேஷ்
அலம்பில்.









திங்கள், 4 ஜூலை, 2011

வரப் போகும் மீள்தளுக்காய்.....


பிறந்ததிலிருந்து
பிரிவின் வழிகளை நீயும்
சுவைக்கத் தொடங்கிவிட்டாய்..
உணவு
நம் பசிபோக்குவது போல
பிரிவு நம் உயிர் குடிக்கிறது....

போர் செய்த கொடுமையால்

குடும்பத்தைப் பிரிந்து
நண்பர்களைத் துறந்து
கானகமே வாழ்வானது
உனது பதினெட்டில்......

வாழ்வைத் தின்னும்

அதிகார கொள்ளையர்களால்
முட்கம்பிகளுக்குள்ளும்
மீளாத சோகங்களுக்குள்ளும்
சிக்கி.... காட்டில் எறித்த நிலவாக
காய்கிறது உன் இளமை
இருபத்தொன்றில் தோழானே!!

நமது உறவுகளின்

இரத்தமும் தசைத் துண்டங்களும்
மிதிபட ஓடிவந்தோம் ....
வெயிலும் மழையும்
வறட்சியும் புழுதியும் அரசாட்சி செய்யும்
அக(வ)தி முகாமினுள்.......

ஓடிவந்து ஓயமுன்னர்

ஒலிபெருக்கி அறிவித்தல்.....
புலிகளாய் இருந்தவர்கள்
புனர்வாழ்வுக்காய் வாருங்கள்
நல்லதொரு எதிர்காலம்
உங்களுக்காய் காத்திருக்கிறது......

உனக்கு மீண்டும் தொடங்கியது அவலம்

வந்து சேர்ந்தாய் புனர்வாழ்வு நிலையம் !!

விடுதலை என்னும்

ஒற்றைச் சொல்லை எதிர்பார்த்து
ஒன்றல்ல!! இரண்டல்ல!!
மூன்று வருடங்கள் முடிந்து போயும்
இன்னும் வரவில்லை உனக்கான பதில்....

கலங்காதே... என் நண்பா!!

ஏதேதோ நடந்தும் எதுவுமே
உன்வாழ்வின்   ஏக்கத்தைத் தீர்க்கவில்லை
இருந்தாலும் என்னவனே...
காத்திரு எதிர்பார்த்து!!
உனக்கென வரப்போகும் மீள்தளுக்காய்...........!!