வெள்ளி, 5 அக்டோபர், 2012

சூரியனில் கூவும் குயில் அறிவிப்பாளர் சைலி நாகமுத்து...


சூரியன் எவ்.எம். அறிவிப்பாளர் சைலி, 
இன்று வானொலிகளில் அனைத்து மக்களையும் தமது குரலால் கட்டிப் போட்டு, குறித்த வாநோளிகளுக்கென ஒரு நேயர் கூட்டத்தையே கட்டி வைத்திருக்கும் திறமை மிக்க அறிவிப்பாளர்கள் பலர் நம்முன்னே இருக்கின்றார்கள். அவர்களில் சூரியன் பண்பலையிலும்  பலர் திகழ்கிறார்கள். இந்த வாரம் மித்திரனின் கலைஞர்கள் பகுதியில் செய்தி வாசிப்பிலும் சரி, சூரிய ராகங்கள் நிகழ்ச்சியை தொகுத்தளிப்பதிலும் சரி, மேடை நிகழ்வுகளை அலங்க்கரிப்பதிலும் என அனைத்திலும் ஆளுமையான தனது குரல் மூலம் ஒரு தரமான ஒலிபரப்பாளராக திகழ்கின்ற சைலியை மித்திரனுக்காக சந்தித்து உரையாடினோம். அவர் பகிந்த கொண்ட விடயங்கள் இனி ...
சூரிய ராகங்களில் கூவும் இந்தக் குயில் பற்றி..
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கண்டியில் தான். கடந்த பத்து வருடங்களாக கொழும்பில் வசித்து வருகிறோம். என்னுடைய குடும்பம் அன்பான அழகான சிறிய குடும்பம். அப்பா நாகமுத்து வியாபாரத்துறையில் ஈடுபட்டிருக்கிறார். அம்மா சேதுலக்சுமிp இல்லத்தரசி. அக்கா தர்சினி அவரும் ஊடகத்துறையை சார்ந்தவர். அவருடைய கணவர் ஸ்ரீ குமார் அவர் தனியார் நிறுவனமொன்றில் நிதிக்கட்டுப்பாட்டாளராக பணி புரிகிறார்.
சாதாரண தரம் வரை கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையிலும் பின்னர் உயர்தர கல்வியை கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் பயின்றேன். பின்னர் பட்டய கணக்காளர் முகாமைத்துவ கணக்கியில் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளேன். இப்போது சூரியனில் நானும் ஒருத்தி. 

எவ்வாறு உங்களின் ஊடகத்துறைக்குள்ளான ஆரம்பம் நிகழ்ந்தது? 
சிறு வயது முதலே கல்வியை போன்றே கலை துறையிலும் அதிக ஆர்வம் காட்டி இருந்தேன். பாடசாலை காலங்களில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அந்த மேடையில் ஏதோ ஒரு விதத்தில் என்னுடைய  பங்களிப்பு கட்டாயம் இருக்கும். இசை ,நடனம் ,பேச்சு ,நாடகம் ,என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போனது. அதற்கான சரியான ஒத்துழைப்பு பெற்றோர் மூலமும் கிடைத்தது. அதனூடாக என்னை வளர்த்துக்கொண்டேன்.
ஏற்கனவே என்னுடைய சகோதரி அறிவிப்பு துறையில் இருந்தமையால் இயல்பாகவே ஒரு ஆர்வம் என்னுள் இருந்தது,ஆனால் முழு நேரமாக இந்த துறையில் ஈடுபடும் எண்ணம் அப்போது எனக்கு இருக்கவில்லை.
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பின்னர் ,அப்போது தனியார்  வானொலி ஒன்றின்  பணிப்பாளராக இருந்த அபர்ணாசுதன்  மூலம் தான் வானொலியில் எனக்கான அறிமுகம் கிடைத்தது. விளையாட்டாக பகுதி நேரமாக ஆரம்பித்தது இப்போது இவ்வளவு  தூரம்  என்னை அழைத்து வந்திருக்கிறது.


ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி..? அப்போது உங்களிடம் இருந்த மனநிலை..?
முதன் முதலாக என்னுடைய குரல் வானொலியில் ஒலித்தது செய்தி அறிக்கையின் மூலம் தான். முதல் செய்தி அனுபவம் இப்போது நினைத்தாலும் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும். பணியில் இணைந்து சரியாக ஒரு வாரத்தில் திடிரென ஒரு நாள் இந்த வாய்ப்பு வந்தது. வாய்ய்பு கிடைத்த சந்தோசம் ஒருபுறம் அதனை சரியாக பயனÊபடுத்த  வேண்டுமே என்ற பய் மறுபுறமும் எட்டிப்பார்த்தது. முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிந்தமையால் தொடர்ச்சியாக செய்தி அறிக்கைகளை வாசித்தேன்.
அன்று அபர்ணா அண்ணா எனக்கு மிக சந்தோசத்துடன் வாழ்த்திய அந்த தருணம் என்றுமே மறக்காது .பின்னர் ஒரு மாத கால இடைவேளையில் மாலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். சூரியனை பொறுத்த வரை என்னுடைய பயணம் ஆரம்பித்தது சூரியராகங்கள் மூலமாகத்தான். என்னை சரியாக அடையாளப்படுத்திய நிகழ்ச்சியும்  சூரியரகங்களே .

மறக்க முடியாத வானொலி வாழ்க்கையில் ஒரு நினைவின் பதிவு..? 
என்னை பொறுத்தவரை வானொலியில் நான் பேசுகின்ற ஒவ்வொரு நொடியுமே மறக்க முடியாதது . முதல் நாள் ஒலிவாங்கிக்கு முன்னால் என் பெயர் சொல்லி செய்தி வாசித்த அனுபவமும் ,சூரியனில் நான் இணைந்தது முதல் இன்று வரை கடந்து வந்த ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு நினைவுகளை தந்து கொண்டே தான் இருக்கிறது.எனக்கான தனி அடையாளம் ஒன்றை சூரியன் எனக்கு தந்திருக்கிறது. ஆரம்பத்தில் ரமணன் அண்ணாவுடன் சூரிய ராகங்களை தொகுத்து வழங்கிய போது ஏராளமான விடயங்களை கற்றுக்கொண்டேன்.பின்னர் தனியாக சூரியராகங்களை தொகுத்து வழங்கிய போதும் நிறைய அனுபவங்களை பெற்றுக்கொண்டேன்.இப்போது டிலானுடன் இணைந்து நிகழ்ச்சி செய்யும் போது ஒவ்வொரு நாளும் நகைச்சுவையான சம்பவங்களுக்கு குறைவு இருக்காது. யாரு பேசுறிங்க? நிகழ்ச்சி ஒவ்வொன்றுமே மறக்க முடியாதது. இது தவிர  அண்மைக்காலமாக நிறைய மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். ஆக மொத்தத்தில் எல்லாமே எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் தான்.

உங்களின் வளர்ச்சிக்கு பின்புலத்தில் இருப்பவர்கள்? 
என்னுடைய வளர்ச்சியில் நிறைய பேருக்கு பங்கு இருக்கிறது. நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு அவர்கள் தந்த ஊக்குவிப்பும் வழிகாட்டலுமே காரணம். என்னுடைய பெற்றோர் எந்த சந்தர்ப்பத்திலும் என்னோடு இருந்து என்னை வழிநடத்துபவர்கள். எனக்கு கற்பித்த ஆசிரியர்கள். இது தவிர இன்று என்னை ஒரு அறிவிப்பாளராக அனைவரும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கி எனுடைய திறமைகளை சரியாக பயன்படுத்த களம் அமைத்து தந்த சூரியனின் தலைமை நிகழ்ச்சி பொறுப்பதிகாரி திரு நவநீதன். அது போன்றே சூரியனின் ஆலோசகர் நடராஜா சிவம் அவர்களும் சிறப்பான முறையில் ஆலோசனைகளை தந்து என்னை பல தருணங்களில் சரியாக வழி நடத்தி சரியான விமர்சனகள் மூலம் நிகழ்சிகளை மேலும் சிறப்பாக படைக்க வழி வகுத்தவர்.இவற்ரில் ; என்னை இந்த துறைக்கு  அறிமுகப்படுத்திய என்றும் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அபர்னாசுதன் இவர்களுடன் என்னுடன் பணியாற்றிய அறிவிப்பாளர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

அன்றைய ஷைலிக்கும் இன்றுள்ள சூரிய ராகங்கள் ஷைலிக்கும் என்ன வேறுபாடுகள்?
நிறையவே வித்தியசங்கள் இருக்கின்றன இந்த ஏழு வருடத்தில் துறை சார்ந்த பல விடயங்களை கற்றுக்கொண்டு என்னை ஓரளவு வளர்த்துக்கொண்டு இருக்கிறேன். மனிதர்களை படிக்க கற்றுக்கொண்டுள்ளேன். உலகத்தை கற்றுக்கொண்டுள்ளேன். எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டுள்ளேன்.ஒரு பெண்ணாக சவால்களுக்கு முகம்கொடுக்க என்னை தயார் படுத்த கற்றுக் கொண்டுள்ளேன் . எதிலும் எப்போதும் அவதானம் தேவை என்பதை உணர்ந்து கொண்டுள்ளேன். ஊடகத்துறை நிறைய விடயங்களை எனக்கு கற்றுகொடுத்து இருக்கிறது.

செய்தி வாசிப்பதில் அழகான உச்சரிப்பும், நேர்த்தியும் உங்களிடம் காணப்படுகிறது. இதற்க்கு நீங்கள் கைக்கொள்ளும் முறைகளையும் உங்கள் குரலின் இரகசியத்தையும் இனி இத்துறைக்குள் பிரவேசிக்க உள்ளவர்களுக்கு சொல்லுங்களேன்.? 
பெரிதாக எந்த ரகசியமும் இல்லை.எதை செய்தாலும் அதை சரியாகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும் என்று எண்ணுபவள் நான்.எதை வாசிகின்றோம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் பின்னர் அதனை மற்றவருக்கு புரிந்து கொள்ளகூடிய விதத்தில் நேர்த்தியாக சரியான உச்சரிப்புடன் செய்திக்குறிய தொனியில் வாசித்தால் இலகுவாக அது நேயர்களுக்கு புரியும் என்று நினைக்கிறன்.இதை தவிர பெரிதாக சொல்லும் அளவுக்கு ரகசியம் ஒன்றும் இல்லை.

 ஒலிபரப்பு உலகை விட்டு வெளியில் வந்ததும் இந்த குயிலுக்குப் பிடித்த வேறு விடயங்கள்..?
அறிவிப்பு துறை தவிர ஏற்கனவே குறிப்பிட்டது போல பட்டய கணக்காளர் முகாமைத்துவ கணக்கியில் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளேன்.
இசையில் அதீத ஈடுபாடு உள்ளது .கருநாடக சங்கீதம் முறையாக பயின்றுள்ளேன்
நாட்டியத்திலும் அதே ஈடுபாடு உண்டு பரதநாட்டியம கதகளி இரண்டு நடன வகைகளிலும் முறையாக பயிற்;சி  பெற்றுள்ளேன். இது தவிர எழுத்துத்துறையிலும் மொழி மாற்றம் செய்வதிலும் நிறைய ஆர்வம் இருக்கிறது.

உங்கள் ஆரோக்கியமான நண்பர்கள் பற்றி...
நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள் .இலகுவாக எல்லோருடனும் பழகுவதால் என் நட்பு வட்டம் கொஞ்சம் பெரியது.நிறைய ஆரோக்கியமான நண்பர்கள் இருகிறார்கள்.என் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள்.  என் பாடசாலை கால நண்பர்கள் தான்.எதிர்ப்பார்புகள் இல்லாமல் எப்போதுமே எனக்காக இருப்பவர்கள்.இப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இ சிலர் நாடு கடந்து இருந்தாலும் இன்னும் அந்த நட்பு தொடர்கிறது.துறை சார்ந்த நண்பர்களும் நிறையவே இருக்கிறார்கள்.நண்பர்களால் நிறைய நன்மை அடைந்தவள் நான்.

உங்களது பயணத்தில் திருமணம் எப்போது?
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வெகு விரைவில் நடைபெறும்

மேலும், அறிவிப்பாளனாக வேண்டும் எனும் குறிக்கோளோடு காத்திருக்கும் இளையவர்களுக்கு உங்களது ஆலோசனை...?
புதிதாக இந்த துறைக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் தங்களை அதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.முக்கியமாக குரல் வளம் ,தமிழ் உச்சரிப்பு,அத்துடன் புதிய விடயங்களை தேடும் ஆவல் நிச்சயம் தேவை .தனியே பாடல்களை மாத்திரம் ஒலிபரப்பும் அறிவிப்பாளராக இல்லாமல் உங்களுக்கான தனித்துவத்தை உருவாக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.முயற்சியும் உழைப்பும் நேர்மையும் பொறுமையும் இருந்தால் நீங்களும் ஜொலிக்கலாம்.
 இந்த குயிலின் எதிர்காலம் இமயத்தைத் தொட மித்திரனின் வாழ்த்துக்கள். 
-இராமசாமி ரமேஷ்- 

செவ்வாய், 2 அக்டோபர், 2012

அண்மையில் மித்திரன் வாரமலரில் வெளியான எனது நேர்காணல்

இளம் எழுத்தாளர், மொழி கலை இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர், வானொலி அறிவிப்பாளர் இராமசாமி ரமேஷ்

போரும் வாழ்வும் எம் வாழ்தலை பங்கு போட்டுக் கொண்ட முல்லை மண்ணில் அளம்பில் எனும் அழகிய கடலோரக் கிராமம்தான் எனதூர்.  இப்போது சுனாமி கடலனர்த்தத்தின் பின்னர் உடுப்புக்குளம் எனும் பிரதேசத்தில் வசிக்கிறோம். அப்பா இராமசாமி அம்மா மகேஸ்வரி, சகோதரிகள் இருவர் தேவி- ராணிஸ்ரீ, சசிகுமார், சசிகரன் என இரண்டு அண்ணாமார், அன்புச் சண்டை போட தம்பி வினோத். இவர்களோடு பாசத்தை அள்ளியள்ளி வழங்க அண்ணிமார் , என் சகோதர்களின் குழந்தைகள் என எங்கள் உறவுகள் தான் எனது குட்டி உலகம். இழப்புக்களும் பிரச்சினைகளும் மலைபோல நின்றாலும் என்னவர்களின் அன்புக்குள் எனக்கு அவை பெரிதாகப் படுவதில்லை. என்னை இன்று மித்திரன் இனங்கண்டுள்ளது என்றால், நான் மேலே குறிப்பிட்ட என் உறவுகளின் வியர்வைத் துளிகள் தான் காரணம் என்று பெருமையாகக் கூறிக் கொள்வேன். ஆரம்பக் கல்வியை தரம் ஒன்று முதல் சாதாரண தரம் வரை மு/அளம்பில் ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திலும், உயர்தரத்தினை  மு/முல்லைத்தீவு மகா வித்தியாலயத்திலும் கற்றுவிட்டு இப்போது இணையத்தில் ஒலிக்கும் சஞ்ஜீவ ஒலி வானொலியில் அலுவலக முகாமையாளராகவும் நிகழ்ச்சி படைக்கும் ஒளிபரப்பாளனாகவும்  பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.  

இளையவரான உங்களது இலக்கியத்துறைக்குள்ளான பிரவேசம்? 
என் தந்தையாரும் மூத்தண்ணாவும் பத்திரிகைகள், நூல்களை படிப்பதில் ஆர்வமுடையவர்கள். இதனால் எந்நேரமும் எங்கள் வீட்டில் அவை நிறைந்து கிடக்கும். இதனால் தொற்றிக் கொண்ட ஆர்வம், எனக்குள் இருந்த எழுத்தாளனை இப்போது இணங்க காட்டியிருக்கிறது.   ஆரம்பத்தில் பாடக்கொப்பிகளின் பின் பக்கத் தாள்களில் கிறுக்கி ஓவியம் வரையும் குட்டி ஓவியனாகத்தான் நான் அறிந்து கொள்ளப்பட்டேன். அதன்பின்னர், படிப்படியாக அப்போதுகளில் வெளிவந்த சுடரொளி மற்றும் தினமுரசு போன்ற பத்திரிகைகளுக்கு ஓவியம், கவிதைகள் என என் நகர்தலை விரிவாக்கிக் கொள்ளத் தொடங்கினேன். முதன்முதலாக என் கவிதை சுடரொளி பத்திரிகையில் ஆகினாய் எனும் தைப்போடு வெளிவந்தது. அன்று தொடக்கம் என் உறவுகளும் என் இந்த வெற்றிகளுக்கு ஆதார சுருதியாய் அகரம் சொல்லித்தந்த என் தமிழாசிரியர் பத்மராஜாவும் ஏனைய என் ஆசிரியர்கள் நண்பர்கள் தந்த ஊக்குவிப்பும் என்னை மேலும் எழுத்த தூண்டின எனலாம். இதன் பிற்பாடு, இலங்கையில் வெளிவரும் அனைத்து பத்திரிகைகள், சஞ்சிகைகள், நூல்கள், வானொலிகள் என அனைத்திலும் என் கைவண்ணங்கள் வலம் வரத் தொடங்கின. பின்னர் நம் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழலினால், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப் பட்டிருந்த தருணங்கள் எனக்கு பல்வேறுபட்ட கருத்துருவாக்கங்கை தோற்றுவிக்க பல படைப்புக்களை ஏராளமாய் எழுதி குவித்தேன். அந்த எழுத்தின் வீரியம் எனக்குள்ளேயே வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

எழுத்துலகில் பிரவேசித்த பின்னர் ஏற்பட்ட மாற்றம்?
நல்லவொரு வாசகனால்தான் தரம் மிக்க படைப்புக்களை படைக்க முடியும் என்பது என் எண்ணம். இந்த வகையில், எனக்குள் இருந்த வாசகன் பல்வேறுபட்ட நூல்களை படித்த பிற்பாடு என்னை ஓர் எழுத்தாளனாய் மாற்றிவிட்டது. என் தேசத்தில் நிகழ்ந்த போர், வறுமை, பிரச்சினைகள், அடக்குமுறை, பெண்ணியம் தொடர்பான முரண்கள் பற்றியதாகவே எனது எழுத்துக்கள் உயிர்பெற்றன. பலர் இவனா என விழித்துப் பார்த்து என்னை பாராட்டிய பல சந்தர்ப்பங்கள் உண்டு. என் பெயரைக் கட்டதும் ஒரு பெரிய எழுத்தாளன் என நினைத்து என்னை சந்தித்ததும் ஏமாந்த பல கதைகளுமுண்டு. இவ்வாறு, எழுத்துலகில் மிகவும் சின்னவனான எனக்குள் எழுத்துலகமும் இலக்கியமும் கற்றுத் தந்தவை ஏராளம். பல சந்தர்ப்பங்களை வழங்கியது எழுத்தும் ஊடகமும், ஏராளமான நல்ல உறவுகளையும், பெரிய மனிதர்களையும் சம்பாதித்துத் தந்தும் எழுத்து தான். அத்தோடு, எனக்குள்ளும் ஒரு ஆத்மா திருப்தி. என் மக்களின் வாழ்வியல் இலங்கை மட்டத்திலாவது பேசப் படுகிறதே என்று! 

நீங்கள் ஊடகக் கற்கை நெறியைத் தொடர்ந்து விலகியுள்ளீர்கள். இதன் காரணம்? 
வேறென்னவாக இருக்க முடியும்? வறுமை என்னோடு வாளெடுத்து போர் செய்ய- தோற்றது நான்தான். என்போன்ற நடுத்தர வர்க்கத்தவர்கள் இவ்வாறு ஊடகத்தை நேசித்தாலும் கொழும்பிலே போய் படித்து முடித்துவிட்டு வருவதென்பது இயலாத காரியம். ஆனாலும் நான் முயன்றேன். ஆறு மாதங்களை பகீரதப் பிரயத்தனப் பட்டு நகர்த்திய என்னால், தொடர்ந்தும் தாக்குப் பிடிக்க முடியவில்லை. ஊடகத்தை நேசித்தேன், அதேபோல என் உறவுகளையும் நேசித்தேன். எனக்காக என் தம்பி வெயிலில் காய்ந்து உழைப்பதை பார்த்திருக்க முடியவில்லை. அதனால் எழுந்த முடிவுதான் இது. என்னால் சாதிக்க முடியும் என்ற தீர்மானத்தொடும் வலிக்கும் இதயத்தோடும், என் கல்லூரியில் என்னை மிகவும் நேசித்த விரிவுரையாளர் 
தேவ கௌரி, என் நண்பர்கள், என்னை ஆளாக்கிப் பார்க்க நினைக்கும் மூன்றாவது சகோதரி மலர் என எல்லோரையும் விட்டுப் பிரிந்து மீண்டும் முல்லைத்தீவு வந்தேன். முதுமையின் பிடியிலிருக்கும் பெற்றோர், கணவன்மார்களை இழந்த சகோதரிகள், கடலோடு போராடும் சகோதரர்கள் என என் குடும்ப நிலை எனக்கு கண்ணை விட்டு அகலவில்லை. மனதுக்குள் கல்லூரி னியாநிப்பு அதிகமாய் அப்பிக் கிடந்தாலும் என் உறவுகளின் வலிகளில் அவை காணாமலே போயின. மின்சாரமோ நவீன வசதிகளோ எதுவுமே இல்லாத என் மண்ணில் நான் மட்டும் கொஞ்சம் அதிகமாய் ஆசைப்பட்டு விட்டேனோ என்றுதான் ஆரம்பத்தில் எண்ணத் தோன்றியது.

சரி! இத்தனைக்கும் முன் நீங்களே முல்லை மண்ணிலிருந்து கடந்த தைமாதம் மொழி என்னும் கலை இலக்கிய சஞ்சிகை ஒன்றை ஆசிரியராக இருந்து வெளியிட ஆரமபித்திருந்தீர்கள். இதன் பிற்பாடு அந்த சஞ்சிகையும் உங்கள் தொழில் செய்யவேண்டுமென்ற நோக்கமும் எவ்வாறு ஈடேறியது? 
ஆமாம்! கடந்த தைமாதம் முல்லைத்தீவில் நான் ஆசிரியராகவும் என் நண்பர்களான வசந்தன், நிரோஷா ஆகியோரை இணை ஆசிரியர்களாகவும் கொண்டு மொழி எனும் கலை இலக்கிய சஞ்சிகையை ஆரம்பித்து இப்போது மூன்றாவது இதழும் அச்சிலே உள்ளது. மொழியின் தோற்றத்துக்கு முன்னரே நான் கொழும்பு சென்று விட்டேன். பொருளாதாரக் கஷ்டம் கொஞ்சமல்ல! எல்லாவற்றுக்கும் மத்தியில் என் மண்ணிலிருந்தும் ஒரு இலக்கிய இதழ் வரவேண்டுமென்ற அவாவில்தான் மொழி பிரசவமாகியது. என் பல நண்பர்களின் ஒத்துழைப்போடும் என் சகோதரிகளின் உதவியோடும் தான் இச் சஞ்சிகையை வெளியிட்டேன். அதில் எதிர்பார்த்த இழக்கும் எட்டப்பட்டிருக்கிறது என்பதுதான் என் கஷ்டங்களுக்குக் கிடைத்த பரிசு. நமக்குள்ளே இருக்கும் பல திறமைசாலிகளை வெளிச்சம் போடும் ஓர் ஊடகமாக இரண்டு மாதங்களுக்கொரு முறை மொழி முளைத்துகொன்ன்டே இருக்கும். 
கல்லூரியில் இருந்து வந்ததும் கைவசம் தொழில் கிடைக்குமா என்ன? இதற்குள் இன்னுமொன்றை குறிப்பிட மறந்துவிட்டேன். நான் கடந்த இரண்டாயிரத்து பதினோராம் ஆண்டு சஞ்ஜீவ ஒலி இணையத்தள வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளனாக இணைந்துகொண்டு பின்னர் கல்லூரிக்காகவே அதனையே விட்டுப் போகவேண்டியிருந்தது. நான் வந்ததும் வெளிநாட்டிலிருக்கும் எனது நிர்வாகப் பணிப்பாளருடனும் எங்கள் வானொலி நிகழ்ச்சி முகாமையாளர் சாந்தியுடனும் பேசி, மீண்டும் அந்த ஒளிபரப்பாலனாய் இணைந்து  கொண்டேன்.    இப்போது எனக்கு பக்க பலமாய் இவர்கள் இருவரும் என் நண்பர்களும் இருக்கின்றனர். 

முல்லை மண்ணில் முகிழ்ந்திருக்கும் சஞ்ஜீவ ஒலி வானொலியில் நீங்கள் செய்யும் நிகழ்ச்சிகள் பற்றி...?
இணையத்தில் இலங்கையிலிருந்து ஒளிபரப்பப்படும் வானொலிகளில் எமது வானொலிதான் அதிகளவான நேயர்களை கொண்டுள்ள வானொலி எனும் பெருமையுடன், நான் நிலாத்தூறல் என்ற கவிதைகள் கலந்த நிகழ்ச்சியினை ஆரம்பத்தில் படைத்து வந்தேன். இதற்க்கு காரணம் நானும் கொஞ்சம் கவிதைத் துறையில் ஈடுபாடுடையவன் என்பதே! பின்னர் பல நிகல்ச்ஹ்சிகளையும் படைத்து வந்தாலும், வணக்கம் தமிழருவி எனும் நிகழ்ச்சியினை இப்போது வழங்கி வருகிறேன். காலையில் பத்தரை மணிக்கு ஆரம்பமாகும் இந்நிகழ்ச்சியில் காலைப் பொழுதை உட்சாகமாக்கும் அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மிக விரைவில் இன்னொரு புதிய நிகழ்ச்சியில் எமது உள்நாட்டு வெளிநாட்டு நேயர்களை சந்திக்கப் போகிறேன். 

இளம் வயதிலேயே ஒரு சஞ்சிகை ஆசிரியர், ஒலிபரப்பாளர், இலக்கியவாதி, ஊடகவியலாளன் என பல துறைகளில் கால்பதித்துள்ள நீங்கள், இலக்கியத்தில் அதிகம் நாடுவது எதனை? 
கவிதைகள் என்னை அறிமுகம் செய்த பெற்றோர்கள்.. சிறுகதைகள் என்னை அடையாளப்படுத்திய சகோதரர்கள், பத்தி எழுத்துக்கள்    என் நண்பர்கள், வானொலி என் உறவு எனவே எதை நான் இதில் முக்கியப்படுத்துவதென நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள். இருப்பினும், இலக்கியத்தில் கவிதை- சிறுகதைகள் தான் அதிகம் என்னைக் கவர்ந்தவை. இப்போது எழுத்திலே ஈடுபட எனக்கு அவகாசம் கிடைப்பது குறைவு, இருந்தாலும் என் இடைவெளிப் பொழுதுகளில் அவற்றை மறக்காமல் தழுவிக் கொள்வதும் உண்மை. 

இவை தவிர்ந்த உங்களது ஏனைய ஈடுபாடு கொண்ட துறைகள்..?
என் வீட்டு சுவர்களுக்கும் என் நண்பர்களுக்கும் என் தனிமைப் பொழுதுகளுக்கும் தெரிந்தவொரு உண்மைய உங்களுக்கும் சொல்லுகிறேன். இசைத்துறையில் சிறு வயது முதலே நிறையவே ஆர்வம். அதுவும் குறிப்பாக பாடுவதற்கு எனக்கு அதிகமான ஆசை. என் பாடசாலைக் காலத்திலும் அதன்பின்னரான சில கால கட்டத்திலும் என்னவர்கள் கேட்டிருக்கிருக்கிறார்கள். ஊரில் நடைபெறும் நிகழ்வுகளும் என் பாடலால் நிறைந்திருக்கிறது. இப்போது இங்குள்ள இசைக்குழுக்களில் பாடும் சந்தர்ப்பங்கள் வைத்திருக்கின்றன.  அத்தோடு, தையல் கலையும் தெரியும். ஓய்வாக இருக்கும்போது என் சகோதரிகளின் தொழிலை நான் கையிலெடுத்துக் கொள்வேன். இவை தவிர, நடிப்பு, விளையாட்டு தான் எனக்கு சம்மந்தமான விருப்பமான துறைகள் எனலாம். 

நீங்கள் நுழைந்திருக்கும் இந்தத் துறைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அதிகம். பொருளாதார நிலையிலும், வசதி வாய்ப்புக்களிலும் பல இடர்பாடுகள் நெருக்கடிகள் உங்களுக்கும் உங்கள் சார்ந்த பிரதேசங்களுக்கும் உண்டு. இவற்றை எவ்வாறு சமாளிக்கிறீர்கள்? 
பிரச்சினைகளும் நெருக்கடிகளும் இல்லாத வாழ்வு யாருக்குமுண்டா? எனக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.  என் தொலைபேசிக்கு சார்ச் போடுவதிலிருந்து  மொழி சஞ்சிகையை வெளியிடுவது வரை எல்லாமே இடர்கள் நிறைந்த பயணம் தான். இன்றுவரை எண்ணூரில் மின்சாரம் இல்லை. இதர நவீனத்துவ வசதிகள் எதுவும் கிடையாது. இருந்தாலும் என்னிடம் நம்பிக்கை என்ற ஒரேயொரு ஆயுதமும் என்னோடுள்ள நண்பர்கள் என்ற இன்னொரு ஆயுதமும் தான் எனக்கான பின்புலங்கள்.

குறைபாடுகள் நிறைந்து கிடந்தாலும் நிமிர்ந்து நம்பிக்கையோடு நிற்கும் உங்களது இந்த இலக்கிய மற்றும் ஊடகப்பயனத்தில் உங்களால் மறக்க முடியாதவர்கள்..? 
நான் நன்றிசொல்லுகின்றவர்களின் பட்டியல் நிறுத்தப்பட முடியாதது. அந்தளவுக்கு எனக்குக் கிடைத்த உறவுகளின் உதவிஎன்பதும் அவர்களின் பங்களிப்பென்பதும் என் வெற்றிகளின் பின்னால் நிற்கின்றன. என் பெற்றோர்கள் சகோதர்களின் அடுத்து என் மூன்றாவது சகோதரி மலர் அவரோடு,   என் தேவைகளை அறிந்து உதவும் என் வானொலி நிர்வாகப் பணிப்பாளர் செந்தூரன், நிகழ்ச்சி  முகாமையாளர் சாந்தி ஆகியோருடன் என்  எனக்கு எந்தத் தேவை வந்தாலும் நிறைவேற்ற முன்வரும் நண்பன் பிரதீபன், வசந்தன், நிரோஷா, ருசாந்தன், ஜதுஷன்,பிரவீன், வித்யா   என் மருமகன் தினேஷ், ஜடிலன், என் கிராமத்தில் ஜோன் மென்கோ எனும் சகோதரர், ஊரவர்கள், என் பாடசாலை மற்றும் கல்லூரி நண்பர்கள், என் ஆசிரியர்கள், விசேடமாக என் அதிபர்களான திரு.டேவிட் ஜீவராஜா மற்றும்  திரு. அல்பிரட் இன்னும் என் தமிழாசிரியர் பத்மராஜா , இவர்கள் அனைவரோடும் பலவேறு இடங்களில் வசித்தாலும் என் ஒவ்வொரு படைப்புக்களையும் படித்த கையேடு ஊக்கப்படுத்தி வாழ்த்துப் பாடும் என் எழுத்துலக நண்பர்கள் என பலரின் தூண்டுதலும் ஆதரவும் ஊக்கமும் தான் என்னை நிலை நிறுத்தியிருப்பதர்க்கு காரணம். அத்தோடு எங்கள் வானொலியில் பணியாற்றும் அறிவிப்பாளர்கள் நேயர்களென அனைவர்க்கும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளதோடு, என் கைவண்ணங்களையும் கண்டுகொண்டு அவற்றை தமது பத்திரிகைகள் மற்றும் இதழ்களை பிரசுரிக்கும் ஆசிரியர்கள் இதிலும் விசேடமாக மித்திரன் வாரமலர் மற்றும் சுடர் ஒளி,தினக்குரல், வீரகேசரி, இருக்கிறம்   சூரியன் எவ்.எம் ஆகிய ஊடகங்களுக்கும் என் நன்றிகள்.