சூரியன் எவ்.எம். அறிவிப்பாளர் சைலி,
இன்று வானொலிகளில் அனைத்து மக்களையும் தமது குரலால் கட்டிப் போட்டு, குறித்த வாநோளிகளுக்கென ஒரு நேயர் கூட்டத்தையே கட்டி வைத்திருக்கும் திறமை மிக்க அறிவிப்பாளர்கள் பலர் நம்முன்னே இருக்கின்றார்கள். அவர்களில் சூரியன் பண்பலையிலும் பலர் திகழ்கிறார்கள். இந்த வாரம் மித்திரனின் கலைஞர்கள் பகுதியில் செய்தி வாசிப்பிலும் சரி, சூரிய ராகங்கள் நிகழ்ச்சியை தொகுத்தளிப்பதிலும் சரி, மேடை நிகழ்வுகளை அலங்க்கரிப்பதிலும் என அனைத்திலும் ஆளுமையான தனது குரல் மூலம் ஒரு தரமான ஒலிபரப்பாளராக திகழ்கின்ற சைலியை மித்திரனுக்காக சந்தித்து உரையாடினோம். அவர் பகிந்த கொண்ட விடயங்கள் இனி ...
சூரிய ராகங்களில் கூவும் இந்தக் குயில் பற்றி..
நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே கண்டியில் தான். கடந்த பத்து வருடங்களாக கொழும்பில் வசித்து வருகிறோம். என்னுடைய குடும்பம் அன்பான அழகான சிறிய குடும்பம். அப்பா நாகமுத்து வியாபாரத்துறையில் ஈடுபட்டிருக்கிறார். அம்மா சேதுலக்சுமிp இல்லத்தரசி. அக்கா தர்சினி அவரும் ஊடகத்துறையை சார்ந்தவர். அவருடைய கணவர் ஸ்ரீ குமார் அவர் தனியார் நிறுவனமொன்றில் நிதிக்கட்டுப்பாட்டாளராக பணி புரிகிறார்.
சாதாரண தரம் வரை கண்டி பெண்கள் உயர்தர பாடசாலையிலும் பின்னர் உயர்தர கல்வியை கொழும்பு ராமநாதன் இந்து மகளிர் கல்லூரியிலும் பயின்றேன். பின்னர் பட்டய கணக்காளர் முகாமைத்துவ கணக்கியில் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளேன். இப்போது சூரியனில் நானும் ஒருத்தி.
எவ்வாறு உங்களின் ஊடகத்துறைக்குள்ளான ஆரம்பம் நிகழ்ந்தது?
சிறு வயது முதலே கல்வியை போன்றே கலை துறையிலும் அதிக ஆர்வம் காட்டி இருந்தேன். பாடசாலை காலங்களில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அந்த மேடையில் ஏதோ ஒரு விதத்தில் என்னுடைய பங்களிப்பு கட்டாயம் இருக்கும். இசை ,நடனம் ,பேச்சு ,நாடகம் ,என்று அந்த பட்டியல் நீண்டு கொண்டே போனது. அதற்கான சரியான ஒத்துழைப்பு பெற்றோர் மூலமும் கிடைத்தது. அதனூடாக என்னை வளர்த்துக்கொண்டேன்.
ஏற்கனவே என்னுடைய சகோதரி அறிவிப்பு துறையில் இருந்தமையால் இயல்பாகவே ஒரு ஆர்வம் என்னுள் இருந்தது,ஆனால் முழு நேரமாக இந்த துறையில் ஈடுபடும் எண்ணம் அப்போது எனக்கு இருக்கவில்லை.
உயர்தர பரீட்சைக்கு தோற்றிய பின்னர் ,அப்போது தனியார் வானொலி ஒன்றின் பணிப்பாளராக இருந்த அபர்ணாசுதன் மூலம் தான் வானொலியில் எனக்கான அறிமுகம் கிடைத்தது. விளையாட்டாக பகுதி நேரமாக ஆரம்பித்தது இப்போது இவ்வளவு தூரம் என்னை அழைத்து வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி..? அப்போது உங்களிடம் இருந்த மனநிலை..?
முதன் முதலாக என்னுடைய குரல் வானொலியில் ஒலித்தது செய்தி அறிக்கையின் மூலம் தான். முதல் செய்தி அனுபவம் இப்போது நினைத்தாலும் மனதுக்குள் பட்டாம்பூச்சி பறக்கும். பணியில் இணைந்து சரியாக ஒரு வாரத்தில் திடிரென ஒரு நாள் இந்த வாய்ப்பு வந்தது. வாய்ய்பு கிடைத்த சந்தோசம் ஒருபுறம் அதனை சரியாக பயனÊபடுத்த வேண்டுமே என்ற பய் மறுபுறமும் எட்டிப்பார்த்தது. முதல் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிந்தமையால் தொடர்ச்சியாக செய்தி அறிக்கைகளை வாசித்தேன்.
அன்று அபர்ணா அண்ணா எனக்கு மிக சந்தோசத்துடன் வாழ்த்திய அந்த தருணம் என்றுமே மறக்காது .பின்னர் ஒரு மாத கால இடைவேளையில் மாலை நேர நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். சூரியனை பொறுத்த வரை என்னுடைய பயணம் ஆரம்பித்தது சூரியராகங்கள் மூலமாகத்தான். என்னை சரியாக அடையாளப்படுத்திய நிகழ்ச்சியும் சூரியரகங்களே .
மறக்க முடியாத வானொலி வாழ்க்கையில் ஒரு நினைவின் பதிவு..?
என்னை பொறுத்தவரை வானொலியில் நான் பேசுகின்ற ஒவ்வொரு நொடியுமே மறக்க முடியாதது . முதல் நாள் ஒலிவாங்கிக்கு முன்னால் என் பெயர் சொல்லி செய்தி வாசித்த அனுபவமும் ,சூரியனில் நான் இணைந்தது முதல் இன்று வரை கடந்து வந்த ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு நினைவுகளை தந்து கொண்டே தான் இருக்கிறது.எனக்கான தனி அடையாளம் ஒன்றை சூரியன் எனக்கு தந்திருக்கிறது. ஆரம்பத்தில் ரமணன் அண்ணாவுடன் சூரிய ராகங்களை தொகுத்து வழங்கிய போது ஏராளமான விடயங்களை கற்றுக்கொண்டேன்.பின்னர் தனியாக சூரியராகங்களை தொகுத்து வழங்கிய போதும் நிறைய அனுபவங்களை பெற்றுக்கொண்டேன்.இப்போது டிலானுடன் இணைந்து நிகழ்ச்சி செய்யும் போது ஒவ்வொரு நாளும் நகைச்சுவையான சம்பவங்களுக்கு குறைவு இருக்காது. யாரு பேசுறிங்க? நிகழ்ச்சி ஒவ்வொன்றுமே மறக்க முடியாதது. இது தவிர அண்மைக்காலமாக நிறைய மேடை நிகழ்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதுவும் ஒரு வித்தியாசமான அனுபவம் தான். ஆக மொத்தத்தில் எல்லாமே எனக்கு மறக்க முடியாத அனுபவங்கள் தான்.
உங்களின் வளர்ச்சிக்கு பின்புலத்தில் இருப்பவர்கள்?
என்னுடைய வளர்ச்சியில் நிறைய பேருக்கு பங்கு இருக்கிறது. நான் இந்த நிலைமைக்கு வருவதற்கு அவர்கள் தந்த ஊக்குவிப்பும் வழிகாட்டலுமே காரணம். என்னுடைய பெற்றோர் எந்த சந்தர்ப்பத்திலும் என்னோடு இருந்து என்னை வழிநடத்துபவர்கள். எனக்கு கற்பித்த ஆசிரியர்கள். இது தவிர இன்று என்னை ஒரு அறிவிப்பாளராக அனைவரும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை வழங்கி எனுடைய திறமைகளை சரியாக பயன்படுத்த களம் அமைத்து தந்த சூரியனின் தலைமை நிகழ்ச்சி பொறுப்பதிகாரி திரு நவநீதன். அது போன்றே சூரியனின் ஆலோசகர் நடராஜா சிவம் அவர்களும் சிறப்பான முறையில் ஆலோசனைகளை தந்து என்னை பல தருணங்களில் சரியாக வழி நடத்தி சரியான விமர்சனகள் மூலம் நிகழ்சிகளை மேலும் சிறப்பாக படைக்க வழி வகுத்தவர்.இவற்ரில் ; என்னை இந்த துறைக்கு அறிமுகப்படுத்திய என்றும் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய அபர்னாசுதன் இவர்களுடன் என்னுடன் பணியாற்றிய அறிவிப்பாளர்களுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
அன்றைய ஷைலிக்கும் இன்றுள்ள சூரிய ராகங்கள் ஷைலிக்கும் என்ன வேறுபாடுகள்?
நிறையவே வித்தியசங்கள் இருக்கின்றன இந்த ஏழு வருடத்தில் துறை சார்ந்த பல விடயங்களை கற்றுக்கொண்டு என்னை ஓரளவு வளர்த்துக்கொண்டு இருக்கிறேன். மனிதர்களை படிக்க கற்றுக்கொண்டுள்ளேன். உலகத்தை கற்றுக்கொண்டுள்ளேன். எதையும் இலகுவாக எடுத்துக்கொள்ள பழகிக்கொண்டுள்ளேன்.ஒரு பெண்ணாக சவால்களுக்கு முகம்கொடுக்க என்னை தயார் படுத்த கற்றுக் கொண்டுள்ளேன் . எதிலும் எப்போதும் அவதானம் தேவை என்பதை உணர்ந்து கொண்டுள்ளேன். ஊடகத்துறை நிறைய விடயங்களை எனக்கு கற்றுகொடுத்து இருக்கிறது.
செய்தி வாசிப்பதில் அழகான உச்சரிப்பும், நேர்த்தியும் உங்களிடம் காணப்படுகிறது. இதற்க்கு நீங்கள் கைக்கொள்ளும் முறைகளையும் உங்கள் குரலின் இரகசியத்தையும் இனி இத்துறைக்குள் பிரவேசிக்க உள்ளவர்களுக்கு சொல்லுங்களேன்.?
பெரிதாக எந்த ரகசியமும் இல்லை.எதை செய்தாலும் அதை சரியாகவும் தெளிவாகவும் செய்ய வேண்டும் என்று எண்ணுபவள் நான்.எதை வாசிகின்றோம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும் பின்னர் அதனை மற்றவருக்கு புரிந்து கொள்ளகூடிய விதத்தில் நேர்த்தியாக சரியான உச்சரிப்புடன் செய்திக்குறிய தொனியில் வாசித்தால் இலகுவாக அது நேயர்களுக்கு புரியும் என்று நினைக்கிறன்.இதை தவிர பெரிதாக சொல்லும் அளவுக்கு ரகசியம் ஒன்றும் இல்லை.
ஒலிபரப்பு உலகை விட்டு வெளியில் வந்ததும் இந்த குயிலுக்குப் பிடித்த வேறு விடயங்கள்..?
அறிவிப்பு துறை தவிர ஏற்கனவே குறிப்பிட்டது போல பட்டய கணக்காளர் முகாமைத்துவ கணக்கியில் பாடநெறியை பூர்த்தி செய்துள்ளேன்.
இசையில் அதீத ஈடுபாடு உள்ளது .கருநாடக சங்கீதம் முறையாக பயின்றுள்ளேன்
நாட்டியத்திலும் அதே ஈடுபாடு உண்டு பரதநாட்டியம கதகளி இரண்டு நடன வகைகளிலும் முறையாக பயிற்;சி பெற்றுள்ளேன். இது தவிர எழுத்துத்துறையிலும் மொழி மாற்றம் செய்வதிலும் நிறைய ஆர்வம் இருக்கிறது.
உங்கள் ஆரோக்கியமான நண்பர்கள் பற்றி...
நண்பர்கள் நிறைய இருக்கிறார்கள் .இலகுவாக எல்லோருடனும் பழகுவதால் என் நட்பு வட்டம் கொஞ்சம் பெரியது.நிறைய ஆரோக்கியமான நண்பர்கள் இருகிறார்கள்.என் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள். என் பாடசாலை கால நண்பர்கள் தான்.எதிர்ப்பார்புகள் இல்லாமல் எப்போதுமே எனக்காக இருப்பவர்கள்.இப்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இ சிலர் நாடு கடந்து இருந்தாலும் இன்னும் அந்த நட்பு தொடர்கிறது.துறை சார்ந்த நண்பர்களும் நிறையவே இருக்கிறார்கள்.நண்பர்களால் நிறைய நன்மை அடைந்தவள் நான்.
உங்களது பயணத்தில் திருமணம் எப்போது?
பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வெகு விரைவில் நடைபெறும்
மேலும், அறிவிப்பாளனாக வேண்டும் எனும் குறிக்கோளோடு காத்திருக்கும் இளையவர்களுக்கு உங்களது ஆலோசனை...?
புதிதாக இந்த துறைக்கு வர வேண்டும் என நினைப்பவர்கள் தங்களை அதற்கு தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.முக்கியமாக குரல் வளம் ,தமிழ் உச்சரிப்பு,அத்துடன் புதிய விடயங்களை தேடும் ஆவல் நிச்சயம் தேவை .தனியே பாடல்களை மாத்திரம் ஒலிபரப்பும் அறிவிப்பாளராக இல்லாமல் உங்களுக்கான தனித்துவத்தை உருவாக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.முயற்சியும் உழைப்பும் நேர்மையும் பொறுமையும் இருந்தால் நீங்களும் ஜொலிக்கலாம்.
இந்த குயிலின் எதிர்காலம் இமயத்தைத் தொட மித்திரனின் வாழ்த்துக்கள்.
-இராமசாமி ரமேஷ்-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக