வெள்ளி, 30 மார்ச், 2012

கவிதை மாதிரி...

கற்றுக் கொடுங்கள்
பூக்களே...
மனிதருக்கும் புன்னகையை!!

கூட்டத்தில்
மனிதநேயம் காப்போம்
என்றுவிட்டு
வீட்டில்
மாட்டிறைச்சிக்கறி விருந்து...

காத்திருக்கிறேன்!!
எனக்கும்
காதல் வருமென்றல்ல..
காணாமல் போன
கணவர் வருவாரென்று...

கட்டாயப்படுத்தி
கையளிக்கப் படுகின்றன
விதவை எனக்கு
வித விதமான பட்டங்கள்..

தேடிக் களைத்துவிட்டேன்
தேநீர் ஊற்றிய அம்மாவை....
கை மட்டும் இருக்கிறது
ஏனையவை......?

நீதிமன்றங்கள் நிறைகின்றன
விவாகரத்துக்கள்
வீதிவரை நிற்பதால்...

அக்கா
அரைப் பவுன் செயினாம்
அண்ணா
அவசரமாய் பைக்காம்
அம்மா மட்டும்
அன்பு மட்டும் போதுமாம்!!

நானும் வசதியானவன்
கண்ணீரும்
கனவுகளும்
என்னிடம் ஏராளமுள்ளன...
--------------------------------------------------
அளம்பில்
இராமசாமி ரமேஷ் .




செவ்வாய், 27 மார்ச், 2012

தலைநகரத்து தவிப்புக்கள்...

இந்த வேலை வேண்டாமென்று
வந்ததையும் விட்டுவிட்டு
தகுதியான வேலைதேடி
தலைநகரம் ஓடிவந்தேன்...
...
இங்குவந்து பார்த்த பின்தான்
இதயம் நொந்து போகிறது
தகுதியான வேலைசெய்தே
கைகள் வெந்து நோகிறது...

அம்மா
தனது தோடு விற்று
தந்த பணமும் கரைந்து போச்சு
அக்கா வளையல் விற்று வாங்கி
தந்த உடைகள் கிழிஞ்சு போச்சு...

தலைநகரச் சம்பளத்தில்
தலைகுனியும் நிலை அதிகம்
கண்ணீர் சிந்தி கதறுகின்ற
போலி வாழ்வே மிக அதிகம்...

உறவுகளைப் பிரிந்து வந்து
உணவு தேநீர் தியாகம் செய்து
எத்தனையோ இடர்களோடு
இந்த வாழ்க்கை தேவைதானோ...?

வந்த வேலையைச் செய்துகொண்டு
சொந்த ஊரில் வாழ்தல் நன்று
இங்கே கிடந்து தவிப்பதினால்
மனத்துணரே மீதமுண்டு...!!

இராமசாமி ரமேஷ்-

வியாழன், 15 மார்ச், 2012

கேளிக்கையாகிப் போனோமே.....!!!


எங்கள்
சிதறி   மணக்கின்ற
இரத்தமும்....
குதறிக் கிழிக்கப்பட்ட
தசைத் துண்டங்களும்....
ஆங்காங்கே சிதைந்து
ஊனம்  வடிகின்ற அங்கங்களும்...
காகங்கள் புசித்து மகிழ்ந்த
எங்கள் உறவுகளின்
உயிர்  பிரிந்த உடல்களும்....
சங்காரம் செய்து
உருக்குலைந்த எங்களின் உடமைகளும் ....
பலருக்கு கேளிக்கை !! 
இன்னும் சிலருக்கு வியாபாரம்!!
மற்றொரு தொகுதிக்கு அரசியல்...!!
ஏன்? எங்களவர்களுக்கே
எப்பொழுதோ  நடந்து முடிந்த கதையாய்.....
விழிதுடித்து வடிக்கிறது கண்ணீர்
வழியில்லை யாரிடமும் சொல்ல
இதயக்கரங்களால் பூசிக்கிறேன்
என் நினைவுக்குள்  இருக்கும்
கொலைக்களத்தில் கொல்லப்பட்ட  உறவுகளை.....!!!

வருவீரோ எம்மைத் தேடி...


தேயிலைச் செடிகளோடு
போராடி
எங்கள் வியர்வைத்துளிகளால்
உங்கள் வாழ்வாதாரத்தை நிரப்பினோம்....

அடிப்படையாய்
எமக்கேதுவும் இல்லாவிட்டாலும்
வாழ்க்கைதந்த நாடு என்று
வலிசுமந்தோம் தொழிலாளிகளாய்....

பொழுதெல்லாம் பாடுபட்டு
இரவதிலே ஓய்வெடுக்க
ஒத்தத்துண்டு நிலமில்ல
உரிமை சொல்ல வீடில்ல

பள்ளியில்ல பாடமில்ல
புள்ளைகளின் கல்வியில்ல
வீதியில்ல வேலையில்ல
வேற இங்க ஒண்ணுமில்ல

ஓட்டுக் கேட்க கூட்டம் வரும்
காதுகுளிர கதைகள் சொல்லும்
வாக்குப் பெற்று வந்ததுமே
சொன்ன கதை காற்றில் போகும்

பசுமைக்குள்ள நாமிருந்து
வெறுமைதானே எங்க நிலை
உரிமை கேட்டு பேசினாலும்
எதுவும் வந்து சேர்வதில்லை

பேசிப் பாத்தோம் அழுதும் பார்த்தோம்
பெரிய இடத்தில் போயும் கேட்டோம்
போங்க நாங்க வாரோம் என்றீர்
இன்னும் அந்த வருகை இல்ல

இன்னும் நாங்கள் காத்திருக்கோம்
வருகைக்காய் பார்த்திருக்கோம்
எங்க தேசம் வாருங்கையா...
துன்பந்தனை தீருங்கையா...

புதன், 14 மார்ச், 2012

ஜெனீவா கூட்டத்தொடரும், இலங்கையின் கையறு நிலையும்


இப்போது உலக அரங்கிலே அனைத்து தரப்பினராலும் மிகவும் எதிர்பார்ப்போடும் அதேசமயம், உன்னிப்பாகவும் கவனிக்கப்பட...்டுக்கொண்டிருக்கின்ற விடயமாக மாறியிருக்கிறது ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர். இக்கூட்டத்தொடரில் ஜக்கியநாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்ற நாடுகள் அனைத்தும் கலந்துகொள்கின்ற போதும், மிகவும் முக்கியமாக அவதானிக்கப்படுகின்றன இரு நாடுகள்.ஒன்று இலங்கை, மற்றையது வல்லரசு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா. இரண்டுநாடுகளும் கூட்டத்தொடர் ஆரம்பித்த காலகட்டத்த்தில் பனிப்போர் நடத்தின. இப்போடு தமது ஊடகங்களை வைத்துக்கொண்டு பாரிய, பலதரப்பட்ட குற்றச்சாட்டுக்களை இருநாடுகளும் மாறிமாறி அள்ளிவீசி வருகின்றன.
அமெரிக்கா இப்படி தம்மீது பாரிய பிரச்சினையை கட்டவிழ்த்துவிடும் என இலங்கை ஒருபோதும் நினைத்திருக்கவில்லை. பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாக, இலங்கை அரசின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் நிறைவடைந்தது மட்டுமல்லாமல் ஒரு இக்கட்டான சூழலையும் தோற்றுவித்து நிற்கின்றது. அமெரிக்க அரசும் இலங்கை அரசை கவிழ்த்துவிட சந்தர்ப்பத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. ஜநாவும் அதற்கான சந்தர்ப்பத்தை மனிதஉரிமைகள் கூட்டத்தொடர் எனும் பெயரில் வழங்கியுள்ளது. இலங்கை அரசு எண்ணியே பார்த்திராத பிரச்சினைகளையெல்லாம் வெளிக்கொண்டுவர அமெரிக்கா பலமான ஆதாரங்களோடு முதற்கட்டமான தமது 'இலங்கை அரசின் மனிதஉரிமை மீறல்கள்” தொடர்பான அறிக்கையை ஜநாவுக்கு கையளித்திருந்தத அனைவரும் அறிந்திருந்த விடயம். இலங்கை அரசாங்கமும் பதிலுக்கு, தமது கீர்த்திக்கு அவதூறு விளைவிக்கவே அமெரிக்க அரசு முனைவதாக தங்களட காரசாரமான அறிக்கைகளை நாளாந்தம் விடுத்துக்கொண்டிருக்கிறார்கள். தாம் ஒருபோதும்
மனிதஉரிமை மீறல்களை எச்சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளவில்லையென இலங்கை தம்பக்க நியாயங்களைக் கூறி அயல்நாடுகளிடம் தமக்கு ஆதரவு தரும்படி கேட்டுநிற்கின்றது. வன்னிமக்களுக்கும், ஏனைய தமிழ்பேசும் சமுதாயத்தினருக்கும் இலங்கை அரசு நிகழ்த்தியிருந்த மனிதஉரிமை மீறல்களை அண்மைக்காலமாக விக்கிலீக்ஸ் எனும் புலனாய்வு ஊடகம் அப்பட்டமாக வெளிக்கொண்டுவந்துகொண்டிப்பதும் தற்போது இலங்கை அரசுக்கு பெரிய பேரிடி. அதனையும் வஞ்சுமளவுக்கு பல நாடுகளையத் இலங்கைக்கெதிராக திருப்பிவிடும் பிரச்சினையாக இந்த அமெரிக்க அரசின் செயற்பாடு அமைந்திருக்கிறது.

இந்தவகையில், இலங்கையின் உறவினைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக மௌனம் சாதித்துவந்த நாடுகளும் இன்று போர்க்கொடி தூக்க ஆரம்பித்துவிட்டன. இத்தகைய மனிதஉரிமை மீறலை தாமும் எதிர்ப்பதாக தங்களத ஆதரவை அமெரிக்காவின் பக்கம் திருப்பிவிட்டதும், இலங்கை கையைப் பிசைந்துகொள்ளும் நிலைக்கு ஆளாகிவிட்டது. ஆதரவுக்கு ஜோர்தான் போன்ற அரபுநாடுகள்தான் சில அடைக்கலம் கொடுத்துள்ள இந்நிலையில், அவைகளும் அமெரிக்காவைப் பகைத்துக்கொள்ள முடியாத தருணத்தில் கழன்றுவிடக் கூடிய சாத்தியங்களும் நிறையவே உள்ளன. ஆகமொத்தத்தில், இலங்கை அரசு அமெரிக்கா மற்றும் ஏனைய உலகநாடுகளின் கேள்விகளுக்கும் கண்டிப்பாய் பதிலளிக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டிpருக்கிறது. எனவே, இப்போது அமெரிக்க அரசின் மனிதஉரிமை மீறல்களும் அதன் செயற்பாடகள் தொடர்பான கிளறல்களும் இப்பொது இலங்கை அரசினால் தோண்டப்படும் நிலையில் பொறுத்திருந்து பார்ப்போம் நீதியும் நியாயமும் சரியாக தீர்ப்புக்குள் உள்வாங்கப்பட்டு விட கிடைக்கிறதா என்று! .

அபிவிருத்தியை எதிர்நோக்கும் முல்லைத்தீவு பொதுச் சந்தை..


அபிவிருத்தியை எதிர்நோக்கும் முல்லைத்தீவு பொதுச் சந்தை..
1990 களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் முல்லைதீவு நகரம் முடங்கிக் கிடந்தது. அன்றுமுதல் இன்றுவரை அபிவிருத்தி என்பது ஆமை வேகத்தில்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தமிழரும் முஸ்லிம் களும் சிங்களவரும் சகஜமாகக் குடியிருந்து தொழில் செய்து சீவித்த முல்லை மண் யுத்தத் தில் சிக்கி சின்னாபின்னமாகிய கொடுமையை வார்த்தைகளால் வடிக்க முடியாது. தற்போது முல்லைமண் மந்த கதியில் சிறிது சிறிதாய் புத்துயிர் பெற்று வருவது மனதுக்கு சற்று ஆறுதல்.
அவலங்களை சுமந்து கொண்டு அகதிகளாய் வாழ்ந்து வரும் இந்த மாவட்ட மக்களுக்கு இது வரை எந்தவிதமான அடிப்படைத் தேவைகளும் பூர்த்திசெய்யப்படவில்லையென மக்கள் தெரிவிக்கிறார்கள். செல்வச் செழிப்போடு வளமான மக்களாய் வாழ்ந்த இந்தத் தேசத்து மக்களின் வாழ்வாதாரம் வணிகத்தை அடிப்படையாகக் கொண்டது. கடலுணவுகள் தானியங்கள் உற்பத்திப் பொருட்கள் எனத் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பொருட்களை தாமே வாணிபம் செய்து தன்னிறைவானதொரு பொருளாதாரத்தை இம் மாவட்டமும் மக்களும் சுமந்திருந்தார்கள். ஆனால் இன்று அவை யாவும் தலைகீழாய் நிற்பதுதான் கொடுமை.
முல்லைத்தீவின் தெற்கே கொக்குத்தொடுவாய் அடங்கலாக உள்ள அத்தனை மக்களும் இன்று தமது தேவைகளைப் பூர்த்தி  செய்து கொள்வதற்காக முல்லைத்தீவு நகரத்தையே நாடி வருகின்றனர். காரணம், அரச திணைக்களங்களும் சரி ஏனைய தனியார் நிறுவனங்களும் சரி அத்தனையும் இன்று முல்லைப் பட்டினத்தைத்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. திருகோண மலையில் இருந்தும் யாழ்ப்பாணம்,கொழும்பு,புத்தளம்,கண்டி,வவுனியா என பிற மாவட்டங்களில் இருந்தும் இப்போது முல்லைத்தீவுக்கு பயணிகள் பேரூந்துகள் வந்து போகின்றன. உல்லாசப் பிரயாணிகள் வியாபாரிகள் பெரிய வர்த்தக நிறுவனங்கள் என முல்லைத்தீவு இப்போது பரபரப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. நவீனத்துவம் ஏதுமற்ற நகரமாக இருந்தாலும் ஓய்வில்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றது. முல்லைத் தீவிலுள்ள கிராமங்களைத்தான் யாரும் கண்டுகொள்வதே கிடையாது. நகரமாவது விரிவடையட்டும் தம் தேவைகளை அங்கு சென்றாவது பூர்த்திசெய்துகொள்வோம் என்று மக்கள் பெருமூச்சு விடுகின்றனர். ஆனாலும் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பீட்டு ரீதியில் பார்க்கும் போது முல்லை நகரம் இன்று பின்தங்கிய நிலையில்தான் இருக்கின்றது.
ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு முதுகெலும்பாய் பிரதானமாய் இருக்கின்ற பொருளாதாரமானது பெரும்பாலும் சந்தைகளை மையப்படுத்தித்தான் பார்க்கப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு பொதுச் சந்தையோ ஒரு குடும்பம் குடியிருக்கும் வீட்டின் அளவில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது. குறுகிய இடத்தினுள் வணிகம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் பரபரப்புக்கும் வியாபாரத்துக்கும் பஞ்சமே இல்லை.
ஒரு பக்கம் மீன் சந்தையும், அடுத்த பக்கம் பழக்கடைகளும் மறுபுறத்தில் வெற்றிலைக் கடைகளுமாய் சிறிய நிலப்பரப்புகளை தமது வியாபாரத் தளமாய்க் கொண்டு வேகமாக வாழ்வாதாரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மக்கள். சிவப்பு நிறப் ப+ச்சு அடிக்கப்பட்ட சிறிய பெட்டிக் கடைதான் இறைச்சி விற்கப்படும் கடை.
சுத்திகரிக்கப்படாத பொதுக் கிணறு, சரியாகப் பேணப்படாத மலசலகூடங்கள் என சுகாதாரமே இல்லாத பிரதேசமாய் இந்த பொதுச்சந்தை காட்சியளிக்கின்றது. கால்நடைகள் சுதந்திரமாக சந்தைக்குள்ளேயே உலாவருகின்றன. மொத்தத்தில் ஒரு பொதுச் சந்தைக்குறிய எந்தவித வசதிகளும் அற்ற நிலையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தனை காலமாய் போரைக் காரணம் காட்டி வன்னிப் பிரதேசம் அபிவிருத்தியை அடைய முடியாமல் தட்டிக் கழிக்கப்பட்டது. இன்று போர் முடிவுற்று இரண்டு வருடங்களாகியும் எதுவுமே நடப்பதாய்த் தெரியவில்லை.
அந்தச் சந்தையில் வெற்றிலை வியாபாரம் செய்துகொண்டிருந்த தவமணி அம்மாவை சந்தித்தபோது ‘தம்பி நாங்களும் எல்லோரிடமும் கேட்டுப் பார்த்துவிட்டோம். ஆனால் இதுவரை யாரும் முன் வந்து இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரவில்லை. நாங்கள் சாதாரணமானவங்க. அதனால எங்கட வயித்துப் பாட்டுக்கு அன்றாடம் உழைச்சால்தான் குடும்பம் ஓடும். இனி என்ன தம்பி நாங்க செய்யிறது?’ என்று ஆதங்கப்பட்டார்.
அவருக்கு சற்று தொலைவில் மீனை வெட்டி விற்பதற்குக்கூட வசதி இல்லாமல் ஒரு பலகையில் மீனை வைத்து வியாபாரம் செய்துகொண்டிருந்தார் வேலும்மயிலும் என்ற வயதானவர். அவரை அணுகி இப்பிரச்சினைகள் பற்றி நீங்கள் யாரிடமும் தெரிவிக்கவில்லையா என்று கேட்டேன். ‘ஏன் இல்லை? பிரதேச பிரதிநிதிகள் ஏனைய தொண்டு நிறுவனங்கள் என்று எங்கள் பிரச்சினைகளை சொல்லாத இடமில்லை. வெகு விரைவில் தீர்வு கொண்டுவரப்படும் என்று செல்கிறார்களே தவிர ஆனது ஒன்றும் இல்லை’ என்று அலுத்துக்கொண்டார். மீன் துண்டுகளுக்காக காகங்கள் அவரைச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தன.
இவர்களின் முறைப்பாடுகள் பற்றி பொதுச்சந்தையில் வரிப்பணம் பெறும் ஊழியரான திலீபனை அணுகி கருத்துக் கேட்டோம். ‘இவர்கள் சொல்லுவது உண்மைதான். அரச அதிகாரிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், பிரதேச சபையைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானவர்கள் வந்து பார்த்தார்கள் இன்னும் ஒரு வருடத்தினுள் புணரமைத்துத் தரப்படும் என்றார்கள். ஆனால் இன்னும் விடிவு வரவில்லை’ என்றுதான் அவரும் கூறினார்.
இப்படிச் சென்றால் இவர்களது பிரச்சினையை யார் தீர்ப்பது. சில மேலிடங்கள் தங்களுக்கு சொந்தமான பிரதேசங்களில் என்ன நடக்கின்றது என்பதே தெரியாமலும் இருக்கின்றார்கள் என்றால் நம்புவீர்களா? இம்மக்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் பத்திநாதரை சந்தித்து மக்களது பிரச்சினைகளை முன்வைத்தேன்.
‘இப்படி ஒரு தேவையும் பிரச்சினையும் இருக்கிறது என்பதே நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது. நான் பதவியேற்றதன் பின் இது தொடர்பாக பொது மக்களோ அல்லது பிரதேச சபையைச் சேர்ந்hவர்களோ என் கவனத்துக்குக் கொண்டுவர வில்லை. அப்படிக் கொண்டு வந்திருந்தால் நான் இப்போது கண்டிப்பாக நடவடிக்கை எடுத்திருப்பேன். இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இந்தப் பிரச்சினை தொடர்பாக உள்ளுராட்சிசபையினரோ அல்லது பொது மக்களோ எனக்குத் தெரியப் படுத்தினால் இந்த நிதியான்டு முடிவடைகிறது வருகின்ற நிதியான்டில் நிச்சயமாக இதற்கு நான் முடிவு கொண்டு வருவேன்’ என்றார்.
ஆனால் மக்களோ உரியவர்களிடம் தெரிவித்ததாகவே கூறுகின்றனர். எதற்கும் எழுத்து மூலமான முறைப்பாடுகள் அவசியம் என்பது இப்போது புரிகிறது. மக்கள் அவ்வாறு செய்திருந்தால் இன்று தங்களுக்குத் தெரியாது என்று யாரும் தட்டிக்கழிக்க முடியாது. ஆனாலும் முல்லைத்தீவில் இருக்கும் பிரதான பொதுச் சந்தையில் இப்படி குறைபாடுகள் காணப்படுவது தங்களுக்குத் தெரியாது என்று பொறுப்பு வாய்ந்த பதவியில் இருப்பவர்கள் கூறுவதுதான் வேடிக்கையானது.
எது எப்படியோ முல்லைத்தீவு மக்கள் தம் பிரச்சினைகள் பற்றி சம்பந்தப்பட்டவர்களிடம் எழுத்துமூலம் தெரிவிக்கவேண்டும். சந்தைக்கென ஒரு பாதுகாப்பான நிரந்தரக் கட்டிடத் தொகுதி ஒன்று அத்தியாவசியமானது. மக்களது முறைப்பாடுகள் தன்னிடம் வந்து சேரும் பட்சத்தில் அதற்கான தீர்வுகளை பெற்றுத்தரமுடியம் என்கிறார் முல்லைத்தீவு அரச அதிபர். பொறுத்திருந்து பார்ப்போம்.
இராமசாமி ரமேஷ்.