புதன், 30 மே, 2012

செய்தி இணையத்தளங்களின் கவனத்திற்கு...!!


மிக வேகமாக மக்களிடம் நடப்பு விடயங்களை செய்திகளாக்கி கொண்டுசென்று சேர்ப்பது இப்போதைய நவீன ஊடகங்களான இணையத் தளங்கள் தான். இவற்றில் பல ஒலி,ஒளி ஊடகங்களை விட முதன்மை வகிப்பது செய்திகளை பிரசுரிக்கும் இணைய தளங்களே! இவை இப்போதெல்லாம் தடம் புரள்வதான பாதையில் நகர்ந்து கொண்டிருப்பது அடிக்கடி இடம்பெறுகிறது.
           அதாவது, செய்திகளை முந்திக் கொண்டு வெளியிடவேண்டும் என்ற நோக்கோடு அடித்துப் பிடித்துக்கொண்டு தமக்குக் கிடைக்கும் ஆராயப்படாத தகவல்களை உடனேயே செய்திகளாக்கி அவற்றில் தொடர்பு படாத புகைப்படங்களைப் பிரசுரித்து தம்மை முதன்மையான செய்திச் சேவைகளாக நிலை நிறுத்த முனைகின்றன. இப்படியான செயற்பாடுகள் பலருடைய வாழ்க்கையில் களோபரத்தையும், அசம்பாவிதங்களையும் ஏற்படுத்தும் என்பதை இந்த இணையதளங்களின் நிர்வாகிகள் மறந்து விடுவது வேதனையளிக்கிறது. 
இந்த தவறான செய்திகளை வெளியிடுவதோடு அச்செய்திகளில் வாசிக்க முடியாதளவுக்கு எழுத்துப் பிழைகளும் சொற்  சிதைவுகளும் காணப் படுகின்றன. கருத்து மாறிய வார்த்தை பிரயோகங்களும் இரட்டை அர்த்த வசனங்களும் பயன்படுத்தப் படுகின்றன. 
இன்று இணையத்தளங்கள் பல தரப்பினரும் பார்வையிடும் தளங்களாக மாறிவிட்டன. இவ்வாறான செயற்பாடுகள் இணையத்தளங்கள் புறக்கணிக்கப் பட்டுப் போகும் நிலைக்கு வழிகோலும் என்பதில் ஆச்சர்யமில்லை. எனவே, நம் நாட்டிலுள்ள இணையதளங்களும் சரி, வெளிநாடுகளிலிருந்து இயங்கும் தளங்களும் சரி. இந்த விடையத்தை அனைவரும் கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தமுள்ளது. 




எனது நேத்ரா தொலைக்காட்சி நேர்காணல்...

புதன், 23 மே, 2012

வெறுக்கப்படாத என் விருப்பங்கள்..


அம்மா மடி...
அப்பாவின் விரல்பிடித்த நடை...
அண்ணா அக்காவோடான சண்டை...
பாட்டி சொன்ன கதை...
வண்டில் உருட்டும் வெளி...
ஒளித்துப் பிடித்தாடும் பொட்டல் காடு...
குத்துக்கரணம் செய்யும் குளம்...
பட்டம்விடும் வானம்...
பள்ளிக்குப் போகும் குச்சொழுங்கை...
பயமில்லாத இரவு...
படித்தபடி தூங்கிய குப்பி விளக்கு...
அம்மாவின் சேலைப் போர்வை...
தலைகோதும் ஆசான்...
எப்போதும் நட்போடு சுற்றும் நண்பர்கூட்டம்...
மரத்தடி வகுப்பறை...
கிரவல் வீதிப் பயணம்...
நினைக்க வாயூறும் நாவல் இலந்தை...
பிள்ளையார்கோயில் பொங்கல்...
பெத்தம்மா ஆச்சியின் குழல்பிட்டு..
ராசப்பா  கடை முட்டாசு...
காத்தான் கூத்து...
கரகம் காவடி கும்மி...
தடையில்லா தேசம்...
இத்தனையும் புதைந்து விட்டன
இயந்திரமாய் நகரும்
எனது நகரத்து வாழ்க்கையில் ...
மாடிவீட்டிலும் பஞ்சு மெத்தைக்குள்ளும்
வந்திடப் போவதில்லை
எங்கள் கிராமத்து சுகங்கள்...
இராமசாமி ரமேஷ்..
அளம்பில்



காலம் மாறிப் போச்சு-



 
சிறுகதை- 

................................................................................
தம்மைச் சுமந்து வந்து நின்ற ஒட்டோவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு எதிரே தெரிந்த வாயிற்கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார்கள் அவர்கள் இருவரும்.
“மம்மி! யாரோ வர்றாங்க...” குழந்தை நிதாஷின் அழைப்பைக் கேட்டுஇ வெளியே வந்தாள் மேனகா. எதிரே வந்தவர்களைக் கண்டதும் முகம் மலர்ந்தது. “வாங்க மாமா! மாமி வாங்க... “அவர்களின் கைகளிலே தொங்கிக் கொண்டிருந்த பைகளை வாங்கிக் கொண்டேஇ உள்ளே அழைத்துப் போய் இருக்க வைத்தாள். யார் இவர்களெனஇ இரு வழிகளினாலும் நோட்டமிட்டபடி நின்ற குழந்தையிடம் நிதாக்குட்டி! இவங்க யாரு தெரியுமா? இது உன்னோட அப்பம்மா. இவங்க உன்னோட அப்பப்பா. போய் பேசு... “ என்ற மேனகாவையும் பெரியவர்களையும் மாறிமாறிப் பார்த்தது குழந்தை.
“பார்த்தியாம்மா... குழந்தைக்கு எங்களை யார்னு கூடத் தெரியலை. இதுதான்... குடும்பத்தோட ஊருக்கு வாடா வாடான்னா... உன் புருஷன் வரமாட்டான். இப்ப பாரு! குழந்தை முழிக்கிறா...” சலித்துக் கொண்டார் இராமலிங்கம். ‘மாமா... எனக்கும் ஆசைதான். எத்தனையோ தடவை கேட்டேன் அவர்கிட்ட. வேலை அதிகமா இருக்கிறதால வர லீவு கிடைக்கிறதில்லை மாமா. சரி சரி! இதோ... குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்... பேசிக் கொண்டிருங்க” அவள் உள்ளே போனாள்.
தம் மகனின் குழந்தையைஇ கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த மகேஸ்வரி “வாடா செல்லம்! அப்பம்மா கிட்டே வா... இங்க பாரு! பிள்ளைக்கு... என்ன கொண்டு வந்திருக்கிறேன் என்று” பையினுள் இருந்த கறுத்துதக் கொழும்பான் மாம்பழங்களை நீட்டியபடி பிள்ளையை அணைக்க எத்தணித்தாள். குழந்தை அசையாமல் அப்படியே நின்றது.
“நிதாக்குட்டி... அப்பம்மா கிட்டே போம்மா. அங்க பாரு. பெரிய மாம்பழம். நம்ம வீட்ல புடிங்கனது... “அவரும் சேர்ந்து அழைத்த போதுஇ மேனகாவும் இரு குவளைகளில் பழரசத்தோடு வந்தாள். “நிதாம்மா! அப்பம்மாட்ட போங்கடா. ம்.... பயப்பிடக் கூடாது. இவங்க புள்ளையோட சொந்தக்காரங்கதான்...” தாயின் பேச்சோடுதான்இ இருவரிடமும் வந்து ஒட்டிக் கொண்டாள் குழந்தை.
சேர்ந்து கொண்ட குழந்தையை வாரி அணைத்து முத்தமிட்டார்கள் இருவரும். ஒன்றரை வருடங்களின் பின்பு தானே வந்திருக்கிறார்கள். அந்த அத்தனை நாள் கனவுகளையும்இ நிஜமாய் தரிஷித்த போது மனங்களிலே நிறைவே சூழ்ந்திருந்தது. மகேஷ்வரி தன்னோடே குழந்தையை வைத்துக் கொண்டாள். அவர் தன்னிடம் தரும்படி அடம்பிடித்தார். இருவரினதும் உண்மையான நேசிப்பை உணர்ந்தவளாய்இ குழந்தை அவர்களோடு ஒன்றித்துப் போனது. பலனை எதிர்பார்த்து போலியான பாசம் வைக்கும் இந்தக் காலத்தில்இ இத்தனை அன்பு வைத்திருக்கிறார்களே... என நினைக்கும் போதேஇ மேனகாவின் உள்ளம் சந்தோஷித்தது.
ஊர்ப் புதினங்களையும் பயண அனுபவங்களையும் பரஸ்பரம் தம் மருமகளோடு பறிமாறிக் கொண்டார்கள். மேனகாவும் இங்கே நடக்கின்ற சம்பவங்களையும் விஷேடங்களையும் பகிர்ந்து கொண்டிருந்தாள்.
“ஏம்மா மேனகா! இங்க உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லையா?” ஏதேனும் இடர்பாடுகள் இருக்குமோ எனஇ மருமகளிடம் கேட்டார். “ச்சேச்சே! ஒரு கஷ்டமும் இல்லை மாமா. ஏன் மாமா? நீங்க வரப்போறதை போன்பண்ணி சொல்லி விட்டு வந்திருக்கலாமே! ஏற்கனவே தெரிஞ்சிருந்தா... அவரும் இன்னைக்கு லீவு போட்டிருப்பார்”
“அதனால என்னம்மா. நாளைக்கும் லீவு போடலாம் தானே! பரவாயில்லை. குழந்தை இப்போ ரொம்பவே பேசுறாளே...” மனைவியின் மடியிலிருந்த நிதாவின் கன்னங்களைத் தட்டியவாறேஇ சொன்னார் இராசலிங்கம்.
“மாமி! நீங்க குளிச்சுட்டு ரெஸ்ட் எடுங்க. நான் சாப்பாடு தயார் பண்றேன். மாமா சுடுதண்ணி வெக்கட்டுமா?” கரிசனையோடு கேட்ட மருமகளிடம் “சுடுதண்ணி வேண்டாம்மா. இந்தத் தண்ணியே போதும். என்னங்க! நீங்க போய் குளிங்க. நான் மருமகளுக்கு... ஏதாவது உதவி பண்றேன்” என்ற மகேஷ்வரியை கையமர்த்தினாள் மேனகா. “அதெல்லாம் ஒண்ணும் வேணாம் மாமி. நானே பண்ணிக்குவேன். நீங்க குளிச்சிட்டு ரெஸ்ட் எடுங்க...”
அவள் சமையலறைக்குள் நுழைந்து கொள்ளஇ இவர்கள் குழந்தையோடுஇ ஐக்கிய மானார்கள்.
யாழ்ப்பாணத்திலேஇ ஒரு சாதாரண குடும்பம்தான் இராசலிங்கத்தினுடைய குடும்பம். தபால் நிலையத்தில் பியூனாகவே வேலை செய்தார். அதிகரித்துக் கிடக்கும் விலைவாசியில்இ வருகின்ற வருமானம் வாழ்க்கைச் செலவை சமாளிக்க போதுமானதாக இல்லாவிட்டாலும்இ ஏதோ பிரயத்தனப்பட்டு செலவை இயன்றவரையில் குறைத்துக் கொண்டார்கள்.
யாழில் கண்டதெல்லாம் காசு தானே! கண்ணியமாக வாழ்ந்தார்கள். இவ்வாழ்வின் பயனாக மகன் மதனைஇ படிக்க வைத்து அரச உத்தியோகம் பார்க்க வைக்க வேண்டுமென்பது தான் பெற்றவர்களின் கனவு. வருகின்ற ஊதியத்தில் வீட்டுத் தேவைகளைக் குறைத்துக் கொண்டுஇ மகனின் கல்விக்காக செலவு செய்தார்கள். எந்தவித கஷ்டத்தையும் அவன் அனுபவிக்கக் கூடாது என்பதற்காகஇ தாங்களே சுமைதாங்கிகளா னார்கள். உயர்தரம் முடித்து சிறந்த பெறுபேற்றோடு புலமைப் பரிசிலின் உதவியோடுஇ பல்கலைக்கழகம் புகுந்தான் மதன். காலம்இ காற்றிலே சிக்குண்ட கடதாசியாய் காணாமல் போய்க் கொண்டிருந்தது.
பல்கலைக் கழகத்திலிருந்து ஒரு விரிவுரையாளனாக வெளியே வந்தான். கூடவே காதல். மகனின் விருப்பமே தம் விருப்பமெனஇ திருமணத்தையும் செய்து வைத்தார் இராசலிங்கம். தனது தகுதிக்கு அங்கே வேலை செய்ய முடியாதெனவும்இ கொழும்புக்குப் போக வேண்டுமெனவும் பெற்றவர்களிடம் கூறஇ தமது உழைப்பில் எதிர்காலம் கருதி சேமிப்பில் வைத்திருந்த பணத்தைக் கொடுத்து கொழும்புக்கு அனுப்பி வைத்தார்கள். அடிக்கடி வந்து பார்த்துப் போனார்கள் பெற்றவர்கள். இவன் வேலையை காரணங் காட்டி தவிர்த்து விடுவான்.
இராசலிங்கத்தின் வயதும் அதிகரிக்கஇ வேலையும் விடைகொடுத்து ஓய்வூதியம் தரப்பட்டது. அது அவர்கள் இருவரினதும் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லாத போதும்இ தம் மகனிடம் கேட்பதில்லை. வாழ வேண்டிய இளசுகளை கஷ்டப்படுத்தக் கூடாதென இருந்து விட்டார்கள். மதன் எப்போதாவது அத்தி பூப்பதுபோல் சில ரூபாய்களை அனுப்பி வைப்பான்.
இப்படித் தான்இ இந்த இருவரினதும் பயணம் நகர்ந்த கொண்டிருக்கிறது. மகனைப் பார்க்க மனசு தவிக்கும் போதுஇ ஏதாவது செய்து கொழும்புக்கு வந்து விடுவார்கள். இந்தத் தடவையும் அப்படித்தான்.
மாலை....
அலுவலகத்திலிருந்து வந்தான் மதன். ‘என்னங்க. மாமாவும் மாமியும் வந்திருக்காங்க” “ஆ! அப்பிடியா..” அவனிடமிருந்து வந்த வார்த்தைகள் மேனகாவை கோபம் கொள்ள வைத்தது தான். ஆனால்இ அவளால் வேறெதுவுமே செய்ய முடியாதே! மெளனமாகிப் போனாள்.
மகனைக் கண்ட சந்தோசத்தில்இ அவனை கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள் அந்த பேதைத் தாய். கோட்டும் சூட்டும் கையிலே பைல்களுமாய் வந்து நின்ற மகனை ஒரு பெருமிதத்தோடு நோக்கினார் இராசலிங்கம். தன் கஷ்டங்களின் பயனாக மகன் இப்படி வாழ்வது அவருக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவன் குளித்து முடித்த வந்துஇ அனைவருக்குமாய் ஒன்றாய் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போதுஇ இந்தக் காலம் இப்படியே தொடர்ந்தும் வராதா? எனஇ பெற்ற இருவரும் ஏக்கமாக பார்த்தார்கள். கடைசிக் காலத்தை மகனோடும்இ அவன் மனைவி பிள்ளைகளோடும் கழிக்க வேண்டும் என்று இருவருக்குள்ளும் வாஞ்சையிருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. மகனாக விரும்பினால் இருக்கலாம். மற்றப்படி நாமாகக் கேட்டுக் கொண்டுஇ இருப்பது சரியல்ல என்பதுதான் இருவரினதும் எண்ணம். அவர்களது எண்ணம் நியாயமானதே!
அன்றைய பொழுது சந்தோஷமாக நகரஇ இரவு குழந்தை நிதா பெரியவர்களோடு தான் உறங்கப் போகிறேன் என அடம்பிடித்தான். சரியென அவர்களோடே விட்டுவிட்டு வந்தாள் மேனகா. அன்றைய நாள்இ மிகவும் அழகான நாளாக அவளுக்குத் தோன்றிற்று. கலகலப்பாய் கடந்த நொடிகள் எப்படி புதிதாய் இன்று மட்டும்? பெரியவர்களின் வருகையே இதற்குக் காரணம் என்பது புரிந்தது. என்னதான் அத்தனை ஆடம்பரங்களோடும் வாழ்ந்தாலும்இ மனதில் ஒரு நிம்மதி ஒரு நிறைவு என்பதுஇ அன்பு பாசம் நம்மை நெருங்கும் போதுதான் ஏற்படும் என்பது அவனுக்கு தெளிவாயிற்று. ஏதோ குறிப்புக்காக எழுதிக் கொண்டிருந்தவனிடம் “என்னங்க... என் னங்க...” என்றாள். “ம்... சொல்லு...” “மாமாவையும் மாமியையும் இங்கேயே வெச்சுக் கொண்டால் என்னங்க” மெதுவாக அவனிடம் கேட்டாள். “ஏன்... இப்போ திடீரென்று இந்தக் கேள்வி...” எழுதுவதை நிறுத்தாமலே கேட்டான் மதன்.
“இல்லைங்க. அவங்களுக்கு வயசும் போயிடிச்சு. தனியாத் தானே அங்க இருக்காங்க. நம்மளோடே வெச்சக் கொள்வோமே! நாம கூட இங்க தனியேதானே இருக்கோம். வயசான காலத்தில்... ஆறுதலா இருப்பாங்களே! “தன் விருப்பத்தை முழுமையாக சொல்லி முடித்த போதுஇ அவன் எரிந்து விழுந்தான்.
“இப்போ இங்கே இருக்கிற விலைவாசில... ரெண்டு பேரை வச்சிருக்கிறது சும்மா வேலையா? அதுக்கொன்று நான் தனியே உழைக்க வேணும். ஒண்ணும் வேணாம். அவங்க அங்கயே இருக்கட்டும். 
மாசம் மாசம் பணம் வேணும்னா.. கொஞ்சம் அனுப்பி வெப்போம்..” அவன் பேசியது இவளுக்கு அருவ ருப்பை ஏற்படுத்தியது. “பெத்தவங்களைக் கூட.. பாரமா நெனங்குறாங்களே” கணவனின் பேச்சை மீறி அவளால் எதுவும் செய்யமுடியாதென்பதால்இ பேசாமல் படுத்துக் கொண்டாள்.
இதுவரை இவர்கள் இருவரும் பேசிக் கொண்டது. தூங்கிப் போன குழந்தையை கொடுக்க வந்து நின்ற மகேஷ்வரியின் காதுகளில் வீழ்ந்தது. ஊசி குத்தப்பட்ட பலூனாய்இ இதுவரை பூரித்துப் போயிக் கிடந்த மனது சுருங்கிப் போனது. வழிகின்ற கண்ணீரோடு கணவரிடம் போய் நடந்ததை விபரித்தாள். அழுகை மட்டுமே அவளுக்கு வந்தது. பேச்சு தடுமாறியது. “இங்க பாரும்மா மகேசு. இந்தக் கால பிள்ளைங்க பாசத்தை தேடுகிறதில்லை. பணம் தான் பெரிசு அவங்களுக்கு! நம்ம பையன் மட்டும் விதிவிலக்காயிருப்பானா... சொல்லு! வந்தோமாஇ பார்த்தோமா.. உடனே போய்டனும்.. நாமஇ நாளைக்கு விடிய ஊருக்கு போவோம்... சரியா?” விம்மிக் கொண்டிருந்த மனைவியைஇ தன் மார்போடு சேர்த்துக் கொண்டார் இராசலிங்கம்.
…………………………………………………………………………………………………
                       இராமசாமி ரமேஷ்
                           அளம்பில்

மது மன்னித்துன்கொள்…!


      சிறுகதை
                             
…………………………………………………………..    
இன்றுகாலை விடிந்ததிலிருந்து எந்தவொரு வேலையிலுமே எனக்கு ஈடுபடப் பிடிக்கவில்லை. மனதில் என்றுமில்லாதவாறு சோகம் அப்பிக் கிடக்கிறது. புhரம் படர்ந்து அழுத்திக்கொண்டிருப்பதாக தோன்றியது. “ச்சே! என்னதானிருந்தாலும் மதுவுக்கு நான் அடித்திருக்கக் கூடாது! ஏன்தான் அவசரபுத்தி இப்படி முந்திக்கொண்டு வருகிறதோ..?” நினைக்க நினைக்க என்மேலேயே எனக்கு எரிச்சலாக இருந்தது. ஆவள்தான் அறியாமையாலும் என்மேலே கொண்ட அளவுக்கதிகமான அன்பினாலும் அப்படி நினைத்து பேசிவிட்டாளென்றால், எல்லாம் தெரிந்தும் பிரச்சினைக்குக் காரணமாக இருந்த நான்...சரியாக அவளுக்கு தெளிவுபடுத்துவதை விட்டுவிட்டு, அவள் என்னை தப்பாக நினைத்துவிட்டாளென்ற  ஒன்றுக்காக அன்னெ இல்லாமல் அப்படி நடந்துகொண்டேனே..! 
பாவம் மது! நான் அதட்டிப் பேசினாலே தாங்கிக்கொள்ள முடியாதவள், நானாகப் பேசும்வரைக்கும் அழுதுகொண்டிருப்பாள். இன்று அடித்தே விட்டேன். அதுவும் கல்யாணமாகி இத்தனை நாட்களுக்குப் பின்னர்.. இன்றுதான் கைநீட்டியிருக்கிறேன். இதற்கு எப்படி அழுது வேதனைப்படுவாள்! திடுதிப்பென இந்த இராட்சதக் குணம் எனக்கு எங்கிருந்து வந்தது? என்ன முட்டாள்த்தனமான காரியம் செய்துவிட்டேன்? இப்போதுதான் வேதனைய+ற்றுக்கள் எனக்குள் ஊற்றெடுத்தன. விழிகளில் ஒருவித அழுத்தம்!  
என்னுடைய முற்கோபத்தினால், மது இப்போது அறைக்குள் கிடந்து அழுதுகொண்டுதானே இருப்பாள்? ஏன்னையே நம்பி நான் சொல்லாமல் எதையும் செய்யாமல், எனக்காகவே வாழ்ந்துகொண்டிருப்பவளுக்கு நான் கொடுத்திருக்கும் பரிசு, வலியும் கண்ணீரும் தானே! எந்தவொரு பொண்ணும் தன் புருஷன் இப்படி நடந்துகொண்டால் தட்டிக்கேட்பது சரிதானே? இப்படி கேட்காமல் தங்கள் கணவருக்கு பயந்துவாழும் பெண்களால்தான் இன்றைக்கு எத்தனையோ வாழ்வியல் பிரச்சினைகள். மது தன்னவனை யாருக்கும் விட்டுக்கொடுப்பாளா? ஏனக்கு ஏன் இது அந்நேரம் புரியாமல் போனது? 
அவள் என்னை அப்படிக்கேட்க காரணமாக இருந்தவனும் நான்தானே! அவள் கேள்விகேட்டபோடு இதுபுரியாமல் உடனே அடிக்கமட்டும் எப்படி இந்த மரமண்டைக்கு மனசு வந்தது? நான் எவ்வளவு பெரிய பாவமான காரியம் செய்துவிட்டேன்! மதுவை நினைக்கையில் உள்ளுக்குள் வலித்தது. அவள் பாதங்களைப் பிடித்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கவேண்டும் போலிருந்தது. 
  மது- அவள்தான் என் மனைவ மதுமிதா! 
கடவுளால் என் வாழ்க்கையில் என் குடும்பத்தினருக்குப் பிறகு, என்னை நேசிப்பதற்காக வழங்கப்பட்ட அரிய பொக்கிஷம். நான் முல்லைத்தீவில் உயர்தரம் படித்துவிட்டு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி யாழ்ப்பாணம் வந்தபோது, முதல் தடவையாக அம்மா,அப்பா,சகோதரர்களை பிரிந்து தனிமையானேன். புது இடம்! பேரிதாக அறிமுகமில்லாத மனிதர்கள் என்று நான் அந்நியமாய் உணர்ந்தபோத அறிமுகமானவள்தான் மதுமிதா. நான் வாடகைக்கு அறைஎடுத்து தங்கியிருந்த வீட்டுக்கார அம்மாவின் தங்கைமகள் மட்டுமல்லாமல், என்னோடு அதே வரடம் பல்கலைக்கழகத்தில் கற்றக்கொண்டிருந்த அசாத்திய திறமையான மாணவி! நூன் யாழ்ப்பாணம் வந்து நான்கைந்து மாதங்கள் உருண்டோடி விட, மதுமிதாவுடனான அறிமுகம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது. முன்பு சந்திக்கும் பொழுதுகளில் சிரித்துவிட்டு நகர்ந்துவிடுபவள், அதன்பின்னரான நாட்களில் தானாக வந்து என்குடம்பம், சகோதரிகள் ஊர்ப்புதினங்கள் தொடர்பாக பல விடயங்கள் விசாரிப்பாள். நானும் எத்தனை நாட்களுக்குத்தான் தனியாக நண்பர்கள் யாருமின்றி இருப்பது? என்னோடு படிக்கின்ற சக மாணவிதானே என வெட்கப்படாமல் சுவாரஸ்யமாகப் பல புதினங்கள், பாடம் தொடர்பான சந்தேகங்கள் என்று பலதும் பத்தையும் பேசத் தொடங்கியிருந்தோம்.  ஏன் காலம் கொஞ்சம் கரையத் தொடங்க என்னையே மாற்றியிருந்தான் மது. 
வன்னியில் அப்போதெல்லாம் அப்பாஸ் ஜீன்ஸ் என்று ஒரு மொடல் இருந்தது. அது அப்போது பிரபலமாக இருந்த நடிகர் அப்பாஸ் திரையில் அணிந்து அறிமுகப்படுத்தியது. எங்களைப் போன்ற இளம் மட்டங்கள் அக்காலத்தில் அதைத்தான் அடித்துப்பிடித்துக் கொண்டு அணிந்துகொள்வதில் ஆனங்தமடைந்தோம். ஏனக்கு பல்கலைக்கழகம் வந்தபின்னும் அந்த மொடல்தான் பிடித்திருக்க அதையே அடிக்கடி போட்டுக்கொள்வேன். மதுமிதா நக்கலாய் சொல்வாள் “ இது என்ன ஸ்டைல்?  மாத்துங்க…”  எனக்கு யாழ்ப்பாணக் கலாசாரத்தை  கற்றுத்தந்தவள் எனக்கு நெருங்கிய ஒரு உறவாக மாறிப்போனாள்.
மதுமிதா பெரிதாக வன்னி மண்ணிடம் உறவில்லாதாவள். அவளுடைய உறவுகள் அதிகமாக வெளிநாடுகளில் வாழ்ந்துகொண்டிருக்க, யாழ்ப்பாணத்திலே ஒருசில உறவினர்கள்தான் மாத்திரமே இருந்தார்கள். ஆவர்களையம் அவள் குடும்பத்தையும் அவர்கள் வெளிநாடு வரும்படி அழைத்து வற்புறுத்தியும், அவள் தனது தாய்நாட்டைவிட்டுப் போக மறுத்துவிட்டாள். ஆதனால், நான் வன்னியென்று தெரிந்துகொண்டதும் அதிகமாக வன்னிமண்ணின் வராலாற்றை அறிந்துகொள்ளும் கேள்விகளைக் கேட்பாள். ஆங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை, பிரச்சினைகள் தொடர்பாக அவள் விருப்பத்தோடு கேட்பது எனக்குள் கந்தோசமாகவும் அதேவேளை வியப்பாகவும் இருக்கும். ஏனெனில் வன்னியேன்றாலே அங்குள்ளவர்கள் எதவம் தெரியாத பட்டிக்காட்டார்; என்பதுபோலப் பாரக்கும் நம்மவர்களிடையே மது விதிவிலக்காய் தெரிந்தாள். மக்களையும் தன் தேசத்தையும் நேசிப்பவாள் பாசத்தைக் காட்டினாள். ஏம் மக்களின் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்டு “அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் ஆகாஷ்’’ என்பாள். அதற்கு நான் “ நீயொரு ஆசிரியையாகப் போகிறவள் தானே? அதனால்.. ஆசிரியர் வளம் குறைவாக இருக்கும் வன்னிப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு படிப்பிக்கலாம் தானே..!’’ என்பேன். நான் சொன்னதுபோலவே தனக்குள்ளும் ஆசையிருப்பதாகக் கூறி, “அது கண்டிப்பாய் நடக்கும்..’’ என்பாள். இப்படி எம்மண்மீது அதிகப்படியான நேசம் கொண்டவளாய் மதுமிதா இருந்தது, எனக்குள் அவள்மீதானதொரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. நாளடைவில் அது காதலாக மலர்ந்து   அவளிடம் அதைச் சொல்லவும் வைத்துவிட்டது. 
   ஏன்னைப் போலவே மனதினுள் காதலை வளர்த்துக்கொண்டிருந்த மது, நான் காதலைச் சொன்னதும் சந்தோசமாக ஏற்றுக்கொண்டாள். அதன்பிறகு என்னோடு ஒருநாள்கூட பேசாமல் இருக்க மாட்டாள். ஏதாவது Nலையாக நான் பேசாமல் இருந்துவிட்டால் சரி! செல்லமாக திட்டித் தீர்ப்பாள். 
காலங்கள் கரைந்தோடி கல்வியும் நிறைவுற்று, இருவரும் ஆசிரியர்களாக வெளியேறினோம். அவளும் வன்னிக்கே வந்தாள். நான் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் இணைந்துகொள்ள மது, என் சொந்தவூரான முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் தன் பணியை ஆரம்பித்தாள். நான் எந்த முடிவு எடுத்தாலும் அதற்க்கு எதிர்ப்புக் காட்டாமல் என் முடிவு சரியாகத்தானிருக்கும் என்று சம்மதம் சொல்லும் என்வீட்டார என் காதலையும் ஏற்றுக்கொண்டனர். அதேபோல  மதுவின் உறவுகளும் என்னை ஏற்றுக்கொண்டார்கள். இருவீட்டாருக்கும் எம் காதலைத் தெரிவித்து அவர்களின் சம்மதத்துடனேயே இருவருடங்கள் கழித்து.. போனவருட நடுப்பகுதியில் கல்யாணம் செய்துகொண்டோம். மணமானதும், வேலையிலிருந்து விலகவா என மது கேட்க நான் வேண்டாமென தடுத்து நமது பங்களிப்பு நிச்சயமாய் எம் தேசத்துக்கு வேண்டும் என்றேன். அவளும் சம்மதித்து இன்றுவரை சேவையாற்றிக் கொண்டிருக்கிறாள். 
     இப்படி மகிழ்ச்சியாய்ப் போய்க்கொண்டிருந்த எமது வாழ்க்கையில் இதோ… ஒரு வாரமாகத்தான் சிறுசிறு கருத்துமோதல்கள் உருவாகத் தொடங்கியிருந்தன. அதற்குக் காரணம் அவளது தம்பி அஷ்வந்த்! அவன் ஒரு பெண்ணைக் காதலித்து, அவள் திருமணத்திற்கு முன்னமே கர்ப்பமாகிவிட்டாள்.  
அதனால், தன் திருமணத்தை நடத்தி வைக்கும்படி அஷ்வந்த் என்னிடம் சொல்ல, நானும் சம்மதித்து, அதற்கான காரியங்களில் ஈடுபடத்தொடங்கினேன.; ஆனால், அதிலே இன்னுமொரு சிக்கலும் வந்து நின்றது.
தாய் தந்தை உறவுகளில்லாத அந்தப் பெண்ணை மதுவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளமாட்டார்களென்றும், தன்னை வெளிநாட்டுக்கு அனுப்பி தனது உறவுப் பெண் ஒருத்தியை மணமுடித்து வைக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அஷ்வந்த் சொன்னான். அத்தோடு மேலுமொரு குண்டையும் தூக்கிப் போட்டான். “தயவு செய்து அத்தான்… என் பிரச்சினையையும்… நீபா கர்ப்பமான விஷயத்தையும் அக்காவிடம் சொல்லிவிடாதீங்க… அவள் என்னோடு கடைசிவரை பேசவே மாட்டாள்…” என்றான்.
ஆமாம்! மது பேசமாட்டாள் தான். ஏனென்றால், யாருமில்லாதவள் என்றாலும் பரவாயில்லை. தன் தம்பி மணம் முடிக்கும் முன்பே இப்படி தப்பாய் நடந்திருக்கிறானே என்று கண்டபடி திட்டுவாள். அதனால்தான் அவனின் பிரச்சினையை மதுவிடம் சொல்லாமலே இரகசியமாகக் கையாண்டு வந்தேன்.
அஷ்வந்தின் காதலி நீபா, அடிக்கடி என்னிடம் போனில் போசுவாள். “நானும் பயப்பிடாதே! வெகு சீக்கிரமே… பேசி சம்மதம் வாங்குகிறேன்….” என்று கூறி சமாதானம் செய்வேன். இப்படி நான் போனிலே பேசுவதும, மது  இல்லாத வேளை அவள் என்னுடன் பேசுவதும் தொடர்ந்தது. ஒரு நாள் நீபாவின் தொலைபேசி அழைப்பு வந்த போது மதுவே தொலைபேசியை எடுத்துவிட்டாள். மது… யார் பேசுவது என்று கேட்டதும் கட் பண்ணியது; தான் இப்போது பிரச்சிணைக்குக் காரணம். மது என்னிடம் தானாக வந்து கேட்டாள். நான் மழுப்பிவிட்டேன். திரும்பவும் கேட்டு வந்தாள். தெரியும். தெரிந்த பெண்… உறவுக்காரி என்றேன். இன்றுக் காலையும் அப்படித்தான்! கேட்டாள், உறவு என்றேன். “எந்த மாதிரியான உறவு?” என்றாள். எனக்கு கோபம் வந்து அடித்துவிட்டேன். அத்தோடு அழுதுகொண்டு அறைக்குள்ளே தான். மதியம் இரண்டு மணியாகியும் இன்னும் சாப்பிடவில்லை.
நானும் இவ்வளவு நேரமாகியும் போய்க் கூப்பிடவில்லை. ஏனக்கு அப்போது கோபமாகத்தானிருந்தது. தன் கணவனைப் புரிந்துகொள்ளாமல் பேசலாமா? இருந்தாலும், அவள் அவ்வாறு நடந்து கொண்டதற்கான காரணத்தை யோசித்துப் பார்த்தபோது, தவறு என்னில்தான் என்பது புரிந்தது.
என்மேல் கொண்ட அளவு கடந்த அன்பினாலும் நம்பிக்கையினாலும் தான், மது அப்படிக் கேட்டிருக்கின்றாள். யாராவாது ஒரு பெண் கணவனோடு மட்டும் கதைப்பது.. மனைவி கேட்டதும் துண்டிப்பதும் எந்த மனைவிக்குத்தான் சந்தேகத்தை உண்டுபண்ணாது? மதுவும் சராசரிப் பெண்தானே? 
சரி! நடந்தது நடந்துவிட்டது. தப்புச் செய்தவர்தான் இறங்கிப் போகவேண்டும். இத்தனைக்கும் காரணமான அஷ்வந்தின் பிரச்சினையை மதுவிடம் தெளிவாக எடுத்துச்சொல்லி புரியவைக்க வேண்டும். ஆப்போதுதான் நடந்த தைப் புரிந்துகொண்டு ஆகவேண்டிய காரியங்களை செய்யமுடியும். இதனால் அவனின் பிரச்சினையும் முடிவுக்குவரும், அத்தோடு எங்களுக்குள் நிலவும் பனிப்போரம் அமைதியாகும். புhவம் மது! 
    இதுதான் மதுவுக்கு நான் அடித்த கடைசித்தருணமாக இருக்கணும். ஒரு தெளிவோடம் தவறை உணர்ந்த மனதோடும் மது இருக்கும் அறை நோக்கி நடக்கிறேன். 
  -முடிந்தது.-   


செவ்வாய், 22 மே, 2012

அருமையான பாடல்...

இவர்களும் நாங்களும் இப்போது!!




அன்றுகளில்
அண்ணன் தம்பியாய்
கூடியிருந்த இவர்களின் 
இருப்பை அழித்துத் துரத்தி
அகதிகளாக்கப்பட்டார்கள் தூரதேசங்களில்...!

பாசத்தையும் பண்பாடுகளையும்
பறைசாற்றிய இவர்களுடைய 
அழகிய   வாழ்தலுக்கு    
இனத்தை பிரித்துக்காட்டி  
இரண்டாக்கினார்கள் தமிழையே!!

மரணம் வரைக்கும் மண்ணோடு
என்றிருந்த இவர்களை 
எங்கோ தொலைவுக்கு அகதிகளாக்கி 
துயரங்களை கொடுத்தவர்களை 
இன்னும் சபித்துக் கொள்கிறது மனசு

இறைவன் இப்போதெல்லாம் 
அருகிலேயே இருக்கிறான் போலும்! 


இவர்களுக்கு  அவர்கள் செய்த அநியாயத்தால் 
நேற்றைகளில் நாங்களும் ...
உறவுகளை யுத்தப்பேய்க்கு தின்னக் கொடுத்துவிட்டு 
அகதிகாளாகியது நினைவிருக்கிறது...

முல்லையில்...
முஸ்தபாவும் முருகையாவும் 
கனகம்மாவும் கதீஜாவும் 
இர்பானும் இந்துஜாவும்  இப்போதெல்லாம் 
நட்பைப் போர்த்தியபடி வலம்வருவது
எத்தனை அழகு தெரியுமா? 

பள்ளியின் அதான் ஓசையும்
கோயிலின் கண்டாமணியும்
அந்தோனியார்  ஜெப வாசமும் 
ஊரையே உலாவுகின்றபோது
இதையா இல்லாமல் செய்தார்களென்று 
வினவுகிறது உள்மனசு...! 

மனிதத்தை வரித்துக் கொண்டிருந்த 
 இவர்களையும் எங்களையும்  
எதிரிகளாக்கி மோதவிட்டு
வேடிக்கை பார்த்தவர்கள் 
இற்றைகளில் எங்கென்றே தெரியவில்லை....
இது இயற்கையின் தீர்ப்புபோல! 

ஹிஜ்ராபுரத்து சலீம் நானாவின் 
கொத்துரொட்டியும் ..
ரிம்ஸா அம்மாவின் வட்டிலப்பமும் 
அடிபட்டு உண்ணும் நாட்கள்....
நிறையக் கிடைக்க வேண்டுகிறேன்
 
-இராமசாமி ரமேஷ்-




 

செவ்வாய், 15 மே, 2012

என் ஒவ்வொரு நண்பருக்கும்! இதை தவறாமல் படிங்க...




வணக்கம் இலக்கிய உள்ளங்களே! உங்கள் ஒவ்வொருத்தரின் உதவிகளையும் எதிர்பார்த்தபடி தான் இந்த சின்ன கருத்தை உங்களிடம் ஒப்புவிக்கிறேன். முல்லைத்தீவு மண்ணிலிருந்து இப்போதுதான் இதுவரை முடங்கிப்போன கலை இலக்கியம் அறிவியல் ஏனைய பண்பாட்டு அம்சங்கள் என்பன முகிழத் தொடங்கியுள்ளன. இந்த வரிசையில்தான்... நானும் எனது நண்பர்களான வசந்தன், நிரோஷா போன்றோரின் ஒத்துழைப்போடு மொழி என்னும் இருமாத கலை இலக்கிய சஞ்சிகையை ஆரம்பித்து இப்போது வெற்றிகரமாக இறந்து இதழ்களை கடந்திருக்கிறோம். இருப்பினும், நாம் அடைந்த வெற்றி என்பது அசாத்தியமானது. முல்லை மண்ணிலிருந்து வளப்பற்றாக் குறைகளோடும் இன்னும் ஏராளமான இடர்களோடும் தொடரும் இப்பயணத்தை நாங்கள் சிறப்புற நகர்த்த உங்கள் ஆதரவு என்பது தேவைப்படுகின்றது.
எந்தவிதமான பின்னணியும் இன்றி ஒரு செயற்பாட்டைச் செய்வதென்பது குதிரைக் கொம்பான காரியம்! இருந்து, முயல்வோம் என்ற நப்பாசையோடு உருவாக்கினோம் மொழியை! மொழியும் அழகாக கடந்த தை மாதம் முதலாவது இதழை விரித்து இப்போது இரண்டாவது இதழையும் பிரசவித்து விட்டது. ஆனாலும், மொழி பரவியுள்ள தூரம் என்பது குறைவுதான். இந்நிலையில் தான் உங்களுடைய உதவியை வேண்டுகின்றேன்
என்னுடைய முகநூல் நண்பர்களாக இருக்கின்றவர்களும் உங்களுடைய நண்பர்களும் முடிந்தளவுக்கு உங்களிடம் அறிமுகமாகின்றவர்களுக்கு இந்த மொழியை அறிமுகம் செய்யுங்கள். இலக்கியத்தை நேசிக்கும் நெஞ்சங்கள் இந்த உதவியை செய்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். ஒவ்வொரு சஞ்சிகையும் தொடர்ந்து மலர்வது உங்களாலும் வாசகர்களாலும் என்பது என் நம்பிக்கை. எனவே, எங்கள் மொழியை உலகறியச் செய்யும் பொறுப்பை முகப் புத்தகத்தில் உள்ள என் நண்பர்களான உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
mail- alampilamal@yahoo.com
phone-0775929258, 0779313664
add- ஆசிரியர், மொழி சஞ்சிகை,
உடுப்புக்குளம், அலம்பில், முல்லைத்தீவு , இலங்கை

திங்கள், 14 மே, 2012



வன்னி சுதந்திர ஊடகவியலாளர் பேரவை

இம்மாதம்  மூன்றாம் திகதி வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் பேரவை அங்கத்தவர்களின் நிழற்படம்...

உதயன் பத்திரிகையில் வெளிவந்த செய்தி...


ஞாயிறு, 13 மே, 2012

கடந்த சனிக்கிழமை காலை ஒன்பது முப்பதுக்கு நடைபெற்ற மொழி கலை இலக்கிய சஞ்சிகையின் இரண்டாவது சஞ்சிகை வெளியீட்டுவிழா நிகழ்வு நடைபெற்றது.  அப்போது பிடிக்கப்பட்ட படங்கள்....











வியாழன், 10 மே, 2012

நாளை மலரவுள்ள மொழி...
முல்லை மண்ணிலிருந்து இலக்கியம் செய்யத் துடிக்கும் நமவர்களுக்கு களம் கொடுக்கும் நோக்கோடு முகிழ்ந்த மொழி கலை இலக்கிய சஞ்சிகையின் இரண்டாவது இதழ் நாளை வெளியிடப்படவுள்ளது. 
இடம்- அளம்பில் மகா வித்தியாலயம்
காலம்-சனிக்கிழமை 2012 . 5 . 12
                   காலை 9 மணிக்கு 
நிகழ்ச்சித் தொகுப்பு - திருமதி எஸ்.துசந்தினி 
வரவேற்ப்பு- உதவி ஆசிரியர் அமீர்.வசந்தன் 
தலைமை- திரு சி.பத்மராஜா 
முதல் பிரதி பெறல்- ஆசிரியரிடமிருந்து திரு நேவிட் ஜீவராஜா(அளம்பில் ம.வி)
நன்றியுரை- மொழி ஆசிரியர் 
உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். 
நன்றிகள் 

மொழி குடும்பம்.

                                                  

புதன், 2 மே, 2012

அந்த வசந்தகாலம் வருமோ?

நகரத்துக்குள்
வாக்கப்பட்டுப் வந்தாலும் 
சொந்த மண்ணில் அம்மாவின் மடி...
அக்காக்களின் அன்பு கலந்த சண்டை.. 
அப்பாவின் கோபமில்லா திட்டல்கள்..
கிராமத்தில் குடும்பமாய் 
கூடவரும்  நண்பர்கள்....
காலாற நடக்கும் கடற்கரை....
ஓடித் திரிந்த ஊரின் எல்லைகள்...
பாசத்தையே பரிமாறும் ஊரவர்கள்...
பட்டாம்பூச்சிகளாய் பறந்த
பள்ளிக்கூடம்....
மாலையில் மனம் வருடும் 
சந்தியில் கூடும் சந்திப்புக்கள்....
நண்பன் மடியில் படுத்தபடி
கூத்துக்கள் பார்க்கும் நாட்கள்...
தோழிகளோடு சண்டையிடும் 
பிரத்தியோக வகுப்புக்கள்..
சொர்க்கமே போனாலும்
ஊர்வந்து அம்மாவிடம் 
ஒருபிடி அமுதுண்ணத் தூண்டும் ஏக்கம்...
இப்படியிப்படி 
எல்லாமே இழந்து இங்கே
இயந்திரத் தன வாழ்வில் 
இன்பங்கள் தொலைத்து 
இல்லாததைத் தேடியவர்களாய்
நகர்கிறது வாழ்வு-எப்போதாவது 
கிராமம் போவேன் என்னும் கனவோடு!!

செவ்வாய், 1 மே, 2012

மே தினத்தில் என்ன நடக்கிறது?


தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் அவர்களுடைய தேவைகளுக்குமான தீர்வுகளுக்கும் குரலெழுப்பும் நாள்தான் இந்த மே தினம். தொழிலாளர்களின் மகத்துவம் தேவை கலந்து பேசப்பட வேண்டிய நாளில், இங்கு நடப்பதென்னவோ வேறுவிதமானதாகவே இருக்கின்றது.
இந்தவகையில், உழைப்புக்கு முக்கியத்துவமளிப்போம் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு செவிமடுப்போம் என்று தொழிலாளர்களின் குரல்கள் ஒலிக்கவேண்டிய மே தினத்தில் அரசியல்வாதிகள்  தான்  பிரதான பாத்திரங்களாக தென்படுகின்றனர். தமது அரசியலை நகர்த்துவதற்கு தொழிலாளர் தினம் தான் இவர்களுக்குரிய மேடையாக்கி விட்டது. தமது கட்சிசார் கொள்கைகளையும் தங்களது கொள்கைகளுக்கான கோரிக்கைகளையும் வேண்டி நிற்கும் பதாகைகளோடும், உருவச் சிலைகளோடும், பிரத்தியோகமாக கூட்டிவரப் பட்ட தமது கூட்டத்தினரோடும் தலைநகரிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடாத்துகின்றனர்.
       மே தினதுக்குரியவர்களை புறந் தள்ளிவிட்டு அரசியலை அரங்கேற்றுவது நம்நாட்டில் வாடிக்கையாகி விட்டது. இது தொடர்பாக யாரும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. முக்கியமானவர்களே இதனை தமது அரசியல் அரங்காக்கி விட்டதால் வேறு யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. அரசியலை பிரச்சாரம் செய்யும் நாளாகவே மேதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டு நிறைவுற்றது. போராட்டம் மிக்க உழைப்பாளிகளின் வியர்வையை உறிஞ்சி வாழும் அரசியல்வாதிகளுக்கு, இப்போது அவர்களின் உரிமைகளை, தொழில் மகத்துவத்தை பேசும் நாளைக் கூட ஈவு இரக்கமற்று களவாடுவது வேதனையளிக்கிறது.
தொழிலாளர்கள் கூட இதனை கண்டு கொள்கின்ற தன்மையை காண முடியவில்லை. இனிவரும் மே தினங்களையாவது தொழிலாளர்கள் அரசியல் வாதிகளின் மேடையாக்காமல் தமது உரிமைகளையும் மகத்துவத்தையும் பேசுகின்ற நாளாக மாற்றிக்கொள்ள வேண்டும்.