தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் அவர்களுடைய தேவைகளுக்குமான தீர்வுகளுக்கும் குரலெழுப்பும் நாள்தான் இந்த மே தினம். தொழிலாளர்களின் மகத்துவம் தேவை கலந்து பேசப்பட வேண்டிய நாளில், இங்கு நடப்பதென்னவோ வேறுவிதமானதாகவே இருக்கின்றது.
இந்தவகையில், உழைப்புக்கு முக்கியத்துவமளிப்போம் அவர்களுடைய கோரிக்கைகளுக்கு செவிமடுப்போம் என்று தொழிலாளர்களின் குரல்கள் ஒலிக்கவேண்டிய மே தினத்தில் அரசியல்வாதிகள் தான் பிரதான பாத்திரங்களாக தென்படுகின்றனர். தமது அரசியலை நகர்த்துவதற்கு தொழிலாளர் தினம் தான் இவர்களுக்குரிய மேடையாக்கி விட்டது. தமது கட்சிசார் கொள்கைகளையும் தங்களது கொள்கைகளுக்கான கோரிக்கைகளையும் வேண்டி நிற்கும் பதாகைகளோடும், உருவச் சிலைகளோடும், பிரத்தியோகமாக கூட்டிவரப் பட்ட தமது கூட்டத்தினரோடும் தலைநகரிலும் ஏனைய இடங்களிலும் ஆர்ப்பாட்டங்களையும் பேரணிகளையும் நடாத்துகின்றனர்.
மே தினதுக்குரியவர்களை புறந் தள்ளிவிட்டு அரசியலை அரங்கேற்றுவது நம்நாட்டில் வாடிக்கையாகி விட்டது. இது தொடர்பாக யாரும் அக்கறை கொள்வதாகத் தெரியவில்லை. முக்கியமானவர்களே இதனை தமது அரசியல் அரங்காக்கி விட்டதால் வேறு யாரும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. அரசியலை பிரச்சாரம் செய்யும் நாளாகவே மேதினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டு நிறைவுற்றது. போராட்டம் மிக்க உழைப்பாளிகளின் வியர்வையை உறிஞ்சி வாழும் அரசியல்வாதிகளுக்கு, இப்போது அவர்களின் உரிமைகளை, தொழில் மகத்துவத்தை பேசும் நாளைக் கூட ஈவு இரக்கமற்று களவாடுவது வேதனையளிக்கிறது.
தொழிலாளர்கள் கூட இதனை கண்டு கொள்கின்ற தன்மையை காண முடியவில்லை. இனிவரும் மே தினங்களையாவது தொழிலாளர்கள் அரசியல் வாதிகளின் மேடையாக்காமல் தமது உரிமைகளையும் மகத்துவத்தையும் பேசுகின்ற நாளாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக