சனி, 28 ஜூலை, 2012

கவிஞர் துஷ்யந்தன்


1 -இலக்கியத்தில் உங்களது பிரவேசம் எப்படி அமைந்தது? 
சிறு வயது முதலே வாசிப்பில் எனக்கு அதீத பிரியம் இருந்ததுண்டு .பத்திரிகைகளில் வரும் கவிதைகள் .குட்டிக் கதைகள் .துணுக்குகள் என எல்லாவற்றையும் நான் உடனேயே வாசித்து முடித்துவிடுவேன் .இப்படி தனியாக வாசகனாக மட்டும் இருந்த நான் நானே ஏன் ஒரு ஆக்கத்தை எழுதக் கூடாது என்ற எனக்குள் எழுந்த கேள்வியின் எதிர்வினையே எனக்குள்ளும் ஒரு கவிஞன் இருக்கின்றான் என்பதை எனக்கு உணர்த்தியிருந்தது .அந்த அவாவே என்னை இற்றை வரை எழுதத் தூண்டிக்கொண்டிருக்கின்றது அந்த வகையில் 2005 ஆம் ஆண்டளவில் வலம்புரி பத்திரிகையில் எனது முதலாவது கவிதை வெளியாகியிருந்தது .தொடர்ந்து பத்திரிகைகள் பலவற்றில் எனது கவிதைகள் அடிக்கடி வெளியாகிக் கொண்டிருந்தன .இப்படியே சில வருடங்கள் நகர்ந்த பின்னர் 2008 ஆம் ஆண்டளவில் யாழிலிருந்து நெருக்கடியான ஒரு சூழலில் வெளிவந்துகொண்டிருந்த ஜீவநதி சஞ்சிகையில் எனது அறிமுகம் கவிதையோடு பிரசுரமாகியிருந்தது .அந்த அறிமுகமும் ,அந்தக் கவிதைக்கு கிடைத்த பெருத்த விமர சனமும் இலக்கியத்தில் என்னை நிலையாக இணைத்துக் கொண்டது என்பேன் .

2-போர்க்காலப் பாடு பொருள்களே, உங்கள் படைப்புக்களை நிறைத்துக் கொண்டுள்ளன. அவற்றை போர் முடிந்து விட்டபின்னும் நீங்கள் படைப்பதன் மூலம் எதனை எதிர்பார்க்கிறீர்கள்? 
 நிச்சயமாக நல்லதொரு கேள்விதான் . எனது படைப்புகளை பொறுத்த மட்டில் நான் மக்களுடைய பாடுகளையே அதிகம் பதிவு செய்து வருகின்றேன் .மக்களுக்காவே இலக்கியம் என்ற ஒரு சிந்தனையில் தீவிரமாக இயங்கிக் கொண்டிருப்பவன் என்ற ரீதியில் மக்களினுடைய பாடுகள் என்று பார்க்கின்ற போது இந்த நிலத்தில் போரைப்போல அதி உச்சமான பாடுகளாக வேறெந்தப் பாடுகளும் மக்களை பாதித்திருக்கின்றனாவாக எனக்குத் தெரியவில்லை. .ஆதலால் போர் தந்து சென்ற துன்ப துயரங்கள் ,மக்களின் அவலங்கள் என எல்லாவற்றையும் கூடுதலாக எனது படைப்புகளில் நான் பதிவு செய்திருக்கின்றேன் .எனது இரண்டு தொகுதிகளையும் படித்திருப்பவர்கள் அதனை நாக்கு அறிந்துகொள்வர் .நீங்கள் கேட்பது போல போர் முடிந்த பின்னரும் எதற்க்காக இன்று இவ்வாறன படைப்புகள் வெளியாகின்றன என்று பார்த்தால் போர் முடிந்த பின்னரும் இன்றும் மக்களுடைய பாடுகள் குறைந்ததாக எதுவும் தெரியவில்லை .இப்போது தான் அதிகளவான போரின் வலிகளையும் , இழத்தலின் துயரங்களையும் தாங்கி பல படைப்புகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன .இதன்மூலம் என்ன எதிர்பார்க்கின்றேன் என்று சொல்லத் தெரியவில்லை ஆனால் இன்னும் இன்னும் அறிந்திராத ,வெளிவராத மக்களின் வேதனைகளை வெளிக்கொணரவேண்டும் ஆயின் இப்படி படைப்புக்களின் ஊடாகவே வெளிக்கொணர இயலும் என்ற நம்பிக்கையில் நான் எனது படைப்புக்களை எழுதி வருகின்றேன் . இவ்வாறு இன்று பல படைப்பாளிகள் போரின் பாடுகளை மிக யதார்த்தமாக பதிவு செய்து வருகின்றார்கள். ஒரு படைப்பு சமூகப் பெறுமானம் அடைய வேண்டுமாயின், அது மக்கள் மயப்படுத்தப்பட்ட அல்லது மக்களின் பாடுகளை பாடுகின்ற படைப்புகளாக மாத்திரம் இருந்தால் போதாது. அது எல்லா மக்களையும் சென்றடையவேண்டும். 


03} உங்களது படைப்புக்களுக்கு எவ்வாறான பின்னூட்டல்கள், ஆதரவுகள் கிடைத்துள்ளன?
எனது முதலாவது தொகுதி "வெறிச்சோடும் மனங்கள் "2010 mஆம் ஆண்டளவில் வெளியாகியிருந்தது அந்தக் காலப்பகுதியில் மக்களுடைய மனோ நிலை எவ்வாறு இருந்தது என்பதை குறியீடாக குறிக்கும் ஒரு குறியீடாகவே இந்த தொகுதியின் தலைப்பு அமைந்திருந்தது மக்களின் பாடுகள் ,காதல் ,மண்வாசனை என எல்லாவிதமான அமசங்களையும் உள்ளிருத்தி வெளியாகியிருந்தது ஜீவநதிப் பிரசுரமாக. எனது முதல் தொகுதி வாசகர்களிடையே பெருத்த வரவேற்ப்பை பெற்றிருந்தது .பல படைப்பாளிகள் அதை நேரிடையாகவே என்னிடம் தெரிவித்து என்னை ஊக்கிவித்திருக்கின்றார்கள் .அக்காலப்பகுதியில் வீரகேசரி தினசரி நாளேட்டில் எனது முதலாவது தொகுதி குறித்த ஒரு செய்திக் குறிப்பும் வெளியாகியிருந்தது "தமிழர்களின் துயரங்களை பதிவு செய்த வெறிச்சோடும் மனங்கள் என்று அதன் பின்னர் கடந்த வருடம் எனது பிறந்த நாள் அன்று " மொழி மொழிர்க்கப்படாத மௌனங்கள் "என்ற எனது இரண்டாவது தொகுதி ஜீவநதிப் பிரசுரமாக வெளியாகியிருந்தது .கடந்த தொகுதியைப் போலவே இதுவும் எனக்கு பலத்த வரவேற்ப்பை இன்று தந்துகொண்டிருக்கும் ஒரு தொகுதியாக இருக்கின்றது .பல மூத்த எழுத்தாளர்கள் தங்களுடைய ஆக்க பூர்வமான கருத்துக்களை என்னிடம் கூறியிருக்கிறார்கள் .மொத்தத்தில் இந்த இரண்டு தொகுதிகளும் எனக்கு ஈழத்து இலக்கியத்தில் ஒரு சிறந்த அடையாளத்தை தந்திருக்கின்றன என்று சொல்ல முடியும் .
4 .கவிதைகளில் அல்லது இலக்கியத்தில் நீங்கள் தொடர்ந்து எத்தகையதான முயற்சிகளை முன்னிறுத்தி வருகிறீர்கள்?
கவிதைகளை பொறுத்த மட்டில் நான் கடந்த ஏழு வருடங்களாக எழுதிக் கொண்டிருக்கின்றேன் .தனியாக ஒரே மன நிலையினலான கவிதைகளை மாத்திரம் எழுதாது காதல் ,பெண் அடிமை ,சமூக ஒடுக்குமுறை ,என பல்வகையிலான உணர்வுகளை சொல்கின்ற கவிதைகளையும் எழுதி வருகின்றேன் .தனியாக கவிதைகளோடு மாத்திரம் பயணிக்காது அவ்வபோது விமர்சனம் ,சிறுகதை ,இரசனைக் குறிப்புக்கள் .பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகள் ,நேர்காணல்கள் ,கவர் ஸ்டோரிகள் என்பனவற்றையும் எழுதி வருகின்றேன் .பொதுவாக இலக்கியம் என்று பார்க்கின்றபோது இலக்கியம் என்பது மக்களுக்காக என்ற கருத்தியலில் நின்று கொண்டு அந்த மக்களுக்கு சரியாக போய் சேரவேண்டும் அவை அந்தக் கருத்திய;ல்கள் மக்களை ஆற்றுப்படுத்தவேண்டும் என்பதே எனது அவா . 
05) ஈழத்து இலக்கிய வாதிகள் பலருடைய படைப்புக்கள் உலகளவில் பேசப்படுகின்றன. அவ்வாறு உங்களது கவனத்தைத் திருப்பிய படைப்புப் பற்றி...

ஈழத்து படைப்புலகை பொறுத்தவரை நான் கவிதைகளை அதிகமாக வாசிப்பதுண்டு .அந்த வகையில் ஈழத்து படைப்புக்கள் இன்று உலகப் புகழ் பெற்ற படைப்புக்களாக பேசப்பட்டு வருகின்றன .நீங்கள் கேட்பது போல தனியாக ஒன்றை மாத்திரம் சொல்வதென்பது இந்நேரத்தில் சலப்போருத்தமற்றதொன்றாகவே நான் கருதுகின்றேன் ,ஏனெனில் ஈழத்தின் பல படைப்புகள் என்னை கவர்ந்திருக்கின்றன .சில கவிதைகள் என்னை தூங்கவிடாமல் கூட தொந்தரவு செய்திருக்கின்றன ஈழத்து கவிதைச் சூழலை பொறுத்தவரை நான் கூடுதலாக சேரன் ,புதுவை இரத்தினதுரை ,மேமன் கவி ,ஜெயபாலன் ,சோலைக்கிளி ., கருணாகரன் போன்ற மூத்த படைப்பளிகளினது படைப்புகளையும் மன்னர் அமுதன் ,அமல்ராஜ் ,ஷிகார் ,வசீம் அக்ரம், போன்ற சம கால படைப்பளிகளினது கவிதைகளையும் விரும்பி படிப்பதுண்டு .கருனாகரனுடைய ஒரு பயணியின் நிகழ் காலக் குறிப்புக்கள் ,புதுவையின் நினைவழியா நாட்கள் போன்ற தொகுதிகள் என்னை கவர்ந்த தொகுதிகளில் குரிப்பிடுச் சொல்லக் கூடியன .


06}கவிதைத் துறை சாராத உங்களது ஏனைய ஆக்க முயற்சிகள்... மற்றும், உங்களுக்குப் பிடித்த நீங்கள் நுழைந்துகொள்ள எத்தனிக்கும் துறைகள்...?
கவிதைத்துறையை விடுத்து பார்க்கப்போனால் நான் நான்கு வயது முதல் இற்றை வரை இசை நாடகங்களிலும் நடித்து வருகின்றேன் .எமதுமரபுவழிக் கலைகளாக இருக்கின்ற இவ் இசை நாடகங்களில் நடித்து வருகின்றேன் .அவை தவிர கடந்த வருடம் எமது ஆலயத்திற்கு எனது பாடல் வரிகளில் ஐந்து பாடல்களையும் எழுதி உள்ளேன் . மற்றும் இப்போது எனது நண்பர்கள் வெளியிடும் இசை அல்பத்திற்க்கும் பாடல்களை எழுதிக் கொண்டிருக்கின்றேன் .தனியாக எழுத்தில் ஒரு துறையில் மாத்திரம் பயணிக்காது எல்லா வகைமைகளிலும் கால்பதித்து பயணிக்கவேண்டும் என்பதே எனது விருப்பு .
07} யாதார்த்தமான படைப்பு என்று எதைக் கருதுகிறீர்கள்?
யதார்த்தமான படைப்பு என்னும் போது படைப்பு எப்போதும் யதார்த்தமாக இருக்கின்ற போதே உயிரோட்டமாக இருந்து விடுவதுண்டு .ஆயினும் உள்ளதை உள்ளவாறு யதார்த்த பூர்வமாக பதிவதில் சில சிக்கல் தன்மை இருக்கின்ற பொழுதுகளிலும், உண்மையில் யதார்த்தம் தான் எப்போதும் படைப்பியலுக்கு உயிர்கொடுப்பது .என்னை பொறுத்தவரையில் முடிந்தளவுக்கு யதார்த்தத்தை மாத்திரம் படைப்பில் கையாண்டு வருகின்றேன் .படைப்பாளி சுதந்திரமாக எழுத முடியாவிட்டாலும் கூட சுதந்திரமாக சிந்திப்பவராக இருக்க வேண்டும் .எழுத்து வகைமைகளில் கவிதை இலக்கியத்தில் மாத்திரம் தான் யதார்த்தத்தை அப்படியே உயிரோட்டமாக தத்ரூபமாக எழுத முடியும் .ஆகவே யதார்த்தமான படைப்பு என்பது உள்ளதை உள்ளவாறு எழுதுதல் என்பதையே சாரும் .

08} இப்போதுள்ள இளைய இலக்கிய ஆர்வலர்க்கும், இளைய படைப்பாளிகளுக்கும் நீங்கள் கூற முனைவது? 
அவர்களுக்கு ஆலோசனை சொல்லுமளவிற்கு நான் பெரியவன் அல்ல .நானும் வளர்ந்து வரும் ஒரு படைப்பாளி தான். ஆயினும், எனது அனுபவத்தை வைத்துக் கொண்டு ஒருவிடயத்தை மாத்திரம் சொல்வேன். நல்ல வாசிப்பு மட்டுமே நல்லதொரு படைப்பாளியை உலகிற்கு இனங்காட்டும் .ஆகவே நன்றாக வாசியுங்கள். நல்ல வாசிப்பு எழுத்தில் நம்மை சீர் படுத்தும் .எடுத்துக் கொண்ட துறையை நன்றாக நேசித்து அனுபவித்து எழுதவேண்டும்.என்னைப்பொறுத்தவரை கவிதைகள் தான் எனக்குள் வாழும் காதலி .ஆகவே நல்ல வாசிப்பினூடாக நல்ல படைப்பாளியாக மிளிர முடியும் அந்தவாசிப்பு மட்டுமே எமது படைப்பில் ஆக்க பூர்வமான ஒரு மாற்றத்தை உண்டுபண்ணும் . 
                  நேர்காணல்- இராமசாமி ரமேஷ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக