சனி, 18 ஆகஸ்ட், 2012

அறிவிப்பாளர் சூரியன் எவ்.எம்.சூர்யா



தமிழர்களின் தாயகம் என்று வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும், அக்காலத்தில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக கொழும்பிலேயே வசிக்க வேண்டி  நிர்ப்பந்திக்கப்படுள்ள சூர்யா, ஒரு அழகான குட்டிக் குடும்பத்தில் பிறந்தவர். கொழும்பு மாநகர சபையில் கட்டிட மேட் பார்வையாலராகக் கடமையாற்றி அண்மையில்  இறைவனடி சேர்ந்த கந்தசாமி தான் இவரது தந்தையார். அன்னை புவனேஸ்வரி. சூர்யாவுக்குப் பிடித்த இரு பெண்மணிகளுள் அன்னையும் அடுத்ததாக அக்கா லலிதாவையும் உள்ளடக்கியாக வேண்டும். இவர்களோடு இவரது குடும்ப   அங்கத்தவர்கள் முடிவுற்றாலும், தனது பால்ய நண்பர் பஸ்லியையும் மறக்காமல் நினைவு கூறுகிறார் சூர்யா. அந்த நண்பரின் உதவியால்தான் தான் இத்தனை பெரிய ஊடகத்தில் பணிபுரிகிறார் என்று நெகிழ்ந்த சூர்யா வேறு யாருமில்லை. சூரியன் வானொலியில்  நேற்றைய காற்று நிகழ்ச்சியில் உங்களோடு இணைந்துகொள்ளும் அறிவிப்பாளர் கந்தசாமி சூர்யா  தான். தனது வசீகரக் குரலால் நேயர்களை தன்னகத்தே ஈர்த்துள்ள இந்த இளைய சூரியனை மித்திரனுக்காய் சந்தித்தோம். அவருடைய ஒலிபரப்பு வாழ்க்கையில் நிகழ்ந்த சுவாரஸ்யமான அம்சங்களை கேட்டறிந்தோம். அவை இனி உங்களுக்காகவும்...

ஊடகத்துக்குள் எவ்வாறு உங்களது பிரவேசம் நிகழ்ந்தது? 
அது ஒரு சுவாரஸ்யமானது தான். இருப்பினும், என் நண்பனின் தியாகத்தால்தான் நான் ஊடகத்துறைக்குள் உட்பிரவேசிக்க முடிந்தது. என் நண்பர் பஸ்லி, சூரியன் மீது வெறிபிடித்தது போன்ற ஆர்வத்தோடு இதில் அறிவிப்பாளனாக வேண்டும் என்ற அவாவில் இருந்தார். அடிக்கடி சூரியன் கலையகத்துக்கு வருவார். ஒரு தடவை அவரோடு என்னையும் அழைத்து வந்தார். அங்கு நடந்த நேர்காணலில்  நான் தெரிவுசெய்யப்பட்டேன். பஸ்லி சூரியனுக்கு வராவிட்டாலும் இப்போது இன்னுமொரு ஊடகத்தில் பணியாற்றுவதை நான் பெருமையாக நினைக்கிறேன். இவாருதான் எனது ஊடகத்துறை ஆரம்பம் நிகழ்ந்த்தது. எனக்குள் இருந்த அறிவிப்பாளன் சூர்யாவை உலகுக்கு அறிமுகம் செய்த பெருமை என் நண்பனையும் சூரியன் வானொலி அறிவிப்பாளர்கள், நிறுவனத்தையே சாரும். 

எவ்வாறு உங்களுடைய ஆரம்பகால ஊடகப் பயணம் அமைந்திருந்தது?
அப்போதிருந்த எமது மூத்த திறமையான அறிவிப்பாளர்களின் வழிகாட்டலில், சூரியனில் 2010 இல் இணைந்து கொண்டபோது, எனக்குள் ஆர்வம் இருந்ததே தவிர, உடனே நிகழ்ச்சி படைக்கும் தைரியம் இருக்கவில்லை. என் மூத்த அறிவிப்பாலர்கல்தான் எனக்கு தெரியாத நுணுக்கங்களை கற்றுத்தந்து என்னை உயர்த்தினார்கள். திறமையான அவர்களின் வழிகாட்டல்தான் என் வாழ்வுக்கும் விடிவெள்ளியானது. சூரியனின் நவநீதன் அண்ணா மற்றும் எமது வானொலி ஆலோசகர் நடராஜா சிவம் அவர்களும்தான் அதிகமாக எனக்கு பின்புலத்தில் அன்றிலிருந்து இன்றுவரை நடைபோடுகின்றவர்கள். ஆரம்பத்தில் விடிய விடிய இரவுச் சூரியன் எனும் நிகழ்ச்சியும் பிற்பாடுகளில், ரீங்காரம், நேற்றைய காற்று, அருணோதயம் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன். இதன்மூலம்தான் எல்லா நிகழ்ச்சிகளையும் தொகுத்தளிக்கக் கூடிய திறன் எனக்குள் உருவானது எனலாம். 

இப்போதுள்ளவர்களிடம் ஒரு நிகழ்ச்சியை செய்யக் கொடுத்துவிட்டு, சில சந்தர்ப்பத்தில் இன்னுமொரு நிகழ்ச்சியை படைக்க அழைத்தால் முடியவில்லை என மறுதளிப்பதையும், வானலையிலேயே திணறுவதையும் அவதானிக்க முடிகின்றது. இந்நிலை தொடர்பாக..?
அவர்களிடம் முறையான பயிற்சி இல்லாமையே இதற்க்கு பிரதான காரணமாக அமைகின்றது. சிலர் பொதுவாக தாம் செய்கின்ற ஒரு நிகழ்ச்சியை  மாத்திரம் செய்ய தம்மைப் பழக்கப்படுத்திக் கொள்வார்கள். வேறு எந்த நிகழ்ச்சிகளையும் கேட்பது கூட  குறைவு என்றுதான் சொல்லவேண்டியுள்ளது. இந்நிலையால் குறிப்பிட்ட ஊடகம்தான் தனது நல்ல பெயரை இழக்கவேண்டி வருகிறது. ஒலிபரப்பாளர்கள் எனக்கு இதுமட்டும்தான் முடியும் என்றெல்லாம் வரையறை வைத்திருக்ககூடாது. எல்லா வானொலிகளையும், பல்வேறு வையான நிகழ்ச்சிகளையும் செவிமடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களாலும் தம்மை எல்லா நிகழ்ச்சிகளையும் படைக்கும் திறமை வாய்ந்தவர்களாய் மாற்றிக் கொள்ள முடியும். 

இப்போது ஊடகத்துறையை நேசிக்கும் இளைஞர் சமூகம் குறைந்து விட்டதாகவே தோன்றுகிறது. இதற்க்கான காரணம்?
இபோதைய சமூக நிலை தான் இந்த நிலைப்பாட்டை நம்மிடையே தோற்றுவித்துள்ளது. இன்றைய இளைஞர்களுக்கு பொழுதுபோக்கு சாதனங்கள் மாறிவிட்டன.அந்நாட்களில், வானொலிகளே மக்களை மகிழ்வுபடுத்தும் சாதனங்கள். இப்போது நிலைமை அவ்வாறில்லை. தொலைக்காட்சிகளின் ஆக்கிரமிப்போடு, உலகத்தையே  ஒரு கைக்குள் கொண்டுவரும் இணையம் இன்றையவர்களையும் இளைய சமுதாயத்தையும் தொற்றிவிட்டன. வானொலிகள் மீதான ஈர்ப்பு என்பதைவிட, ஊடகங்களின் மீதான என்று கூறலாம். நம்மவர்கள் இப்போது அதிக நேரத்தை செலவழிப்பது முகப்புத்தகங்களில் தான். இது தவறில்லை. காலம் தந்த பரிசு. இருப்பினும், வானொலிகளுக்கு இப்போது மட்டுமல்ல. எப்போதுமே நேயர்கள் இருப்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 

நீங்கள் ஒரு  அறிவிப்பாளர் என்கிற ரீதியில், ஒலிபரப்பாளனுக்கு இருக்க வேண்டிய முக்கியமானவைகள்?
நல்ல தேடல் இருக்கவேண்டும். எதையும் புதிதாகச் சிந்தித்து செயலாற்றி வெற்றியடைய வேண்டுமென்ற கருத்துருவாக்கம் இருக்க வேண்டும். குறித்த துறையில் மாத்திரமில்லாமல், அனைத்துத் துறைகளிலும் முடிந்தளவுக்கு ஈடுபாடு கொள்ள வேண்டும். இவற்றைவிட முக்கியமாக நம் துறையைப்  பொறுத்த வரையில், மொழியறிவு என்பது அவசியமானது. ஏனெனில், தமிழ் வானொலிதானே என்பதற்காக தமிழை மட்டும் வைத்துக்கொண்டு காலம் கடத்த முடியாது. மொழிப் புலமை என்பது கட்டாயத் தேவையாகின்றது. எனவே, இத்தகைய திறன்களை வளர்த்துக் கொள்வதோடு, ஆளுமை பண்பும் நமக்குள் இருக்கவேண்டும். 

ஊடகத்துறைக்குள் பணம் சம்பாதிக்க முடியாது அல்லது சரியான ஊதியம் தரப்படுவதில்லை என்கிறார்களே, இது எந்தளவுக்கு உண்மையானது?
பொதுவாக எந்தத் தொழிலிலுமே பணம் சம்பாதிப்பதென்பது அவரவர் திறமைதான். எல்லாத் துறைக்கும் இது பொதுவானது. நம்மிடம் எந்தளவுக்கு தொழில் வன்மை இருக்கிறதோ, அந்தளவுக்கு ஒவ்வொருத்தராலும் சம்பாதிக்க முடியும் என்பது நான்கண்ட உண்மை. ஊடகத்துறையில் அதிகளவு சம்பளம் பெறுகின்றவர்கள் தான்  அதிகம் எனலாம்.இந்தக் கேள்விக்கு உண்மையான பதிலென்பது நமது உழைப்பினாலும் தொரமையாலும் தான் கிடைக்கும். 

இப்போது பல புதிய வானொலிகள் தோன்றிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் ஆரம்பமென்பது  ஆரோக்கியமானதா?
 கீரைக் கடைக்கும் எதிர்க்கடை  வேண்டுமென்பார்கள். பல வானொலிகள் தோன்றுவது ஆரோக்கியமானதே! ஏனென்றால், இவற்றின் வருகை மூலம் தரமான பல புதிய நிகழ்ச்சிகளும், திறமை படைத்தவர்களும் நமது நாட்டுக்கு கிடைப்பார். பழைமைக்குள் ஊறிப்போகாமல் புதுமைகள் புகுத்தப்பட வேண்டுமென்றால் புதிய வரவுகளின் வருகை அவசியமாகின்றது. தோற்றம் பெறுகின்ற வானொலிகள், தரமான நிகழ்ச்சிகளைப் படைக்கும் போது, வெற்றி பெற முடியும். மக்களின் இரசனை அறிந்து வானொலிகளோ அல்லது ஏனைய ஊடகங்களோ செயற்பட வேண்டும். 

இறுதியாக! உங்கள் ஒலிபரப்பாளர் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமொன்று ..
நான் வெற்றி வானொலியில் பணிபுரிந்து கொண்டிருந்த காலங்களில், சக பெண் அறிவிப்பாளர் ஒருவர் நம் நாட்டு பாடல்களை ஒலிபரப்புகின்ற நிகழ்ச்சியினை படைத்துக் கொண்டிருந்தார், இந்த நேரத்தில் நானும் எனது நண்பர் ஒருவரும், கலையக தொலைபேசிக்கு அழைப்பெடுத்து  எங்களை எம் நிறுவன மேலதிகாரி போல பாவனை செய்து பேசி அவரை குழப்பினோம். பின்னர், நாங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டு கலையகம் வந்தபோது, அந்த குறித்த அறிவிப்பாளர் அழுது கண்ணீர் சிந்தி நிகழ்ச்சி மேலதிகாரி லோஷன் அண்ணாவுக்கு அழைப்பெடுக்க ஆயத்தம். பின்னர், சமாதானம் செய்து அந்த மற்ப நபர்கள் நாங்கள் தான் என்பதை தெரிவித்தோம். அந்த நினைவுகள் மறக்கவே முடியாதவை. 
    நேர்காணல்- இரா-நட்சத்திரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக