சஞ்ஜீவ ஒலி இணைய வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் 

துசர்சினி                                              இராசலிங்கம்.

மீண்டும் உத்வேகத்தோடு மேலெழுந்திருக்கிற முல்லைமண்ணில் 
ஊடகத்துறையும் பரந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பல்வேறுபட்ட வகையில் அங்கிருந்தும் நம்மவர்கள் பிரகாசிக்கத் 
தொடங்கிருக்கிறார்கள். அத்தகையவர்களை அடையாளப்படுத்தும் முகமாக மித்திரன் செயற்பட்டுவருகிறது. இந்தவகையில் முல்லைத்தீவிலிருந்து உலகெல்லாம் தமிழிசையாக ஒலித்துக்கொண்டிருக்கும் சஞ்ஜீவ ஒலி இணையத்தள வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் துசர்சினி இராசலிங்கத்தை எமது வாசகர்களுக்காக நேர்கண்டபோது, அவர் பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான அம்சங்கள் உங்களுக்காகவும்...
முல்லை மண்ணில் இயற்கை அன்னை வளத்தைக் கொட்டிக் கொடுத்திருக்கும் கொக்குத்தொடுவாய் வடக்கை பிறப்பிடமாக கொண்ட துசர்சினி, ஆறுபேர் கொண்ட குடும்பத்தில் கடைக் குட்டி. தரம் ஒன்றிலிருந்து பத்துவரை மு/அலம்பில் ரோமன் கத்தோலிக்க வித்தியாலயத்திலும் , சாதாரணம் மற்றும் உயர்தரத்தினை மு/குமுளமுனை மகா வித்தியாலயத்திலும் தன்னுடைய கல்விக் காலத்தை நிறைவு செய்திருக்கிறார். இளமையும் திறமையும் நிரம்பியிருக்க வலம்வரும் துசர்சினி தன்னுடைய ஒலிபரப்பாளர் வாழ்க்கை தொடர்பாக பேசியவை இனி உங்களுக்கும்...
உங்களது ஊடகத்துறைப் பிரவேசம் எவ்வாறு அமைந்தது?
 பாடசாலைக் காலங்களில் நடைபெறுகின்ற நிகழ்வுகளுக்கு தலைமை தாங்குவதோடு, அங்கு நடைபெறுகின்ற கவிதை, பேச்சு, விவாதம், போன்றவற்றிலும் ஏனைய கலை இலக்கிய நிகழ்வுகளிலும் ஆர்வமாக ஈடுபடுவதே என்னை இந்நிலைக்கு உயர்த்தியிருக்கிறது எனலாம். 
2010  ஆம் ஆண்டு முள்ளியவளையில் எமது வானொலியின் பணிப்பாளரான மயில்வாகனம் சென்தூரனால், mass media  institude  இல் ஊடகக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்தேன். பிற்பாடு, சொந்த மண்ணிலிருந்து ஒரு வானொலியை ஆரம்பிக்க வேண்டுமென்ற செந்தூரனின் முயற்சிக்கு தோள் கொடுக்கும் முகமாக நானும் இணைந்து கொண்டேன். அதன்படி, 2010 .05 .07 இல் உத்தியோகபூர்வமாக 24 மணிநேரம் நிகழ்ச்சிகளைப் படைக்கும் வானொலியாக
 www.sanjeevaoli.com எனும் இணையத்தளத்தில் ஒலிக்கத்தொடங்கியது எமது வானொலி. 

நீங்கள் இந்த வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் என்ற ரீதியில், சஞ்ஜீவ ஒலி வானொலி தொடர்பாகவும் நிகழ்ச்சிப் படைப்புக்கள் தொடர்பாகவும்  கூறுங்கள்..? 
    பொதுவாக இணையத்தள வானொலிகள் என்கின்றபோது, இளம் தலை முறையினரை குறிவைத்தே நிகழ்ச்சிகளைப் படைக்க வேண்டும். ஏனெனில், இணையத்தை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதற்க்கு நாங்களும் விதிவிலக்கல்ல. எமது வானொலி ஆரம்பிக்கப்பட்டு சில காலங்கள் இருபத்து நான்குமணி நேர நிகழ்ச்சிகளைப் படைத்தாலும், தற்போது எமது அறிவிப்பாளர்களின் வேதனத்தையும் இதர செலவுகளையும் கவனத்தில் கொண்டு, இப்போது ஒன்பது  மணித்தியாலங்கள் நிகழ்ச்சிகளைப் படைத்து வருகிறோம். இலங்கை நேரப்படி காலை 10 .30 தொடக்கம் 1 .30 மணிவரை காலைப் பொழுதினை கலகலப்பாக்க வணக்கம் தமிழருவி என்னும் நிகழ்ச்சி படைக்கப்பட்டு வருகிறது. 1 . 30 தொடக்கம் மாலைப் பொழுது 4 .30 வரை வாரநாட்களில் இன்னிசை என்ற பெயரிலும்  சனி மற்றும் ஞாயிறுகளில் இசைச்சரம் என்றும் ஒலிபரப்பாகிறது. தொடர்ந்து மாலை 4 .30 முதல்  இரவு 7 .30 வரை இதயங்களை வருடும் இனிமையான இடைக்காலப் பாடல்களை சுமந்தபடி இணைய ராகங்கள் என்ற நிகழ்ச்சியும்  ஒலிபரப்பாகி வருகின்றன. இந்நிகழ்ச்சிகள் அனைத்திலும் புலம் பெயர்ந்து வாழும் எமது எல்லா உறவுகளையும் நேரடியாக இணைந்து மகிழ்வளித்து வருகிறோம். 

இவற்றில் நீங்கள் இணைய ராகங்கள் என்னும் நிகழ்ச்சியை தொகுத்தளித்து வருகிறீர்கள். அந்த நிகழ்ச்சி தொடர்பாக கூறுங்கள்...? 
எமது வானொலியில் எல்லா நிகழ்ச்சிகளையும் என்னால் படைக்க முடிந்தாலும், எனக்கென தனித்துவமாக அடையாளத்தை வழங்குவது நான் வழங்கும் இணைய ராகங்கள் நிகழ்ச்சி தான். இனிமையான இடைக்காலப் பாடல்களை வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நேயர்களுக்கு களம் அமைக்கும் முகமாக அவர்களுடைய குரலில் கவிதைகளையும் சேர்த்து வருகிறேன். அத்தோடு எமது வானொலியில் இணைந்து கொள்ளும் நேயர்களின் தொகை அதிகதித்து வருவதால், உற்சாகமாக எமது  நிகழ்ச்சியின் நேரத்தையும் அதிகரிக்கக் காத்திருக்கிறோம். 

சஞ்ஜீவ ஒலியில் வழமையான வானொலிகளை விட எத்தகைய மாற்றங்களை கடைப்பிடித்து வருகிறீர்கள்..?
சஞ்ஜீவ ஒலியில் எமது அறிவிப்பாளர்கள் தூய தமிழில் தான் பேசுகிறார்கள். இதனை நாங்கள் தவறாது கடைப்பிடித்து வருகிறோம். எமது நேயர்கள் கூட இதனைத் தான் விரும்புகிறார்கள். அத்தோடு, எமது பகுதிகளில் இருக்கின்ற பிரபல்யமான இறை வழிபாட்டுத் தலங்களில் அவற்றின் சிறப்பு நிகழ்வுகளை எமது வானொலியூடாக நேரடி நிகழ்ச்சிகளாக படைக்கின்றோம். வெறுமனே இந்துக்களின் ஆலயங்களை மட்டுமல்லாமல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் என்பனவற்றின் உற்சவ நிகழ்வுகளையும் நாம் எமது நேயர்களுக்கு இணையத்தின் வழியாகக் கொண்டு வந்து சேர்க்கிறோம். எந்த இணைய வானொலிகளும் செய்யாத வகையில் எங்களிடம் திறமையான பல அறிவிப்பாளர்கள் தமது நிகழ்ச்சிகளை படைத்து வருவதும் இங்கே குறிப்பிடத் தக்கது. குறைவான வளத்தோடு காணப்பட்டாலும், நிறைவான நிகழ்ச்சிப் படைப்பை நாங்கள் செய்து வருகிறோம் என்பதை பெருமையோடு சுட்டி காட்டுகிறேன். 
உங்கள் வானொலி  பல சேவைகளையும் செய்துவருவதாக அறிகிறோம். அவை தொடர்பாக...?
யுத்தம் காரணமாக பெற்றோரை இழந்த பிள்ளைகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும், அவர்களின் கல்வி வாழ்க்கைக்கும் எங்கள் வானொலியால் உதவிகளையும் கற்றல் உபகரங்களையும் செய்து வருகிறோம். அத்தோடு, முல்லைத்தீவிலுள்ள வறிய பாடசாலைகளுக்கு  எமது வானொலியின் பிறந்த தினத்தை நினைவுகூரும் முகமாக அங்குள்ள மாணவர்களுக்கு சில போட்டிகளை நடாத்தி அவர்களுக்கு பணப் பரிசில்களை வழங்குகின்றோம். இவை மாத்திரமல்லாமல், வெளிநாட்டிலுள்ள எங்கள் நேயர் ஒருவரின் உதவியுடன் இவ்வாண்டும் கணவனை இழந்த இரு விதவைப் பெண்களுக்கு வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக குறிப்பிட்ட தொகைப் பணத்தினை வழங்கி வைத்தோம். குறிப்பாக அவர்கள் இருவரும் அந்தப் பணத்தின் உதவியுடன் கோழி வளர்ப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். இவற்றோடு, இன்னும் சில நாட்களில் வள்ளிபுனம் இனிய வாழ்வு இல்லத்திலுள்ள சிறார்களுக்கு மதிய போசனத்தை ஒரு நாளில் வழங்கவும் தீர்மானித்துள்ளோம். இவை மாத்திரமல்லாமல், இன்னும் பலவற்றை எதிர்காலத்தில் செயட்படுத்தவுள்ளோம். 

உங்களது அறிவிப்பாளர்களை எவ்வாறு தெரிவு செய்தீர்கள்...? 
முல்லை மண்ணிலிருந்து ஆரம்பிக்கப்படவிருக்கும் எமது வானொலிக்கு இளம் அறிவிப்பாளர்கள் தேவை என்ன்று சுவரொட்டிகள் ஒட்டினோம். நேர்முகத் தேர்வுக்கு அதிகளவானவர்கள் வருகை தந்திருந்தார்கள். அவர்களில், திறமையான இளம் அறிவிப்பாளர்கள் பதினைந்து பேரை தெரிவு செய்து மூன்று மாதங்கள் அவர்களுக்கு ஊடகம் தொடர்பான பல விடயங்களை கற்பித்து முறைப்படி நிகழ்ச்சிகளை அவர்களுடைய திறமைக்கேற்ப வழங்கினோம். அவர்களும் பல்வேறு பட்ட துறைகளிளிலும் சிறப்பான இடத்தை வகித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

இணைய வானொலிகளில் அதிகளவான நேயர்களை கொண்டிருக்கும் உங்கள் வானொலி மூலம் நீங்கள் எதிர்பார்த்த இலக்கு எட்டப்பட்டிருக்கிறதா? 
நிச்சயமாக எட்டப் பட்டுள்ளது. உலகின் மூலை முடுக்ககளிலேல்லாம் சஞ்ஜீவ ஒலி எமது புலம் பெயர் உறவுகளின் இதய ஒலியாக ஓலித்துக் கொண்டிருக்கிறது.  எம்மோடு ஒவ்வொருநாளும் புதிய புதிய உறவுகள் இணைந்து கொள்கிறார்கள். தமக்குத் தெரிந்த எங்களை அவர்களுடைய உறவுகளுக்கும் அறிமுகம் செய்து எண்களின் இணைய முகவரியை வழங்குகிறார்கள். இவ்வாறு அதிகரித்த நேயர்களை எமது வானொலிதான் கொண்டுள்ளது என்பதன் மூலம் எம் இலக்கு எட்டப்பட்டிருக்கிறது என்பது அனைவருக்கும் புரியும் என்று நிக்\நிக்கிறேன். 

சரி! பலத்த ஆதரவுடனும் நேயர்களின் ஆதரவுக்குளும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ள உங்களது வானொலிப் பயணத்தில் உங்களுக்கே மறக்க முடியாத பதிவொன்று..? 
உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது  என்று எமது நேயர்கள் பாராட்டுகின்றபோதும், வெளிநாடுகளில் வசிக்கும் எமது நேயர்கள் இலங்கை வருகின்ற போது, எம்மீதுள்ள அன்பினால் எம்மைப் பார்க்க கலையகம் வருவார்கள். வந்து வாழ்த்தி அவர்கள் உரையாடும் சந்தர்ப்பங்களையும் என்னால் மறக்கவே முடியாது. அத்தோடு வெளிநாடு ஒன்றிலிருந்து  எமது நேயர் ஒருவர் எனக்கு வாழ்த்து அட்டை ஒன்றினை அனுப்பும்போது ''முல்லைமண்ணின் இனிய குரலே ''என்று வாழ்த்து சொல்லியிருந்தார். அப்போது, அளவில்லா ஆனந்தம் அடைந்தேன். இந்தத் தருணங்கள்  என்னால் மறக்க முடியாதவை. 

ஒரு அறிவிப்பாளர், அத்தோடு ஒரு வானொலியின் நிகழ்ச்சி முகாமையாளர் என்ற நிலையில் தற்கால ஊடகத்துறை மீதான உங்களது கண்ணோட்டம்? 
இப்போதுள்ள இலத்திரனியல் ஊடகங்கள் அனைத்தும் சிறப்பான வகிபாவத்தை மக்கள் மத்தில் கொண்டிருந்தாலும், ஒருசில வானொலிகள் வர்த்தக விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றமை கவலையளிக்கின்ற விடயமாகும். இதற்க்குக் காரணம் பணம் என்று சாக்குப் போக்குச் சொன்னாலும், நேயர்களின் இரசனைக்கு  முக்கியத்துவம் அளிக்கவேண்டுமேன்பது வானொலியின் தர்மமாகிறது. அத்தோடு அண்மையில் ஒரு மூத்த அறிவிப்பாளர் முகநூல் வழியாக ஒரு கருத்தைச் சொல்லியிருந்தார். 
சட்ட விரோதமாக இணைய வானொலிகள் தோன்றியுள்ளன என்று! அவ்வாறான கருத்தானது, ஒரு மூத்த அறிவிப்பாளர் கூறக் கூடியதல்ல. அவ் அறிவிப்பாளர் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கலாம். அத்தோடு, இப்படியானவர்கள் வளர்ந்து வரும் ஊடகங்களை உயிர்ப்பிக்க உதவ வேண்டும். எம்மைப் போன்ற வளர்ந்துவரும் ஊடகவியாலர்களுக்கு இத்தகைய இணைய வானொலிகள் தான் கரங் கொடுக்கிறது. எந்தவித பக்க சார்புமில்லாது, அரசியல் கலப்பும் இல்லாமல்,  இளைஞர்கள் கூட்டணியோடு நம்மவர்களுக்கு களமமைக்கும் வகையில் திறமைகளை வெளிக்கொணரும் எம்மைப் போன்றவர்களின் வளர்ச்சிக்கு இப்படியான வார்த்தைகள் வேதனையளிக்கின்றன. 

உங்கள் முயற்சிகள் மென்மேலும் வெற்றியடைய வாழ்த்துக்கள். எமது வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது...?
ஏழ்மை  எனும் போர்வைக்குள் திறமைகளை மூடியிருக்கும் எமது உறவுகளே! உங்கள் அனைவராலும் உங்கள் இலக்கை அடைய முடியும். அதிக அர்ப்பணிப்பும், ஆர்வமும், திறமையும், ஈடுபாடும் அத்தோடு உங்கள் துறைகளில் உள்ளவர்களின் ஆலோசனைகளின்  படி நடப்பதனூடாகவும்நீங்கள் வெற்றியடையலாம். இது மாத்திரமில்லாமல், என்னையும் இந்த உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை  www .sanjeevaoli .com   யே சாரும். அத்தோடு, என்னை இன்னும் வாழவைத்துக் கொண்டிருக்கும் எனக்காக  மறைந்த என் மூத்த அண்ணா துசந்தனுக்கும் வெற்றிகளை சமர்பிக்கிறேன். ''எனவே, வாருங்கள் உறவுகளே! என்னால் முடியும்!'' எனும் வார்த்தையை உங்கள் நெஞ்சில் பதியுங்கள். உங்களால் முடியாதது எதுவுமில்லை. 

சாதனைப் பயணம் தொடர்ந்து சரித்திரம் படைக்க மித்திரனின் வாழ்த்துக்கள். 
-இரா-நட்சத்திரன்-