சனி, 11 ஆகஸ்ட், 2012

எம்மவரின் படைப்புக்களை கண்டு கொள்ளுங்கள்.-கவிஞர் மதன்-



இலக்கியம் இப்போது அதிகமான இளையவர்களால் நிறைக்கப் பட்டுக்கொண்டிருக்கிறது என்பதற்கு ஆதாரமாய் பல்வேறுபட்ட படைப்புக்களும் படைப்பாளிகளும் கட்டியம் கூறி நிற்கிறார்கள். இவ்வாறு இன்றைய இலக்கியத் துறையில் பல இளையவர்கள் புதிய முயற்சிகளில் இறங்கியிருப்பது பாராட்டத்தக்கது. முடியாது என முயலாமல் இருப்பதை விட, முயன்று தோற்பது மேல் என்ற வேதத்தை தனக்குரியதாக்கியபடி இலக்கியத்தை இதயத்தில் சுமக்கும் இளைய படைப்பாளியும் கவிஞன் என்னும் கவிதைச் சஞ்சிகையின் ஆசிரியருமான சதாசிவம் மதன் மித்திரனின் வாசகர்களுக்காய் பல சுவாரஸ்யமான விடயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
                                                                         கிழக்கிலங்கையின் தமிழ்மணக்கும் பிரதேசமான மட்டக்களப்பின் புதுக்குடிருப்பை பிறந்த மண்ணாகக் கொண்ட மதன், சதாசிவம்-பார்வதி தம்பதியினருக்கு மூத்த புதல்வர். இரண்டு சகோதரர்களுக்கும் ஒரு சகோதரிக்கும் உரித்துடைய அண்ணன். ஆரம்பக் கல்வியை  மட்-புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்திலும் உயர்தரத்தினை  மட் - சிவானந்தா தேசிய பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவிலும் முடித்துக் கொண்ட இந்தக் கவிஞனை உருவாக்கிய கவிஞன், தற்போது காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் தாதிய உத்தியோகத்தராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். தொழிலில் ஒருபுறமும் இலக்கியத்தில் மறுபுறமும் முழுவீச்சில் ஈடுபட்டுவரும் மதன் பகிர்ந்து கொண்டவை இனி உங்களுக்காகவும்...


  உங்களுடைய எழுத்துலக அறிமுகம் எவ்வாறு அமைந்தது?
கல்வி கற்கும் காலத்தில் தமிழ் மொழி தினத்தின் கவிதைப் போட்டியொன்றில்
வலய மட்டத்தில் 2ம் இடம் பெற்றிருந்தேன். ஆனால் அப்போதிருந்தே கவிதை
எழுதுவேன் என்றில்லை. போட்டிக்கு ஒருவரை அனுப்பவேண்டும் என்பதற்காக
அனுப்பியிருந்தார்கள். என்ன கவிதை எப்படி எழுதினேன் என்றுகூட ஞாபகமில்லை.
அதற்குப்பிறகு அல்லது அதற்கு முன்பு கூடக் கவிதை எழுதியதில்லை. அதன்பின்
2008 இல்  நான் மட்டக்களப்பு தாதிய கல்லூரியில் பயின்றுகொண்டிருக்கும்
காலத்தில் "எனக்காக ஒருமுறை" என்ற ஒரு கவிதை எழுதினேன். புத்தகங்கள் ,
சஞ்சிகைகள் வாசிக்கும் பழக்கம் அப்பாவுக்கு இருந்த காரணத்தினால் வீட்டில்
புத்தகங்கள் சங்சிகைகளுக்குக் குறைவிருக்காது. அப்படியே அந்தப் பழக்கம்
எனக்கு மட்டுமல்ல வீட்டில் அனைவருக்குமே தொற்றிக்கொண்டது. இதனால்
மட்டக்களப்பிலிருந்து அப்போது அண்மைக்காலமாக வெளிவந்துகொண்டிருந்த
சஞ்சிகையான செங்கதிர் சஞ்சிகைக்கு அனுப்பியிருந்தேன். சிறிது வாரங்களின்
பின் அதன் ஆசிரியர் திரு.கோபாலகிருஸ்ணன் அவர்களிடமிருந்து ஒரு தந்தி
வந்தது. கவிதை நன்றாயிருந்தது இளங்கதிர் பகுதிக்கு  புதுமுக அறிமுகத்தில்
போடுவதற்காக உங்களது விபரங்களை அனுப்புமாறு. அதற்கு அனுப்பியிருந்தேன்.
அந்தக் கவிதை 2008 ஐப்பசி மாதம் வெளியான செங்கதிரில் இளையோர் பக்கம்
எனும் பிரிவில் இளங்கதிர் எனும் தலைப்பில் புதுமுக அறிமுகமாக
பிரசுரமாகியிருந்தது.
    அதோடு முற்றுப்பெற்ற எனது கவிதைப் பிரவேசத்திற்கு 2.2.2009 இல்
லோகேஸ்வரி கிருஸ்ணமூர்த்தி அவர்களிடமிருந்து வந்த எனது கவிதை பற்றிய
சுவாரஸ்யமான விமர்சனம் கொண்ட கடிதம் புதுப்பாதை ஒன்றை  அமைத்தது. நான்
மீண்டும் மீண்டும் கவிதை எழுதவேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது.
அந்நாளில் அவரை ஒரு இரசிகை மட்டுமாகவே அறிந்தேன். அவர் ஒரு சிறுகதை
எழுத்தாளர் என்பது அப்போது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
சுருக்கமாகச் சொல்லப்போனால் எழுத்துலக அறிமுகத்திற்கு முக்கிய காரணம்
செங்கதிர் சஞ்சிகையும் என் முதல் இரசிகையும் தான்.


 கவிஞன் சஞ்சிகையை ஆசிரியராக நடாத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு.. அவ்வாறானதொரு சஞ்சிகையை வெளியிட வேண்டுமென்று எதனால் தோன்றியது?

நான் தரம்-9 இல் கல்விகற்கும் போது "திறவுகோல்" என்றொரு கையெழுத்துச்
சஞ்சிகை என்னை ஆசிரியராகக் கொண்டு தயாரிக்கப்பட்டது. அது வடகிழக்கு மாகாண
மட்டத்தில் முதலிடம் பெற்றிருந்தது. அதிலிருந்த வந்த ஆர்வம் எனக்குள்ளே ஒரு இலக்கிய ஆர்வத்தை தூண்டியிருந்தது. ஆனால் அப்போது இத்தகைய முயற்சி எடுக்கும் நிலை எனக்கிருக்கவில்லை. பிற்பாடு, 
எனது முதல் கவிதை பிரசுரமாகியதன் பின்னதாக வந்த பாராட்டுமடலைத் தொடர்ந்து நிறையக் கவிதைகள் எழுதி சஞ்சிகைகள், பத்திரிகைகளுக்கு  அனுப்பியிருந்தேன். அவை பிரசுரமாகும் வரை காத்திருந்த காலமென்பது அதிகமானது. இதனால் எனக்குள்ளே ஒரு எண்ணம் உருவானது.  கவிதைக்கென்றோரு தனியாக சஞ்சிகை
உருவாக்கினால் இவ்வாறு என்னைப்போன்றோர் காத்திருக்க வேண்டிய அவசியம்
வராது என்ற சிந்தனையில் தோன்றியவன் தான்  கவிஞன். எழுதக் களம் கிடைக்காமல் காத்திருக்கும் இளைய தலைமுறைகளுக்கும் திறமை மிகுந்தவர்களுக்கும் கவிஞன் களமாகிறான் என்பதில் என்பதுதான் எனக்குள்ள திருப்தி. இவைதான் என்னுள்ளே கவிஞன் உருவாகக் காரமாயிற்று. 


கவிஞன் இதழின் உள்ளடக்கங்கள் அது பாடும் விடயங்கள் தொடர்பாக...

 
அறிமுகப் புதுமுகம் என்ற பகுதியில்  புதியவர்களை இலக்கிய உலகுக்கு அறிமுகம் செய்யும் முகமாக அந்தப் பகுதியை ஆரம்பித்தோம். அத்தோடு,  வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஈழத்துக் கவிஞர்கள் பற்றிய
அறிமுகமும் ஆவணப்படுத்தப் படுவதற்கான முயற்சியாகவும் ஒரு பகுதியும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கீதமும் கவிநயமும் என்னும் பகுதியில்  பாடசாலைகளின் கவித்துவம்மிக்க கீதங்களை அறிமுகம் செய்யும் பகுதியாக ஒரு பகுதியும், 
இவ்வாறான பகுதிகள் மூலமாக  இளையவர்களை கவித்துவம் மிக்க கவிதைகளை எழுதத் தூண்டுகிறோம். அடுத்து  வலைப்பூங்காவுக்குள் இணையத்தில் காணும் கவிதை சம்பந்தமான இணையத்தளங்களைஅறிமுகம் செய்கிறோம். அத்தோடு நம்மவர்களின் கவிதை நூல்களை அறிமுகம் செய்வதற்காக நூலங்காடி என்ற பகுதியும்,  
 படைப்பும் பார்வையும் என்னும் நூல் விமர்சனப் பகுதியும் பிரபலமான நம் படைப்பாளிகள் படைக்கும் தற்கால கவிதை மீதான பார்வை பத்தியும், மேசைக்கிறுக்கல் பக்கத்தில்  - பாடசாலை, கல்லூரி மேசைகளில் பொறுக்கியெடுக்கும் கவிதைத் துளிகளை சேர்த்து வருகிறோம். 
 கைக்கூ கோணர் பகுதியினூடாக கைக்கூ கவிதைகள் பற்றியதான தொடர் கட்டுரை ஒன்றை வாசகர்களுக்கு பிரசவித்து வருகிறோம். முற்று முழுதாக கவிஞனை நாங்கள் கவிதைகளின் இருப்பிடமாகவும், கவிதை பற்றிய உள்ளடக்கத்தோடு வெளியிட்டு வருகிறோம். 


இலங்கையில் ஒரு சஞ்சிகையை வெளியிடுவதென்பது இமாலயப் பிரச்சினை. நீங்களும்
இதற்க்கு விதி விலக்கல்ல.இந்த சஞ்சிகையை வெளியிடும் உங்களது அனுபவங்கள்.. நீங்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள்? 
நிறையவே உள்ளன. முதன்மையானது எனது தொழில், இதனால் முற்றுமுழுதாக சஞ்சிகை வெளியீட்டுடன் கவனம் செலுத்துவதென்பது தற்போது சிரமமாக உள்ளது. சிரமத்தின் மத்தியிலும்
வாசகர்களின் தூண்டலால் செயற்பட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றயது, சந்தைப்படுத்தலில் உள்ள சிக்கல்கள் அதிகம். இலங்கையில் வெளிநாடுகளில் இருந்து கலாசாரத்தைக் கிழிக்கும் குப்பைகளாக வெளிவரும் சஞ்சிகைகளையும், இதழ்களையும் விரும்பிப் படிக்கும் நம்மவர்கள், ஈழத்தில் எழுதப்படும் அல்லது படைக்கப்படும் படைப்புக்களை எறேடுப்பதில்லை. இதனால், நமது இத்தகைய முயற்சிகள் சந்தைப்படுத்தலில் பின்னடைவை சந்திக்கின்றன. அத்தோடு, இதில் முக்கியமாக ஒரு துறை சார்ந்த இலக்கியம் என்பதால் அதில்
ஆர்வமுள்ளவர்களைக் கண்டுகொள்வதில் உள்ள சிரமம்


இலக்கியத்தைப் போல உங்களுக்கு பிடித்த அல்லது உங்களைக் கவர்ந்த வேறு துறைகள்?
இசைத்துறையில் எனக்கு அதிகம் நாட்டமுண்டு. ஓரளவு பாடும் திறமை எனக்குள் இருப்பதை உணர்கிறேன். அத்தோடு ஓவியம் 
வரைவதிலும் இணைய வடிவமைப்பு செய்வதிலும், சமூக சேவைகளில் ஈடுபடவும் அதிகம் என்னுள்ளே ஆர்வமிருக்கின்றன. 

இலங்கை இலக்கியத்துறையில் இப்போது பல புதிய வரவுகள் நாளாந்தம்
வந்துகொண்டிருக்கிறார்கள். ஆரோக்கியமான இலக்கிய உலகம் இதனால்
தொற்றுவிக்கப்படுமென நீங்கள் நினைக்கிறீர்களா?

நிச்சயமாக தோற்றுவிக்கப்படும்! ஆனால் அதனை உடனே உதிர்பார்க்க முடியாது
ஆரோக்கியமாக இயக்கியங்களைப்படைப்பவர்களைக் கேட்டுப்பாருங்கள் அவர்களின்
கன்னி முயற்சி பற்றி. இப்போதும்அவர்கள் தங்களைச் செழுமைப்படுத்திக்
கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் கேட்ட விடயம் மரம் ஒன்று முளைப்பது
போன்றதே. அவை முழைத்தவுடன் நிழல் தருவதில்லை. குறித்த காலம்வரை வளர்ந்த
பின்புதான் கிளை பரப்பி நிழல் தரத் தொடங்குகின்றன. காத்திருங்கள்
ஆரோக்கியமான இலக்கியம் அவர்களும் தருவார்கள்.  எனது கன்னிமுயற்சியான "உயிரோவியம்"
கவிதைத்தொகுதிக்குப் பின்னான எனது சொந்த அனுபவத்தை வைத்தே! இதை என்னால்
தைரியமாகச் சொல்ல முடிகின்றது. பல படைப்பாளிகள் இப்போது புலமை மிக்க தமது படைப்புக்களை வெளிப்படுத்தத் தொடங்கிருக்கிறார்கள். இவர்களின் வருகை மூலம், பழமைக்குள் மூழ்கியிருக்கும் நமது இலக்கிய உலகம் புதுமை என்னும் பொன்னாடை போர்த்தும் என்பது திண்ணம். 

எமது சமூகத்தில் நீங்கள் ஒரு படைப்பாளி என்னும் பார்வையில் மாற்ற வேண்டிய விடயம் எது என்கிறீர்கள்?
எப்போதுமே அடுத்தவரிடம் குறைகளை கண்டுபிடிக்கவேன்றே சிந்திக்கும் எமது மக்கள் எண்ணம் மாறவேண்டும். அத்தோடு, இலக்கியத்தில் ஈடுபடுகின்ற இளையவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை செய்து, அவர்களுக்கு வழிகாட்டிகளாய் இருக்க வேண்டும். யாரோ ஒருவரின் படைப்பை பல ரூபாய் கொடுத்து வாங்கிப் படிக்கும் நம்மவர்கள், எம்மவர்களின் படைப்புக்களை நூலகத்திலாவது பாருங்கள் என்பதை வருத்ததோடு சொல்லிக் கொள்கிறேன். இந்த நிலை விரைவில் மாற வேண்டுமேனே எதிர்பார்க்கிறேன். 

ஒரு கவிஞராகவும், சஞ்சிகை ஆசிரியராகவும் இலக்கிய உலகில் அறியப்படும் உங்களுக்கு எத்தகையதான பின்னூட்டல்கள் கிடைக்கின்றன? 
என்னுடைய இத்துறை பிரவேசத்திற்கு ஆதார சுருதியானவர்களே என் பெற்றோர்கள்தான். அப்பா அதிகமாக நூல்கள் மற்றும் இதழ்களைப் படிப்பது வழமை. அந்த தாக்கமோ என்னவோ எனக்கும் நூல்களையும் வாசிப்பையும் பிடித்துப் போயிற்று.  அம்மா, அப்பா, சகோதர்களின் ஆதரவும் உட்சாகப்படுத்தலுமே என்னை இந்தளவுக்கு உஅய்த்தியுள்ளது எனலாம். என் தேவைகளை புரிந்து கொண்டு உதவும் அவர்களை அடைந்தது எனது பிறவிப் பாக்கியம் எனலாம். பிற்பாடு, எனது இலக்கிய நுழைவுக்குப் பின்னான எனது நகர்வுகளுக்கு என்றும் பக்கபலமாக நின்றுகொண்டிருப்பவர் பற்றியும் கூறவேண்டும். கவிக்கோகிலம் தம்பிலுவில் ஜெகா" அவர்கள் இவர்  நாட்டின் சகல
பாகங்களிலுமுள்ள கவிஞர்களுடனான எனது தொடர்வையும் அறிமுகத்தை யும்
ஏற்றடுத்தித்தருபவர் மட்டுமல்லாமல், கவிஞன் சஞ்சிகைக்கு எப்போதும் தனது
ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருப்பவர். அவரையும் இந்நேரத்தில் நினைவுபடுத்திக் கொள்கிறேன். இவர்களோடு, நானும் கவிஞனும் இன்னும் முன்னேறிக்கொண்டிருக்க எனது படைப்புக்களையும் கவிஞனையும் பாராட்டும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளும் எமது வாசக நல்லுள்ளங்களை கண்டிப்பாக நன்றியோடு எண்ணுகிறேன். இவர்கள் அனைவரின் உருவாக்கத்தில் உற்பத்தி ஆனவன் தான்   நான். 

மதனின் கனவுகள் அனைத்தும் மெய்ப்பட வாழ்த்தியபடி விடைபெற்றோம்.
நேர்காணல்- இரா-நட்சத்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக