கவிதைத் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு
ஈழத்துக் கவிதை உலகில் இன்று இளையவர்களும் ஆரோக்கியமான இலக்கியப் படைப்புக்களைப் படைக்கத்தொடங்கி விட்டார்களென்று பறைசாற்றும்விதமாய் வந்திருக்கிறது இளங் கவிஞர் முல்லை திவ்யனின் கவியின் ஏக்கம் கவிதைத் தொகுதி.
வடமாகாண இலக்கிய விருதினைப் பெற்றுக் கொண்ட எழுத்தாளரான அமரர் ஆனந்தமயிலின் புதல்வராய் இலக்கியத்துள் நுழைந்துகொண்ட முல்லைதிவ்யனின் இரண்டாவது கவிதைத் தொகுப்புத்தான் இந்த கவியின் ஏக்கம். நம்நாட்டின் பத்திரிகைகளையும் இலக்கிய இதழ்களையும் ஆக்கிரமித்திருந்த இவரது முதலாவது படைப்பாக "நல்லதோர் கனவும் அந்தரிப்போரும்" என்ற கவிதைத் தொகுதி கடந்த வருடம் வெளிவந்திருந்தது. இது இரண்டாவது பிரசவமாகியுள்ளது.
இலக்கியத்தையே இலக்காகக் கொண்டு தன்னுடைய கவிதைப் பயணத்தை நகர்த்திவரும் முல்லைதிவ்யனது கவியின் ஏக்கத்தைப் பற்றி விலாவாரியாக ஆராய்வது பொருத்தமென நினைக்கிறேன்.
"மிதித்த பூர் சாகாத மென்னடைப் பாரதியாய்- அதிகமாய்ப் பேசாத இன்முக வாரிதியாய்..." என கவியின் ஏக்கத்திற்கு அணிந்துரை வழங்கியுள்ள கவிஞர் சு.க.சிந்துதாசன் ஆசிரியர் முல்லைதிவ்யனைக் கூறுகின்றார்.
"ருது சிங்காரம்" எனத் தொடங்கி '' நீயும் எதோ இறை சிருஸ்டி '' என்று 38 கவிதைகளை இந்நூல் தரித்திருக்கின்றது. பெரும்பாலும் இப்போதுகளில், நாளுக்குநாள் பல கவிதை நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. சில கனதியான தொகுப்புக்கள் காத்திரமான கவிதைகளை பிரசவித்து தமது இருப்பை உறுதிசெய்து கொள்ள, பல படைப்புக்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்துபோய் விடுகின்றன.
இந்நிலையில், தன் பிறந்த மண்ணின் ஆதியை தன்னுடைய முதல்ப் பெயராகத் தரித்துக்கொண்ட முல்லை திவ்யன், நூலில் கவிதைகளின் தொகையை நீட்டாமல் அளவோடு கோர்த்திருப்பது தொகுப்பை அழகாக்குகிறது.
இன்று பலர் எடுத்துக்கொள்ளும் கற்பனை அரிதாரத்தை முல்லை தனது படைப்புக்களில் கையாளாதமை, கவிதைகளின் தரத்தை அதிகரிக்கின்றன. தன்னுடைய படைப்புக்களின் உள்ளடக்கத்தில் யதார்த்த வாழ்வியலை அதிகமாய் பேச முனைந்துள்ளமை புரிகின்றது. மக்களின் வாழ்வியல் நிலை, இழந்துவிட்ட இன்பங்கள், அறவழி செல்லத் தூண்டும் கருத்தாளம் மிக்க கவிகள், போரினால் சிதைந்துபோன மனித பண்பாட்டுக் கோலங்கள் பற்றி கவிஞருக்கிருந்த வலிகள், ஏக்கங்கள் தான் கவியின் ஏக்கத்தை கவிதைகளாய் நிரப்பிக் கொண்டிருக்கின்றன.
செம்மண் வீதிகளில்
நடந்து சென்ற பொழுதுகளை
ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்....
நாளாந்தம் ஏறியிறங்கிய
கொல்லைப்புற பாலைமரமும்
மரமுந்திரிகை மரமும்.... என, நகரும் "குடியிருப்புக் கல்லறையின் குரல்" என்ற கவிதையல் கவிஞர் தான் இழந்துவிட்ட தனதூரின் மகிழ்வளித்த நிமிடங்களை ஏக்கத்தோடு நினைவுகூருகிறார். தங்கள் வாழ்வியலை அடையாளம் செய்து கவிதையின் மூலம் காயங்களை ஆற்றிக் கொள்ள இவர் முனைகிறார்.
அடுத்து, "பரிபூரனின் மேல் பழி" என்னும் கவிதையில்
சாதியென்று சொன்னோம்
ஒன்றாக நின்று
எதையாவது சாதித்துக் காட்டினோமா?
இல்லை...
நாடு என்று சொன்னோம்
எல்லோரது நாவுக்கும் சுதந்திரம் கண்டோமா?
இல்லை... என்றவாறு, முரண்பாடுகளை தோற்றுவித்து அதனை மனித குலமே தீர்க்க முயலும் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.
நிலையில்லாதவைகளை நோக்கி நகரும் மனிதத்திற்கு நியத்தை உணர்த்தும் பாடுபொருள்கள் அதிகம் கவியின் ஏக்கத்தில் பேசப்படுகின்றன. இடைக்கிடை கவிஞரின் வயதைச் சுட்டுவதாய் காதல் கவிதைகளும் அரங்கேறி விட தவறவில்லை. எதிர்பார்ப்புக்களையும் பிரிவின் வழிகளையும் மாற்றம் பெறவேண்டிய விண்ணப்பங்களுமாய் ஆசிரியரின் மன வேண்டுதல்கள் இத்தொகுப்பு முழுவதும் பரவிக்கிடக்கின்றன.
படைப்பை வெறுமனே நுகர்ந்துவிட்டு மட்டும் நின்றுவிட முடியாதல்லவா? கவிஞரின் அடுத்த நகர்வுக்கு சில ஆலோசிப்புக்களை இந்த விமர்சனமும் வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்துள்ளது. இதனால் இத்தொகுப்பில் சில கவிதைகளின் நகர்த்தல்கள் வாசிக்கும் தருணங்களில் குழப்புகின்றன என்று சொல்லத் தோன்றுகிறது. கவிதையில் தான் சொல்ல வந்த விடயத்தை கொண்டு நகர்த்தும் பாணியை ஆசிரியர் கொஞ்சம் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. தலைப்புக்களின் அமைப்புக்கேற்பஉள்ளடங்கல்கள் பேசவேண்டும் என்பதும் மற்றுமொரு நிபந்தனையாகும்.
நம்மைக் கடந்துபோன எல்லோரும் பாடியவைகளை தவிர்த்து நமக்கென, இதுவரை இணங்க காட்டப்படாத நிலைமைகளை கண்டெடுத்து இலக்கியம் சமைக்கப்படுகின்றபோது அது காலத்தைக் கண்ணாடியாகக் காட்டும் பெறுமதியான படைப்பாக பேசப்படும் என்பதில் ஐயமில்லை.
இந்தவகையில், தன முயற்சியில் தளராதவராய் இரு கவிதைத் தொகுப்புக்களை நமக்குத் தந்திருக்கும் முல்லை திவ்யனின் முதலாவது படைப்புக்கும், இப்போதைய "கவியின் ஏக்கம்" என்ற இந்த இரண்டாவது நூலுக்கும் பல முன்னேற்றத் தழும்புகள் தென்படுகின்றமையால் இனிவரப்போகும் இவரது கைவண்ணங்கள் இன்னும் மெருகாகி முகிழ்ந்து நமது இலக்கியப் பரப்பில் பேசப்பட வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பாகும்.
இராமசாமி ரமேஷ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக