புதன், 20 ஜூன், 2012

படைப்பாளி தீபச் செல்வன் நேர்காணல்..


வன்னி மண்ணிலிருந்து குறிப்பிடத்தக்க படைப்பாளிகளே இப்போது, ஈழத்து இலக்கிய உலகில் தடம் பதித்துள்ளார்கள். பலர் எழுதினாலும் சிலரே, பேசப்படுகிறார்கள். இந்த வகையில், சத்தமில்லாமல் எட்டு நூல்களை பிரசவித்தவாறு இன்னுமின்னும் இலக்கியத்திற்கும் ஊடகத்திட்க்கும் தன்னுடைய பணிசெய்வதர்க்காய், தொடர்ந்தும் இந்தத் துறைகளைக் கற்று வருகிறார்.தற்பொழுது சென்னைப் பல்கைலகழத்தில் இதழியல் மற்றும் தொடர்பியலில் முதுகலை படித்து வரும் படைப்பாளி தீபச் செல்வன் விடுமுறையில் இலங்கை வந்திருந்தபோது, அவரை நேர்கண்டவை உங்களுக்காகவும்...


1 . உங்களைப் பற்றி?

நான் கிளிநொச்சியை பூர்வீகமாகக் கொண்டவன். சிறிய வயதிலிருந்தே யுத்தம் காரணமாக பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்திருக்கிறேன். குழந்தைப் பருவகால இடப்பெயர்சுவுகளும் மரணங்களும் போர்நடவடிக்கைகளும் கடுமையாக பாதித்திருக்கின்றன. குழந்தைப் பருவ பாதிப்பு என்பது மீண்டும் மீண்டும் என்னை ஈழக் குழந்தைகளின் உலகத்தை நோக்கி இழுத்துச் செல்லுகிறது. கிளிநொச்சி மத்திய கல்லூரியிலும் இடம்பெயர்ந்த காலத்தில் பல பள்ளிகளிலும் படித்திருக்கிறேன். யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு பட்டம் பெற்றேன். கடந்த மூன்றாண்டுகளாக சுயாதீனப் பத்திரிகையாளராக இயங்கி வருகிறேன். தற்பொழுது சென்னைப் பல்கைலக்கழத்தில் இதழியல் மற்றும் தொடர்பியலில் முதுகலை படித்து வருகிறேன். ஏங்களைப் பற்றிய அடையாளங்களை இழந்துகொண்டிருக்கும் காலம் இது. அதனால் என்னை ஆக்கிரமிக்கப்பட்ட ஈழதேசத்தின் பிரஜையாகவே அடையாளப்படுத்த விரும்புகிறேன். 

2 .நீங்கள் பல தளங்களில் படைப்புக்களை எழுதுகிறீர்கள். இந்த வகையில், உங்களுக்கு கவிதை மிகவும் பிடித்தமானது என்பதை பல தடவைகளில் நீங்களே சொல்லியிருக்கிறீர்கள். எனவே, கவிதை உங்களுக்கு பிடித்துப் போக விசேமான காரணங்கள் ஏதாவது?

இலக்கியத்தில் கவிதையை அரசி என்கிறோம். கவிதையின் வடிவமும் உள்ளடக்கமும் வெளிப்பாட்டுமுறையும் மிகவும் தாக்கத்தை உருவாக்கக்கூடியது. எனக்கு பிடித்த பல நாவல்களும் சிறுகதைகளும்கூட உள்ளன. ஏல்லா இலக்கிய வடிவங்களின் மூலமும் நாம் சொல்ல விரும்பும் செய்திகளை சொல்ல முடியும். கவிதைதான் எனக்கு பிடித்த இலக்கிய வடிவம் என்று நான் ஒரு பொழுதும் சொல்லவில்லையே. கவிதைத்தளத்தில் அதிகம் நெருக்கமாக இயங்குகிறேன். சிறிய வடிவத்தின் மூலம் பெரும் அழகியலை பெரும் அரசியலை பெரும் உள்ளடக்கத்தை மிக தாக்கம் தரும் முறையில் கவிதையின் சொல்லுவது எனக்கு அந்த வடிவத்தின்மீது ஈடுபாட்டை அதிகப்படுத்தியிருக்கலாம். தவிர பெருநிலத்தின் கதைகள் என்ற தொகுப்பில் உண்மைக்கதைகளும் எழுதியுள்ளேன். தற்பொழுது ஒரு நாவலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். 

3 .
 இலக்கியத்தில் நீங்கள் நுழைந்துகொள்ள வழி கோலியது? 

இயல்பிலேயே எனக்கு கவிதைமீது ஈடுபாடு இருந்தது. ஏழாம் எட்டாம் வகுப்பு படித்த காலத்திலேயே கவிதைகள் எழுதிக் கொண்டிருந்தேன். எனது பாடக் கொப்பிகளுடன் கவிதை எழுதும் ஒரு கொப்பியும் என்னிடம் இருந்தது. ஊயர்தரவகுப்பு படித்த காலத்தில் பாடசாலையால் கவிதைப் போட்டிகளுக்குச் செல்லுவேன். பின்னர் உயர்தரம் முடித்த பொழுதே எழுதும் கவிதைகளை பிரசுரிக்கும் ஈடுபாடு ஏற்பட்டது. ஏங்கள் நாட்டில் எங்கள் இனத்திற்கு எதிரான போரும் இன அழிப்பு நடவடிக்கைகளும் எனது எழுத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது என்று நினைக்கிறேன். இந்தப் பாதிப்புக்கள் கவிதையை வெறும் இலக்கிய வடிவமாக கையாள்வதைவிடவும் ஆயுதமாகக் கையாளத் தூண்டியது. 




4 .ஈழத்துப் படைப்புக்களில் இப்போதுள்ள இளையவர்களுக்கு யதார்த்தம் பற்றி சொல்லிக் கொடுக்கும்படியாக உங்களது எழுத்துக்கள் அமைந்திருக்கின்றன. இந்நிலையில், இப்போதுள்ளவர்கள் கவிதைகளில் சொற்களை அடுக்கி கற்பனைகளால் கவிதையை விற்பனை செய்வதாக ஒரு குறைபாடு உண்டு. இந்நிலை குறித்து உங்களது கருத்து? 

இலக்கியத்தின் வடிவம் தொடர்பில் பன்முகப்பட்ட விவாதங்கள் நடைபெறும் காலம் இது. குறிப்பாக வரையறைகளும் மரபுகளும் சார்ந்த விடயங்களிலிருந்து அப்பால்பட்டு இலக்கியவடிவ மாற்றங்கள் ஏற்படுகின்றன. எப்பொழுதுமே சமூகத்தை பாதிக்கத்தக்க நேர்த்தி மிகுந்த தன்மையே இலக்கியத்திற்கு அவசியமானது. நாம் சொற்களைப் பயன்படுத்தும் முறையிலேயே கவிதையின் சாத்தியம் தங்கியிருக்கிறது. கவிதையில் புதுக்கவிதை என்ற வடிவ மாற்றத்தின் பின்னர் கவிதை வடிவம் சார்ந்து பல கருத்துக்கள் நிலவுகின்றன. எது கவிதை என்று ஒவ்வொருவரிடமும் மாறுபட்ட கருத்து உண்டு. அது அவர்களின் அறிவு, அரசியல் சார்ந்து காணப்படுகிறது. கவிதைகள் மட்டுமல்ல எல்லா எழுத்துக்களும் தொகுப்புக்காளகவும் ஊடகங்களிலும் வரும் பொழுது வியாபாரப்பொருளாகிறது. எழுத்தும் அடிப்படையில் விற்பனைக்கானது. அது எந்தளவு வியாபாரத்தன்மை கொண்டது என்பது படைப்பை வியாபாரத்தை நோக்கி உருவாக்குவதில் தங்கியுள்ளது. உண்மையில் கவிதையில் உண்மையும் நேர்த்தியும் வடிவச் செழுமையும் எந்தளவு வருகிறது என்பதைப் பொறுத்தே கவிதை சாத்தியமாகிறது. 


4 .அநீதிகளுக்கு உட்படுத்தப்படுகின்ற மக்களின் குரலாய் உங்கள் படைப்புக்கள் வெளிவந்து சர்வதேச மட்டத்தில் புகழ் பெற்றுள்ளதை நாங்கள் நேரடியாகக் கண்டுள்ளோம். இந்த நிலையில், உங்களது இலக்கிய பணிக்கு ஊக்குவிக்கின்றவர்கள் என்று நீங்கள் கருதுகின்றவர்கள்? ஊடகங்கள்?

எழுத்துச் செயற்பாட்டை வெற்றியும் சாதனையுமாக என்னால் பார்க்க முடியவில்லை. நம்முடைய இனமும் நிலமும் இன்றுள்ள நிலையில் எழுத்தை நேர்மையாக பணியாகவே செய்ய வேண்டிருக்கிறது. புகழ் சம்பாதிப்பதற்கான வழியாக இல்லாமல் என்னுடைய குரல் உரத்துப் பேச வேண்டும் அநீதியை எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படைகள் மட்டுமே என்னிடமுள்ளன. சில ஊடகங்கள் என்னுடைய எழுத்துக்களை நிலமைகளைப் பொறுத்து கேட்டு வாங்கி பிரசுரிக்கின்றன. சில ஊடகங்களுக்கு நானே எழுதி அனுப்புவேன். நூன் ஒரு சுயாதீனப் பத்திரிகையாளராகவே இயங்குகிறேன். ஏன்னுடைய நோக்கம் என்னை வளர்ப்பதோ ஊடகங்களை வளர்ப்பதோ அல்ல. என்னுடைய இனத்தின் நிலiயை குறித்து எழுதுவதே. அதன் காரணமாக உலகின் பல்வேறு பாகங்களிலுருந்தும் ஊடக, எழுத்து நண்பர்களின் ஊக்குவிப்பும் ஒத்துழைப்பும் நிறையவே உண்டு.

5 .உங்களது பல படைப்புக்களை இந்திய பதிப்பகங்கள் நூலாக வெளியிட்டுள்ளன. உங்கள் படைப்புக்களுக்கு அவையே தக்க சான்றுகள். இந்தவகையில், இலங்கையில் ஒரு படைப்பை வெளியிட பல தடைகள் நிலவுகின்றன. இது நீங்களும் படைப்பாளி என்கிற ரீதியில் பல அனுபவத்தைத் தந்திருக்கும். அவை பற்றி?

இந்திய பதிப்பகங்களின் வாயிலாக புத்தகத்தை வெளியிடுவது பற்றி நாட்டில் பெரிய குற்றச்சாட்டே இருக்கிறது. இந்தியாவில் புத்தகங்களை வெளியிடும் பலரும் நாட்டில் வெளியிட முடியாத புத்தகங்களையே வெளியிடுகின்றனர். உயிராபத்துக்களும் அறிவிக்கப்படாத தடைகளும் நிலவுகின்றன. எழுவதிலிருந்து இவைகள் தொடங்குகின்றன. பதிப்பிப்பது, வெளியிடுவது, விநயோகிப்பது என்று எதையுமே செய்ய முடியாத நிலமையையே இங்கு காணப்படுகிறது. ஏன்னுடைய முதல் தொகுப்பான பதுங்குகுழியில் பிறந்த குழந்தை 2008ஆம் ஆண்டு மார்கழியில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. ஆன்றைய நெருக்கடி காலகட்டத்தில் எதைக் குறித்தும் பேச முடியாமல் போர் நடந்தது. தவிரவும் தமிழகத்துடன் ஒப்பிடுகையில் அங்கு மேற்கொள்ளப்படும் நேர்த்தியான அச்சுக்கலை இங்கு இல்லை. ஆதற்கான வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. ஏண்பதுகள் தொண்ணுறுகளில் இருந்த அச்சுக்கலையின் நேர்த்தி இப்பொழுது இல்லை. இன்றைய காலத்திற்கு அப்பால்பட்ட புத்தகங்களை இங்கு பதிப்பிக்க தடையில்லை என்பதும் நாம் கவனிக்க வேண்டியதே. எனினும் ஈழத்தில் பல புத்தகங்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஏன்னுடைய எழுத்துக்களை ஈழத்தில் பதிப்பிக்கும் காலம் திரும்பும் என்று நம்புகிறேன். அது எங்கள் வாழ்க்கை குறித்தும் அரசியல் குறித்தும் இலக்கியம் குறித்தும் நேர்மையுடன் பேசக்கூடியதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக