பல போராட்டங்களுக்கு மத்தியில் முகிழ்ந்து நிற்கவேண்டும் என்னும் நோக்கத்தோடு முளைவிட்டுள்ள கவிஞன் தொடர்பாக பேசாமல் இருக்க முடியவில்லை.
கவிதையின் ஆழம் தேடி என்று ஆசிரியர், கவிதைகள் தொடர்பான நம்மவர்களின் இப்போதைய பார்வை பற்றி கிலாகிக்கும் ஆசிரியர் பக்கம் இப்போதைய நிகழ்கால முரண்களைப் பேசுகின்றது. அடுத்து, சாதனை இளைஞன் என்னும் மகுடத்தில் கவிஞர் அஸ்மின் தன்னுடைய இலக்கிய வாழ்வு பற்றி பதிவு செய்துள்ள நேர்காணல், அந்த படைப்பாளியின் பாடுகளோடு அவரின் பல்வேறு பட்ட வாழ்க்கைக் குறிப்புக்களைப் பேசுகிறது.
தொடர்ந்து கவிதைகளின் ஊர்வலம் ஆரம்பமாகிறது. மடுல்சீமை சதாசிவம் வடித்துள்ள மீன்பாடும் தென்னாடு கவிதை ஆரம்பித்து வைக்க, " ஆண்களின் பார்வைக்கும் பெண்களின் மனதிற்க்கும்.. கவிதையை மட்டக்களப்பு தனுசனும், பெரிய கல்லாறு காண்டீபனின் நீ இன்னும் அழகாய்த் தான் இருக்கிறாய், கவிமணி நீலா பாலனின் நிழலாய் இரு, சாகாமம் குறிஞ்சி வாணனின் உள்ளத்திலேன்று நல்லதே தோன்றும், புது விதமாக முகம் தெரிய கவிஞர்கள் கிறுக்கிற மேசைக் கிறுக்கல்கள், வேதமூர்த்தி எழுதும் நிறைமகள் என்னும் கவி வழியான கண்ணகி தொடரும் , களுதாவளை நிலா தமிழன் எழுதிய பொக்கணம் கேட்ட குரங்குக்கு வாக்குப் போட்டால், மதனின் பதறித் துடிக்கும் இதயம், ஆரையூர்த் தாமரையின் மலைஎனவே நான் வருவேன், ராஜாமுகம்மது எழுதிய உலகம் அழிகிறது, கதிரவனின் அவருக்கும் தெரியாது, படித்ததில் பிடித்த கவிதையாக லோகேஸ்வரி கிருஷ்ணமூர்த்தி எழுதிய நீயும் நானும் என்னும் கவிதைகளும் இடம்பிடித்துள்ளன.
கவிஞன் கவிதைகளுக்கு மட்டும் சொந்தக் காரன் இல்லை என்பதை சுமந்து வந்துள்ள உள்ளீடுகள் சுட்டிக்காட்டி கட்டியங் கூறுகின்றன. கவிநயம் காண்போம் என்னும் தலைப்பில், ஒரு இலக்கியப் பத்தியும், ஹைக்கூ கோனார் என்று முருகேஷ் தமிழ் நாட்டிலிருந்து எழுதியுள்ள ஹைக்கூ கவிதைகள் பற்றிய பார்வையும், புதிய பறவை எழுதும் கவிதை பற்றிய சில அவதானிப்புக்கள் கவிதைக்காரர்களுக்கு பயன்தரும் பத்தியாக அமைந்துள்ளது.
கவிப் பிரியர்களை வளர்த்து விடும் நோக்கிலே, வலைப்பூங்கா பகுதியும் அழகாய் கவிஞனில் விரிந்துள்ளன.
நூலங்காடி என்னும் பகுதிக்குள் பல இலக்கிய இதழ்கள், சஞ்சிகைகள் தொடர்பான அறிமுகம் வெளியிடப்பட்டுள்ளதையும் குறிப்பிட வேண்டியுள்ளது.
கவிதைகளுக்கும் கவிதை படிப்பவர்களுக்கும் இலக்கிய வாதிகளுக்கும் மிகப் பயனுள்ள இதழாக கவிஞன் வந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தரமான வரவாக ஈழத்து இலக்கிய உலகில் அறிமுகமாகியுள்ள இந்த இதழ் , இன்னும் பல தளங்களில் பயனுள்ள இதழாக பரவ வேண்டுமென்று வாழ்த்துகின்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக