வெள்ளி, 22 ஜூன், 2012

முல்லைத்தீவில் பண்பாட்டைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் குருந்தூர் மலை. ஆராச்சியல்ல! அடையாளப்படுத்தல்!



...........................................................................................................................
பண்டார வன்னியன் மன்னனின் வீர புகழ் பரவிக் கிடக்கும் வன்னிமண்ணில் பல வரலாற்றுத் தடயங்களும், முன்னோர்களின் வாழ்வியல் கோலங்களைப் பேசும் வாழ்விடங்களும் இன்றும் அழிவின் விளிம்பிளிருந்தாலும் அடையாளமாய் காணப்படுகின்றன. இன்று நவீனத்துக்குள் நம்மவர்கள் நகர்ந்து கொண்டிருப்பதால், இனத்தோடு ஒட்டியிருந்த கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் என்பன புதைக்கப்பட்டு வருகின்றன. இன்னும் சில நாட்களிலேயே அவை இருந்த தடயமே இல்லாமல் மறைந்து போகக்கூடும். இத்தகைய நம்மினத்தின் அடையாளங்களை இனி வரப்போகும் சந்ததியும் தெரிந்து கொள்ள வேண்டுமெனும் நோக்கோடு, நாங்கள் பயணமாகத் தெரிவு செய்த இடம்தான் முல்லைத்தீவிலிருந்து வடக்காக பதினேழு கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்துள்ள குருந்தூர் மலை. 
இது தமிழ் மக்களுடைய பாரம்பரியங்களை கூறுகின்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கவொரு இடமாக உள்ளது. ஆரம்பத்தில் தமிழர்களின் ஆதி குடிகள் எனப்படுகின்ற இயக்கர்களும், நாகர்களும் வாழ்த்துள்ள இடம். அவர்களின் அடையாளச் சின்னமாய் இன்றும் குருந்தூர்மலை அடிவாரத்தில் நாக தெய்வ வழிபாடு காணப்படுகின்றது. 
இப்பயணத்தில் என்னோடு இன்னும் மூன்று தோழர்கள் எனக்குதவியாக கரம் கோர்த்துக் கொள்ள, குமுளமுனை என்னும் கிராமத்தைக் கடந்து ஆறுமுகத்தாங்குளம் என்ற சிறுகிராமத்தையும் கடந்தோம். பொட்டல் காடுகளும், பசுமை படர்ந்த சிறு பற்றைகளுமாக  அந்தத் தேசமே நம்மவர்கள் வாழ்வியலின் வரலாற்றை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. இரு கிராமங்களைக் கடந்து வந்ததும் சேறு சகதிகள் நிறைந்த ஒற்றையடி மணல் பாதையொன்று குருந்தூர்மலைக்கு விரைவதை  எங்களோடு வந்திருந்த குமுளமுணைப் பிரதேசவாசியொருவர் கண்ணுற்றுக் கூற, எமது பயணம் அந்த வழி தொடங்கிற்று. 
















ஊரிலிருந்து சுமார் ஆறு மைல்கள் தூரத்தில் நாம் தேடிப்போன குருந்தூர் மலையின் அடிவாரத்தை அடைந்ததும் தான் எமக்குள் எதோ ஒருவித திருப்தி புகுந்து கொண்டது. மக்கள் யாரும் அங்கில்லை. அவர்களின் விவசாய நிலங்கள் வெளிகளை வெறுமையைச் சுமந்திருந்தன. ஒருசில வயல்கள் மட்டும் ஆங்காங்கே பச்சை ஆடைகளாய் நெற் கதிர்களை  நீட்டிக் கொண்டிருந்தன. உச்சியில் சூரியன் சுட்டுக் கொண்டிருந்தான். பொருட்படுத்தாத பயணம். எங்கள் இலக்கு மலையின் உச்சியிலுள்ள பண்டாரவன்னியன் மறைந்திருந்தான் என்று சொல்லப்படுகின்ற மலைக் கோட்டையில் சிதிலங்களைக் காண வேண்டுமென்பதே! கொழுவி இழுக்கும் முட் புதர்கள் எங்களைப் பதம் பார்க்க, ஒற்றையடிப் பாதையாக இருந்த இடம் சுருங்கி, ஒரு தடம் பதிக்குமளவாய் மாறிப் போனது. 
மெது மெதுவாய் நகரத் தொடங்கினோம் நால்வரும்! பாதை உயரத் தொடங்கியது. காடுகள் அடர்த்தியாகின. இல்லை குலைகள் நிறைந்து கிடக்க, எங்களுக்கு வழிகாட்டியாய் வந்தவர் முன்னே நடந்தார். அனுபவம் அவருக்குள் நிறையவே இருந்திருக்க வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதை சொல்லிக் கொண்டே வந்தார். 
அண்மைக் காலங்களில் யாருமே அப்பகுதிக்குள் பிரவேசித்திருக்கவில்லை என்பதைப் பார்க்கும் போதே புரிந்து கொண்டோம். மயான அமைதியில் காடே உறைந்திருக்கிறது. நாங்களும் உச்சியைத் தேடி இயலாமைகளை தூரப் போட்டுவிட்டு நடந்து கொண்டேயிருக்கிறோம். புலிகளுக்கும் இராணுவத்துக்கும் போர் மூண்டிருந்த காலப்பகுதியில் கூட, இந்தப் பிரதேசம் அவ்வளவாக மக்களால் பயன்படுத்தப் பட்டிருக்கவில்லை. ஏனெனில், இது போருக்குள்ளும் இரு தரப்பும் பயன்படுத்த அஞ்சிய சூனியப் பிரதேசமாய் இருந்துள்ளது. மக்களும் மலையடிவாரத்தை அண்டிய பகுதிகளில் வாழ்ந்திருந்தாலும், இப்பகுதிக்குள் அநாவசியமாக நுழைய முற் படவில்லை. வேர்களும் கொடி செடிகளும் நிறைந்திருக்கும் பாதையால், நகர்ந்த எங்கள் பயணம் மலை உச்சியைத் தொட்டு விட்டது. கடல் மட்டத்திருந்து 150 மீற்றர்கள் உயரத்தில் நின்று கொண்டிருந்தோம். கட்டடச் சிதைவுகளும், யாரோ வாழ்ந்துள்ளார்கள் என்று சொல்லுமளவுக்கு இடிபாட்டு துகள்களும் அவ்விடத்தில் நிறைந்து கிடந்தன. நீல நீளமான தூண்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தமது இருப்பை சொல்வதை நிமிர்ந்து கொண்டிருந்தன. அவ்விடங்களை புகைப்படங்கலாக்கிக் கொண்டதோடு, மேற்கொண்டும் ஏதாவது தடயங்கள் அகப்படுகின்றதா என்று தேடினோம். நாம் இருப்பதற்கு பின்புற மலைப் பக்கமாய்  ஒரு சுரங்கம் அமைந்திருப்பதாகவும் , அதற்க்குச் செல்வது பாதுகாப்பை உறுதி செய்ய முடியாத விடயமென்றும் எம்மோடு வந்திருந்தவர் கூற, எமக்கும் ஆர்வம் தா. இருந்தாலும் பாதுகாப்பில்லை என தெரிந்துகொண்டு நுழைவது ஆபத்தை அமைந்துவிடலாம். ஏனெனில், அது பெரிய விலங்குகள் சீவிக்கும் காடாக இருந்தது. அத்தோடு, தோழி ஒருத்தியும் எங்களோடு வந்திருந்தாள். கிடைத்த தகவல்களைக் குறித்துக் கொண்டு மீண்டும், எங்களது பயணம் மலையிலிருந்து இறங்கத் தொடங்கியது. 

அடுத்து இப்பிரதேசங்கள் தொடர்பான தகவல்களைத் தரக் கூடியவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற நோக்கோடு குமுளமுனைக் கிராமத்துக்குள் நுழைந்தோம். இயற்கை கொட்டிக் கிடக்கும் கிராமம் போருக்குப் பின்னர், கொஞ்சம் மாறிப் போயிருந்தது. பலரிடம் குருந்தூர்மலை தொடர்பான தகவல்கள், அங்கு வாழ்ந்த மூதாதையர்கள், வழிபாட்டு முறைகள், கலை கலாச்சாரப் பின்னணிகள் என்பவற்றைக் கேட்டோம். சிலருக்கு சில விடயங்கள் தெரிந்திருந்தன. சொன்னார்கள்; ஆனாலும், எங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும் விதமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. விசாரித்துக் கொண்டே சென்றபோது, ஒருவரை நீட்டியே பலரும் கைகாட்டினார்கள். அவரிடம் நிறையத் தகவல்கள் உங்களுக்குக் கிடைக்குமென கூறி, குறித்த நபரின் வீட்டு அடையாளத்தையும் தந்தார்கள். நுழைந்து விட்டோம் அங்கும். 
முதுமையை சுமந்துகொண்டிருந்தாலும் முகத்திலொரு உற்சாகம், தெளிவு! வரவேற்றார், எங்களை அறிமுகப் படுத்திக்கொண்டு நமக்கான உரையாடலை ஆரம்பித்தோம்.
அவர் தான் எமது ஆய்வுக்குரிய வகையில் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். 
கனகர் கந்தசாமி - குமுளமுனை.
என்னுடைய தந்தையார் காலத்துக்கு முனமிருந்தே தமிழ் மக்கள் வால்துவந்த பகுதிகள் தான் நீங்கள் சொல்லும் குருந்தூர் மலையும், அதனை அண்டிய ஆறுமுகத்தாங்குளம் மற்றும் தண்ணிமுறிப்பு ஆகிய இடங்களும்! அங்கு நமது ஆதி குடிகளான இயக்கர்களும் நாகர்களும் தான் ஆரம்ப காலங்களில் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்க்கான சான்றுகளும் உள்ளன. நாக தெய்வ வழிபாடு, ஐயனார் தெய்வம் என்பன இன்றும் இப்பகுதிக்குள் நுழையும் மக்களால் காணக்கூடியதாகவும் வழிபடத் தக்கதாகவும் உள்ளது. அத்தோடு, அவர்களின் பின்னர் என் தாத்தா காலத்தில் எமது முந்தைய தலைமுறையினர் வாழ்ந்தது எனக்குத் தெரியும். அப்போதுகளில் நமது பெண்கள் சட்டையில்லாமல் தான் சேலை அணிவார்கள். அது தான் அப்போதைய பாரம்பரிய பழக்க வழக்கமாக இருந்தது. 
பாசிகளிலும் மணிகளிலும் தான் அவர்களின் ஆபரணங்கள் காணப்படும். கூத்துக்கள், பல்லு என்பவற்றை அப்போதைய மக்கள் தமது திருவிழாக்களில் மற்றும் மதச் சடங்குகளில் பாடுவதும் வழக்கமாகவிருந்துள்ளது. நாக வழிபாடு, வைரவர், பிள்ளையார் போன்ற தெய்வங்கள் வழிபடப்பட்டன. விவசாயம், சேனைப் பயிர்ச் செய்கைகள் தான் அவர்களது பிரதான ஜீவனோபாயத் தொழிலாகவும், தேன் எடுப்பது , வேட்டையாடுதல் என்பன காலம் பார்த்துச் செய்யும் உப தொழிலாகவும் இருந்துள்ளன. ஏன்? நம்மவர்களும் இப்போது அப்படியான முறையில் தான் தமது வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து வருவதை காணலாம். கொக்குத்தொடுவாய், கொக்கிளாய், முறிப்பு போன்ற பிரதேச மக்கள் இப்போது அந்த முறையில் தான் வாழ்கிறார்கள். இதனை இப்போதுகூட காண முடிகிறது. 
இந்நிலை சில இடங்களில் தென்பட்டாலும் ,எமது பிரதேசத்தைப் பொறுத்தவரையில் படிப்படியாக எங்களது தலைமுறையோடு நம் மூதாதையர்கள் வாழ்ந்து வந்து கொண்டிருந்த கலாசாரம் பண்பாட்டு நெறிமுறைகள் அழிந்து விட்டன என்றே சொல்ல வேண்டியுள்ளது. ஏனெனில், எம்மவர்கள் பலர் அடுத்தவரின் போக்கிலே வாழ தலைப்பட்டு விட்டார்கள். பண்பாடு, மரபுரிமை  என்பதெல்லாம் இப்போது இல்லை. 
இவ்வாறு அந்த காலப்பகுதி மக்கள் வாழ்ந்த முறைகளை விளக்கியவரிடம், 
அவர்களின் தசாப்தம் நிறைவடைந்து உங்கள் தலைமுறை தலையெடுக்கத் தொடங்கியவுடன், அந்தப் பகுதியில் முரண்பாடுகள் ஏற்பட்டதாகவும் சொல்கிறார்களே  அது தொடர்பாக சொல்லுங்கள் என்றோம்? 
ஆமாம்! பரம்பரைகளாய் அப்பகுதிகளில் வாழ்ந்து வந்த எங்களுக்கு அரசினால் குருந்தூர்மலையை அண்டிய பகுதிகளில் ஒரு குடும்பத்துக்கு ஒரு ஏக்கர்  என்ற விதமாய் காணிகள் வழங்கப்பட்டன. நாங்களும் அக்காணிகளை எமது கட்டுப் பாட்டுக்குள் வைத்திருந்தோம். பின்னர் சில காலத்தின் பின்பு, மணலாறு, அந்தப் பக்கங்களில் உள்ள டென் பார்ம், டொலர் பார்ம், போன்ற இடங்களிலுள்ள பௌத்த பிக்குகள் சிலர் வந்து குருந்தூர்மலை எமக்கு உரித்தான நிலம். அதனை நான் பௌத்த பூமியாக்கப் போகிறோம் என்று கட்டாயப்படுத்தி, மலையின் இடையில் சிலை வைத்து தாமும் தங்கி வழிபடத் தொடங்கினர். நாளாந்தம் இதனால் பிரச்சினைகள் கிளம்பத் தொடங்கின. எங்களின் விவசாயப்பகுதியாகவிருந்த அந்நிலங்களில் தொழில் செய்யும் எம்மவர்களை அவர்கள் சீண்டத் தொடங்கினார்கள். ஒவ்வொரு நாளும் இவர்களோடு போராட முடியாத நாங்கல் அரசாங்க அதிபர் பணிமனையில் முறையிட்டோம். அங்கு அரசு, இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளியிடும் நோக்கோடு, யாருக்கும்  அப்பகுதி உரியதல்ல என்று தமது கவனத்துக்குள் உள்ள பகுதியாக எல்லையிட்டனர். 
இன்று வரை அப்பகுதிக்குள் மக்கள் கூட மீள் குடியேற்றப் படவில்லை. காணிகளைக் கொளுத்தி துப்புரவு செய்வதர்க்குக் கூட அரச அனுமதி பெற வேண்டும். அனுமதியின்றி யாரும் காணிகள் குடியேற முடியாது. இப்போதும் அப்பகுதிகளுக்குப் போகும் நாங்கள் ஏக்கத்தோடு எமது காணிகளை பார்ப்பதோடு முடிந்து விடுகிறது என்றார். 
இவ்வாறு தமது பாரம்பரியங்களையும், பண்பாட்டுக் கலை கலாசாரத்தையும் இழந்து போன வலி அவர் குரலில் அடிக்கடி தென்பட்டதையும் அவதானிக்க முடிந்தது. இத்தகைய குருன்தூர்மலை, இன்னும் வெளிவராத பல உண்மைகளையும் தன்வசம் தரித்துள்ளது என்கிறார்கள் கிராம வாசிகள். 
அக்காலத்து அரசர்களின் ராணிகள் குளிப்பதற்கு கட்டப்பட்ட தடாகங்களும், சுரங்க வழிப் பாதைகளும், மலையின் மறு பக்கத்தில் இருப்பதாகவும் பாதுகாப்பு இல்லையென்பதால், தாம் அதனை மேலும் அலசிப் பார்க்கவில்லைஎனவும் அப்பிரதேசத்தைச் சேர்ந்த துரைசிங்கம் தெரிவித்தார். 

உண்மைதான்! தமிழினம் முதன்மைக் குடிகளாய் வாழ்ந்த கலை கலாசாரம் மற்றும் பண்பாட்டு விழுமியங்கள் நம்மவர்களால் மறக்கப்பட்டும் மதிக்கப்படாமலும் போய்க்கொண்டிருக்கின்றன. அத்தோடு, இருக்கும் தனித்துவங்களும் அடையாளங்களும் அளிக்கப்படுகின்றன. இதனைக் கவனத்திலெடுத்து அது தொடர்பான ஒரு அடுத்த தலைமுறைக்கான அவனப் படுத்தும் செயற்பாட்டை நம்மவர்கள் முன்னெடுப்பதாகவும் தெரியவில்லை. இத்தனைக்கும் எம்மவர்கள்தான் பொறுப்பாளிகள். நமது மரபுரிமைகளையும் பாரம்பரியத்தையும் நாமே சுமக்க வேண்டியவர்கள் என்பதையும் அதனைப் பாதுக்காப்பதும் நமது கடமை என்பதையும் ஒவ்வொரு தமிழ் உள்ளமும் மறத்தலாகாது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக