வெள்ளி, 1 ஜூன், 2012

பாரதிக்கு முதன்மை வழங்கும் கொழும்பு தமிழ்ச் சங்கம் போல் வேறெங்குமில்லை. -இந்தியக் கவிஞர் அறிவுநம்பி-



மக்கள் விடுதலைக் கவிஞன் பாரதிக்கும் அவன் படைப்புகளுக்கும் முன்னுரிமை அளித்து, அவனை முதன்மைப் படுத்தி  அவனுடைய படைப்புக்களை பொக்கிஷங்களாக  பேணிப் பாதுகாக்கும் கொழும்பு தமிழ்ச் சங்கத்தைப் போல, உலகில் வேறெங்கும் ஒரு அமைப்பையோ அல்லது நிறுவனங்களையோ நான் பார்த்ததில்லை என்று, இந்தியாவின் புதுவை பல்கலைக்கழக பேராசிரியரும் கவிஞருமான  முனைவர் அ.அறிவுநம்பி தெரிவித்துள்ளார். 
கொழும்பு தமிழ்ச் சங்கமும்,  இந்தியாவின் சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து நடாத்திய  பாரதியார் விழா நேற்று காலை கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் காலை ஒன்பது மணிக்கு ஆரம்பமாகியது. அவ்விழாவில் பங்கேற்று கருத்துரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
                  எட்டயபுரத்துக் கவிஞன் பாரதிக்கு விழாவெடுக்கும் இந்நிகழ்வில் முனைவர் அறிவுநம்பி மேலும் தனது உரையில், 
"பாரதி வாழ்ந்த காலங்களில் சங்ககாலப் பாடல்கல்களின் எடுகோள்களான காதல், வீரம் போன்றனவற்றைத் தான் நம்முடைய மூத்த கவிகள் பாடிக்கொண்டிருந்தார்கள். ஆனால், மக்களின் பாடுகளையும் மனித அவலங்களையும் வாழ்க்கைக் கோலங்களையும் எடுத்துரைக்கும் பாடல்களை பாரதிதான் முதலில் கண்டுகொண்டு தன்னுடைய படைப்புக்களில் வெளிப்படுத்தினான். அன்னியரின் ஆதிக்கத்தினும் அமிழ்ந்திருந்த இந்திய நாடும் மக்களும் அனுபவித்த கொடிய துன்பங்களில் இருந்தும், அறியாமைக்குல்லிருந்தும் அவர்களை வெளியில் எடுப்பதற்கு பாரதி தன்னுடைய பாடல்களின் மூலம் முயற்சி செய்து வெற்றி கண்டான். அப்படிப் பட்ட பாரதிக்கு இந்தியர்கள் கொடுத்த முக்கியத்தை விட, இலங்கையில் கொழும்பு தமிழ்ச் சங்கம் கொடுத்திருக்கும் முக்கியத்துவத்தை இங்கு வந்தவுடனேயே நாங்கள் கண்டு பூரித்துப் போனோம். தமிழ்ச் சங்கத்தின் அலுவலகத்தினுள் நுழைந்தவுடனேயே தென்படுவது பாரதியின் இரு கரங்கள் கூப்பிய படம் தான். அப்போது எங்கள் தத்துவ புரட்சிக் கவிஞன் பாரதிக்கு இங்கு கொடுத்துள்ள முக்கியத்துவம் எங்கள் அனைவருக்கும் உள்ளத்தை களிப்பூட்டும் நிகழ்வாக அமைந்தது. 
அத்தோடு எழுபது ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு பணிசெய்து வரும் தமிழ்ச் சங்கத்தின் பணியினையும் அது பெற்றிருக்கும் முக்கியத்துவத்தையும் பார்த்து வியப்படைந்தோம். இதனை இப்போது நல்வழிப் படுத்தி கொண்டுனகர்த்தும் இப்போதைய கொழும்பு தமிழ்ச் சங்கத் தலைவர் மு. கதிர்காமநாதன் அவர்களுக்கு எமதி சென்னை பாரதியார் சங்கத்தின் சார்பிலும், இந்திய மக்கள் சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவருடைய உரையில் தெரிவித்திருந்தார். 
            மேலும் இந்த பாரதி விழாவில், இந்தியாவின் சென்னையிலிருந்து வருகை தந்திருந்த கவிஞர்களினால் பார்போற்றும் பாரதி என்னும் தலைப்பில் கவிதாஞ்சலியும், பேராசிரியர் முனைவர் இரா.சேதுவின் தலைமையில் புதியன பாடிய புலவன் எனும் தலைப்பில் கருத்தரங்கமும், இந்திய பெண் கவிங்கர்களால் பாரதியின் கவிதைகளில் உள்ளம் கவர்ந்த ஓர் அடி என்ற மகளீர் முற்றம் நிகழ்வும், இரு எழுத்தாளர்களின் நூல் வெளியீடும் அத்தோடு பாரதியின் புகழ் பரப்புனர்களை கௌரவிக்கும் முகமாக பாரதி விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ் வளர்க்கும் நம்மவர்களோடு இந்தியாவைச் சேர்ந்த பல பேராசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் தமிழ்த் துறை ஆர்வலர்களோடு மக்களும் ஊடகத் துறையினரும் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக