வியாழன், 19 ஏப்ரல், 2012

நிரந்தரத்தை வேண்டும் நீள்பெருமூச்சு..!!

பட்டுப் போயிருந்த மரங்கள்
பசுந் தளிர்களை பிரசவித்திருந்தன...
வெட்டை வெளிகளாய்
விதவைக்கோலம் பூண்டிருந்த எனதூர்
கொட்டில் குடிசைகள் என
கொஞ்சம் நிறைந்திருந்தது...
இயல்பை எங்கோ தொலைத்த
என்தேசத்து உறவுகளின் வாழ்தல்களில்
இப்போதெல்லாம் ஏதோவொரு
இருப்பைப் பற்றிப் பிடிப்பதற்கான
அறிகுறிகளின் ஆரம்பம்...
வெறுமை நிறைந்திருந்த வீதிகள்
எதோ உருப்படியாக்கப்படுகின்றது...
மின்மினிகளால்  தடம்பார்த்து நடந்த
என்தேசம் இன்றுகளில்
மின்சாரக் கம்பங்களைச் சுமந்திருந்தது...
வறுமைக் களவாணி
ஊரிலிருந்து விரட்டப்பட்டிருந்தான்...
கேள்விக்குறியாகிப் போயிருந்தவர்களின்
உயிர்களுக்கான உறுதிப்படுத்தல்கள்
சிறைக்கம்பிகளின் பின்னாலிருந்து
அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது...
ஊருக்குப் பலதாய் உருவாக்கப்பட்டிருந்த
உடல்மேயும் சாவடிகள்
உருவமிழந்து ஒன்று இரண்டாகியிருந்தன...
அப்பாடா!!
இப்போதுதான் ஆனந்தமான பெருமூச்சு...
நெரிக்கப்பட்ட குரல்வளைகள் 
விடுவிக்கப்பட்டதான சுதந்திர உணர்வு...
உள்ளக்கிடக்கைக்குள் விண்ணப்பமொன்று...
''இறைவா!! இப்படியே தொடர வேண்டும்...''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக