திங்கள், 30 ஏப்ரல், 2012

இட நெருக்கடியால் பூரண தபால்சேவை வழங்க முடியாத அளம்பில் உப தபால்கந்தோர்

முல்லைத்தீவில் கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட அளம்பில் பிரதேசத்திலுள்ள தபால்நிலைய சேவைகள் சரிவர நடைபெறவில்லையெனவும் பொறுப்புனர்வில்லாமல்  அங்கு பணியாற்றும் ஊழியர்கள் செயற்படுவதாகவும்  அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். 

இந்தப் பிரச்சினை தொடர்பாக மேலும் மக்கள் மேலும் தெரிவித்தவை வருமாறு ,
 அளம்பில் உப தபால் கந்தோரில்,   தபால்  சேவைகள் சீராக நடைபெறுவதில்லை. அங்கு எமக்கு கடிதங்கள் வந்தாலும் உரியவர்களிடம் கொண்டுவந்து தரப்படுவதில்லை. காண்கின்ற யாரிடமாவது தபால்காரர்கள் கடிதங்களை கொடுத்துவிட்டு சென்றுவிடுகிறார்கள். இதனால், எமக்குரிய கடிதங்கள் மற்றும் இதர தபாலில் வரும் பொதிகள் என்பன கொடுக்கப்படுகின்றவர்களின் கவனயீனத்தால் சரியாக எம்மிடம் வந்து சேர்வதில்லை. . அவ்வாறு பல நாட்களின் பின்பு வந்து சேர்ந்தாலும், கடிதங்கள் பிரிக்கப்பட்டு கிழிந்த நிலையில் தான் கிடைக்கும். எத்தனையோ முக்கியமான கடிதங்கள் எங்களுக்கு இவ்வாறுதான் கிடைத்தும் சில கிடைக்காமலே போயுமுள்ளன. நாங்களும் பலதடவைகள் இது தொடர்பாக அளம்பில் தபாலதிபரிடம் முறையிட்டும் தெரியப் படுத்தியும் இன்னும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இனி நாங்கள் அரசாங்க அதிபரிடம் மனுவொன்றைக் கொடுக்கவே உத்தேசித்துள்ளோம். இவ்வாறு மக்கள் குறிப்பிட்ட நிலையில்,
       இவ்விடயம் தொடர்பாக அளம்பில் தபாலதிபரை தொடர்புகொண்டு கேட்டோம்.
மக்களால் தெரிவிக்கப் படுகின்ற இந்த விடயம் சம்மந்தமாக,  குறித்த மக்கள் என்னிடம் தெரிவித்த பின்பு  நானும் எங்களோடு சேவையில் ஈடுபடுகின்ற தபால் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினேன். இப்போது இவ்வாறான பிரச்சினைகள் வரவில்லை. எத்தனையோ குறைபாடுகளோடு தான் அளம்பில் தபால் கந்தோர் இயங்கி வருகிறது. தனியார் ஒருவரின் வீட்டின் ஒரு அறையில்தான் இப்போது எமது தபால் நிலையம் இயங்கி வருகிறது. அத்தோடு, எமக்கு போதியளவு வசதிகள் இன்னும் செய்து தரப்படவில்லை. நிரந்தரக் கட்டிடத்துக்கான இடவசதி கூட இதுவரை எம்மால் பலதடவைகள் பரிந்துரைக்கப் படும் கிடைப்பதாகவோ அல்லது ஒதுக்கித் தருவதாகவோ தெரியவில்லை. இப்போது இராணுவத்தினர் முகாம் அமைத்துள்ள அளம்பில் சந்தியிலுள்ள காணியில் தான் இடம் ஒதுக்கித் தருவதாக கூறப்பட்டாலும் இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. நான் ந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு தபாலதிபரோடு தொடர்ந்து பேசி வருகிறேன். விரைவில் இடம் கிடைக்கும்.
எம்மக்கள் இன்னும் ஒன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். இட நெருக்கடி மற்றும் வலப் பற்றாக்குரைகளோடு இயங்கும் எமது தபால் நிலையத்தி இப்போது மூன்று ஊழியர்கள்தான் பணியாற்றுகிறார்கள். சில தவறுகள் நிகழ்ந்தாலும், அதனையே சுட்டிக் காட்டி குழப்பத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். எமது பிரதேசத்தினை வளர்ப்பதற்கு நாங்கள் கண்டிப்பாய் ஆவன செய்வோம். இனிமேலும் இப்படியான தவறுகள் மக்களுக்கு நிகழாது என்பதை உறுதியாய் சொல்லிக் கொள்கிறேன். ஏதாவது உங்களுக்கு வந்த கடிதங்களில் பிரச்சினை நடந்தால் எனக்கு உடனடியாக தெரியப் படுத்துங்கள் என்றார்.
வலக் குறைபாட்டோடும் இட நெருக்கடியோடும் இத் தபாலகம் இயங்கினாலும் மக்களுக்குரிய சேவைகளை சரிவர செய்ய வேண்டிய கடப்பாடு ஒவ்வொரு அரசாங்க நிலையங்களுக்கும் உண்டு என்பதோடு, சில விடயங்களில்  மக்களும் புரிந்துணர்வோடு செயட்படவேண்டியவர்கள் என்பதை மறுக்க  முடியாது.
இனியேனும் குறித்த அளம்பில் உப தபால் நிலையம் நிரந்தர கட்டிடத்தோடு வசதி வாய்ப்புக்களைப் பெற்று சீரான  சேவையை மக்களுக்கு வழங்குமா? 


அலம்பில் ஊடகன்
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக