இலங்கை ஊடகவியல் கல்லூரியின் சிரேஸ்ட விரிவுரையாளர் நடராஜா மணிவாணனின் திரைக்கதை,இயக்கத்தில் ஆனந்த,சுபோதா ஆகியோரை கதைக்குரிய நாயகர்களாகக் கொண்டு கேம் ஓவர் எனும் குறும்படம் இம்மாதம் 5 ம் திகதி ஊடகவியல் கல்லூரி கேட்போர் கூடத்தில் வெளியிடப்பட்டது.
ஒரு பெண் நினைத்தால் எதுவும் செய்வாள்... அது எந்தத் துறை என்றாலும் முடியும் என்பதை தத்ரூபமாகக் காட்டும் குறும்படம் தான் இந்த கேம் ஓவர் !
தன்னுடைய குழுவிலிருந்து வழிதவறிய பெண் போராளி ஒருத்தி நடுக்காட்டில் தனித்துப் போகிறாள். போதாததுக்கு கை கால்களில் காயம் வேறு! எவ்வாறு இவள் தப்பிக்கப் போகிறாள் இந்த நடுக்காட்டிலிருந்து என படத்தைப் பார்க்கும் விழிகள் ஆச்சர்யமாய் விரிகின்றன. ஏனெனில், அக்காடு பயங்கரமான ஆளரவமற்ற அடர்ந்த வனம். அதுவும் எதிரிகள் உலாவும் காடு. உடல் சோர்ந்து போக புல்தரைக்குள் தன்னுடலை மறைத்து பற்றைகளோடு பற்றையாய் பதுங்கிக் கிடக்கிறாள். அந்நேரம் .... எதிரணி வீரனொருவன் வந்து இவளைக் கண்டு விடுகிறான். இனிமேல் அவள் பாடு அதோ கதிதான் என பார்ப்பவர்கள் கணக்குப் போட, அங்கு நடப்பதோ வேறு! அவள் அவனிடம் சிக்கிநாலா அல்லது அவன் என்ன செய்தான்... அவள் முடுவு என்ன என எதிர்பாரா திருப்பங்களோடு புதிர்போடும் குறுங் காவியம் தான் கேம் ஓவர்!
இயற்கை கொஞ்சும் அடர்ந்த காட்டுப் பகுதியில் குளுமை பறந்து கிடக்கும் காட்சியமைப்பு மிகவும் அருமை. அத்தோடு குறைந்த வளத்தை பயன்படுத்தினாலும் நல்ல கதையும் அதற்க்கு ஏற்ப நகரும் இசையும் படத்திற்கு வலுச் சேர்க்கின்றன.
இயக்குனர் நடராஜா மணிவாணனுக்கு இது மூன்றாவது படைப்பு அவதாரம். இந்த குறும்படத்தினைப் பார்க்கின்றபோது அவருடைய முயற்சியும் ஆளுமையும் நன்றாகவே தெரிகிறது. எனவே, இலங்கை சினிமா உலகில் ஒரு நல்ல இயக்குன நமக்குக் கிடைத்திருக்கிறார் என்பதோடு இனியாவது இலங்கை தமிழ் சினிமா சிறந்த இடத்தை அடையும் என்று நம்பிக்கை கூற முடிகின்றது.
இயக்கம்- நடராஜா மணிவாணன்
நடிப்பு - ஆனந்த,சுபோதா
உதவி - ராகுல், சரிக், துஷான்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக